சமந்தாவைப் போல் ஒரு தயாரிப்பாளர் அமைவது அரிது என்கிறார் இயக்குநர் நந்தினி தேவி.
இந்தியாவில் சமந்தாவைப் போல் வேறு யாரும் இப்படிச் செய்ததில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
அப்படியென்ன செய்தார் சமந்தா?
கடந்த 2023ஆம் ஆண்டு திரலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார் சமந்தா.
அந்நிறுவனம் ‘பங்காரம்’ என்ற படத்தைத் தயாரித்தது. அப்படத்தில் ஆண், பெண் என்று பாராமல் அனைவருக்கும் சமமான ஊதியம் வழங்கப்பட்டது.
இந்நிலையில், பெங்களூருவில் நடந்த அனைத்துலக திரைப்பட திருவிழாவில் ‘சினிமாவில் பெண்கள்’ என்ற தலைப்பில் நடந்த விவாதத்தில் கலந்துகொண்டு பேசியபோது இத்தகவலைக் குறிப்பிட்டார் நந்தினி தேவி.
“என்னுடைய அடுத்த படத்தில் சமந்தாவுடன் கைகோக்கிறேன். இந்தியாவிலேயே ஆண், பெண் வித்தியாசம் இல்லாத சமமான சம்பளம் வழங்கிய ஒரே தயாரிப்பாளர் சமந்தாவாகத்தான் இருப்பார்.
“தங்களது படத்திற்கு நல்ல தயாரிப்பாளர்கள் கிடைக்க ஆண்களைவிட பெண்கள் இரண்டு மடங்கு தங்களை நிரூபிக்க வேண்டும்.
“ஆண் இயக்குநர் நான்கு ஆண்டுகளில் சாதிப்பதை ஒரு பெண் இயக்குநர் சாதிக்க எட்டு ஆண்டுகள் ஆகும். இதில் ஊதிய பாகுபாடும் அடங்கும்,” என்றார் நந்தினி தேவி.