நடிகை சமீரா ரெட்டி தமிழ், தெலுங்கு உட்பட ஏராளமான தென்னிந்திய மொழிப்படங்களில் நடித்துள்ளார். இந்தி, தெலுங்கு, வங்காள மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்து வந்த சமீரா ரெட்டி இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் சூர்யா, திவ்யா ஸ்பந்தனா, சிம்ரன் நடித்த ‘வாரணம் ஆயிரம்’ படத்தின் மூலம் 2008ல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். முதல் படத்திலேயே ஏகப்பட்ட தமிழ் ரசிகர்களின் இதயங்களில் இடம்பிடித்தவர் இவர். 2014ம் ஆண்டு தொழிலதிபர் அக்ஷய் வார்தே என்பவரைத் திருமணம் செய்து கொண்ட பிறகு சொந்த வாழ்க்கையில் கடுமையான போராட்டங்களை அவர் சந்தித்தித்தார். அத்தம்பதிக்கு தற்போது இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.
சமீரா ரெட்டி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு தனது பிரசவ கால அனுபவங்கள் குறித்தும் தான் சந்தித்த நெருக்கடிகள் குறித்தும் பகிர்ந்துகொண்டார்.
“நான் இரண்டாவது குழந்தைக்கு தாய்மை அடைந்தபோது 105 கிலோவாக என் உடல் எடை அதிகரித்தது. இதனால் பிரசவத்திற்குப் பிறகு ஓராண்டு காலம் வீட்டை விட்டு வெளியில் செல்லவில்லை,” எனக் கூறினார்.
இதனால், தான் மன அழுத்தத்திற்கு ஆளானதாகவும் அவர் தெரிவித்தார்.
“எனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்தான் என்னை மன அழுத்தத்திலிருந்து வெளியில் கொண்டுவந்தார். நான் மன அழுத்தத்தில் இருந்தபோது எனது கணவர்தான் என் மூத்த மகனுக்கு உடைகள் மாற்றுவது, சாப்பாடு கொடுப்பது போன்ற வேலையில் ஈடுபட்டார்,” என்றார் சமீரா.
“இவ்விவகாரத்தில் பெண்களுக்கு அதிக விழிப்புணர்வு தேவை. நான் நடிப்பை கைவிட்டபோது என்னிடம் ஏன் கைவிடுகிறீர்கள் அல்லது உங்களுக்கு வேறு ஏதேனும் பிரச்சினை உள்ளதா என என்னிடம் யாரும் கேட்கவில்லை. இருப்பினும், அத்துறை அப்படிப்பட்டது என்பதால் நானும் அதனைக் கண்டுகொள்ளவில்லை,” என சமீரா சொன்னார்.
கடைசியாக சமீரா ரெட்டி ‘வரதநாயகா’ என்ற படத்தில் நடித்தார். இப்படம் 2013ஆம் ஆண்டு வெளியானது. இதில், கிச்சா சுதீப் கதாநாயகனாக நடித்திருந்தார்.

