‘மத கஜ ராஜா’ படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அப்பட நாயகன் விஷாலின் தோற்றத்தைக் கண்டு திரையுலகத்தினரும் ரசிகர்களும் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகினர்.
விஷால் உடல் மெலிந்து காணப்பட்டார்.
நிகழ்ச்சியில் பேசியபோது, அவரது கைகள் நடுங்கின. தொடர்ந்து பேச முடியாமல், அடிக்கடி நிறுத்தி நிறுத்தி வார்த்தைகளை உச்சரிக்க முடியாமல் தவித்தார்.
இதனால் விஷாலுக்கு என்னவாயிற்று என்பது தெரியாமல் ரசிகர்கள் கவலை அடைந்தனர்.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய திவ்யதர்ஷினி, விஷால் வைரஸ் காய்ச்சலால் அவதிப்படுவதாகவும் மருத்துவர்கள் அவரை ஓய்வெடுக்கும்படி அறிவுறுத்தி உள்ளதாகவும் தெரிவித்தார்.
எனினும், தனது படம் 12 ஆண்டுகளுக்குப் பிறகு பல சிக்கல்களைக் கடந்து வெளியாவதால் உடல்நிலையைப் பொருட்படுத்தாமல் அவர் நிகழ்ச்சிக்கு வந்தார்.
மேலும், படத்தின் இயக்குநர் சுந்தர்.சி மீதும் அவருக்கு மிகுந்த மரியாதை உள்ளது என்று விஷால் தரப்பில் கூறப்படுகிறது.
உடல்நிலை தேறியதும் உடனடியாகத் தனது ரசிகர்களைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார் விஷால் என்றும் ஒரு தகவல் தெரிவிக்கிறது.