அற்புதமான உறவுகளை விவரிக்கும் படைப்பு: பாண்டிராஜ்

3 mins read
33a673f5-a206-410f-b68b-45d1d6729b9e
நித்யா மேனன். - படம்: ஊடகம்
multi-img1 of 2

பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ளது ‘தலைவன் தலைவி’ படம்.

இம்முறை விஜய் சேதுபதி, நித்யா மேனன் இருவரையும் அவர் இயக்கியுள்ளார்.

“இதுவரை நிறைய குடும்ப உறவுகளைப் பற்றிப் பேசியிருப்போம். எல்லா உறவுகளுக்கும் ஓர் எல்லை இருக்கிறது.

அண்ணன், தம்பிகள்கூட எல்லாவற்றையும் வெளிப்படையாகப் பேசிக்கொள்ள முடியாது. அப்பாவுக்கும் பிள்ளைக்கும்கூட அப்படித்தான்.

“எந்த எல்லையும் இல்லாமல் எதையும் பேசிக்கொள்ளவும் உணரவும் வாழக்கூடிய உறவும் உரிமையும் கணவன் மனைவிக்குத்தான் இருக்கிறது.

“குடும்பத்தில் நடக்கும் அனைத்தையும் எல்லாரிடமும் பேச முடியாது. ஆனால் கணவன், மனைவியால் பகிர்ந்துகொள்ள முடியும்,” என்கிறார் பாண்டிராஜ்.

இத்தகைய புரிதல் இல்லாததால்தான் தற்போது குடும்பநல நீதிமன்றங்கள் விவாகரத்து வழக்குகளால் நிரம்பிவிட்டதாகக் குறிப்பிடுபவர், எங்கே, யாரைப் பார்த்தாலும் இவர்கள் பிரிந்துவிட்டார்கள், அவர்கள் பிரிந்துவிட்டார்கள் என்று பேசுவதாகத் தெரிவித்துள்ளார்.

“ஏன் இவ்வாறு நடக்கிறது என்கிற கேள்வி எழுகிறது அல்லவா? இந்தக் கேள்வி, இதற்கான விடையும்தான் ‘தலைவன் தலைவி’ படம்.

“ஏன் புரிதல்கள் இல்லாமல் அற்புதமான உறவுகள் கலைகின்றன என்பதை இந்தக் கதை நன்றாக அலசும்.

“எப்போதும் என் படங்கள் உணர்வுபூர்வமாகவும் எதார்த்தமாகவும் இருக்க வேண்டும் என விரும்புவேன்.

“தொட்டால் உணரக்கூடிய உணர்வுகள் என் படைப்புகளில் இடம்பெற்றால் அதைவிடக் கொடுப்பினை வேறு இல்லை.

“இது எளிமையான ஒரு கதைதான். ஒரு காதல் கதை, குடும்பப் படம் போன்றுதான் வெளியே தோற்றம் அளிக்கும்.

“ஒரு கணவன், மனைவிக்கு இடையே புதைந்துள்ள அன்பை உணரவைக்கும் படம் என்பதும் சரிதான்,” என்கிறார் பாண்டிராஜ்.

இந்தக் கதையை எழுதும்போதே நாயகன், நாயகி இருவருக்கும் ஒரே மாதிரியான முக்கியத்துவம் தர வேண்டும் என முடிவு செய்துவிட்டாராம்.

விஜய் சேதுபதி இதில் ஏற்றுள்ள கதாபாத்திரம் எல்லா நாயகர்களாலும் நடித்துவிட முடியாத ஒன்று என்கிறார்.

படம் பார்க்கும் போதுதான் இந்த உண்மை ரசிகர்களுக்கு நன்கு புரியும் என்றும் அடிதடி, நகைச்சுவை, அழவைக்கும் உணர்வுபூர்வமான காட்சிகள் என அனைத்து வகையிலும் சேதுபதியின் நடிப்பு அசத்தலாக இருக்கும் என்றும் உத்தரவாதம் அளிக்கிறார் பாண்டிராஜ்.

“நல்ல மகனாக, கணவனாக, குடும்ப உறவுகளுக்குள்ளே நிறைந்துள்ள மனத்துக்குச் சொந்தக்காரனாகவும் ஒருவன் இருக்க வேண்டும்.

இந்தப் பொறுப்பைத்தான் சேதுபதி படத்தில் சுமந்துள்ளார்.

“நகைச்சுவை செய்யும்போதே அழவைக்கும் வித்தை எல்லாருக்கும் கைகூடிவிடாது.

“விஜய் சேதுபதிக்கு மட்டுமே இப்படிப்பட்ட மாயங்கள் எல்லாம் சாத்தியம்,” என்று வரிக்கு வரி சேதுபதிக்குப் பாராட்டுப் பத்திரம் வாசிக்கிறார் பாண்டிராஜ்.

விஜய் சேதுபதிக்கு இணையான வேடத்தில் நடித்துள்ளார் நித்யா மேனன். அவரை ஒப்பந்தம் செய்வதற்கு முன், அவருக்கான ஊதியம் தொடர்பாக சில சிக்கல்கள் எழுந்தனவாம்.

ஆனால், நித்யாதான் படத்தின் நாயகி என்பதை பாண்டிராஜ் உறுதியாக இருந்துள்ளார்.

“கதை எழுதும்போதே இவர்கள் இருவரும்தான் நாயகன், நாயகி என்பது முடிவாகிவிட்டது. பல கதைகளை எழுதி இருக்கிறேன்.

“ஆனால், ஒரு கதையை எழுதும்போதே மிகச் சிறப்பாக இருப்பதாக மனநிறைவு தந்தது இந்தக் கதைதான்.

“சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. ராணுவ நிறுவனம் எனப் பெயர் பெற்றது இந்நிறுவனம். ஒரு பக்கம் விஜய் சேதுபதி, இன்னொரு பக்கம் நித்யா மேனன் என, ஆகச்சிறந்த கலைஞர்களுடன் சத்யஜோதி நிறுவனத்தையும் உடன் சேர்த்துக்கொண்டு இந்தப் படைப்பை உருவாக்கி இருக்கிறேன் என்பதில் பெரு மகிழ்ச்சி,” என்கிறார் பாண்டிராஜ்.

குறிப்புச் சொற்கள்