தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மக்கள் திலகத்துக்கு அழியாப் புகழ் சேர்த்த நாடோடி மன்னன்

2 mins read
62ab95cf-d61e-4bcc-b57a-88d667a7e78b
‘நாடோடி மன்னன்’ படத்தில் வாள் சண்டை போடும் மக்கள் திலகம், எம். என். நம்பியார். - படம்: ஊடகம்

தமிழ்த் திரையுலகில் மக்கள் திலகம் என்ற அழியாப் புகழுடன் திகழ்ந்த எம்ஜிஆர் என்ற எம்.ஜி. ராமச்சந்திரனுக்கு அரசியல், திரையுலக வாழ்க்கைக்குத் திருப்புமுனையாக  அமைந்த படம் ‘நாடோடி மன்னன்’.

எப்பொழுதுமே தனக்கென ஒரு தனி பாணியை வகுத்துக்கொள்ளும் பழக்கமுள்ள எம்ஜிஆர் இந்தப் படத்திலும் தனக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், படத்தை இயக்கும் பொறுப்பை தானே ஏற்றுக்கொண்டார். ஆனால், எதற்கும் அனுபவம் வாய்ந்த பட இயக்குநர் ஒருவரின் ஆலோசனை, வழிகாட்டுதல் இருக்க வேண்டுமென்று முதிர்ந்த இயக்குநரான கே சுப்பிரமணியம் என்பவரை இயக்க மேற்பார்வையாளராக நியமித்துக்கொண்டார். 

‘நாடோடி மன்னன்’ திரைப்படம் ஆங்கில சாகச நாவலான ஆண்டனி ஹோப் என்பவரின் ‘பிரசனர் ஆஃப் ஸென்டா’ என்ற கதையின் தழுவல். அதில் வருவது போலவே, முடிசூடக் காத்திருக்கும் மன்னன் தீய எண்ணம் கொண்டவர்களால் அதற்கு முதல்நாள் கடத்தப்படுகிறான். அவனைப் போலவே இருக்கும் சமூகச் சீர்திருத்தவாதியாக இரட்டை வேடத்தில் வரும் எம்ஜிஆர் மன்னனாக முடிசூடி மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்துகிறார்.

படத்தில் இரு கதாநாயகிகள், ஒருவர் பழம்பெரும் நடிகையும், பாடகர், திரைப்படத் தயாரிப்பாளர் எனப் பல திறன்களைக் கொண்டவருமான பானுமதி. மற்றவர் புதுமுகமாக அறிமுகமான கன்னடத்துக் கிளி என அனைவராலும் பின்னாளில் அழைக்கப்பட்ட நடிகை சரோஜாதேவி. 

நடிகை பானுமதிக்கும் எம்ஜிஆருக்கும் தொடக்கத்திலிருந்தே ஒத்துவரவில்லை. கதையைக் கேட்டவுடனேயே பானுமதி, “அந்த ‘பிரசனர் ஆஃப் ஸென்டா’வை நான் படமாக எடுக்கவுள்ளேன்,” என்றார். அதற்கு எம்ஜிஆரோ, “நீங்கள் வேறு கதையைப் படமாக எடுங்கள், நான் படமெடுக்கத் தொடங்கிவிட்டேன். அந்தக் கதையை நான் தமிழ்த் திரையுலகுக்கு ஏற்றவாறு சில மாற்றங்களைச் செய்துள்ளேன்,” என்று கூறிவிட்டார்.

அது மட்டுமன்று, எம்ஜிஆரைத் திரையுலகில் அன்று யாரும் பெயர் சொல்லி அழைக்காத நிலையில், பானுமதி மட்டும் மிஸ்டர் எம்ஜிஆர் என்று தலையில் தட்டினாற்போல் கூப்பிடுவார். 

இது இப்படியிருக்க, எடுத்த காட்சிகளையே மேற்பார்வை இயக்குநரான சுப்பிரமணியம் மீண்டும் எடுக்கத் தொடங்க, பானுமதி கோபத்தில் பொங்கி எழுந்துவிட்டார். அதைத் தொடர்ந்து, “மிஸ்டர் எம்ஜிஆர்! இப்படி எடுத்த காட்சிகளையே மீண்டும் மீண்டும் எடுத்தால் என்னால் நடிக்க முடியாது,” என்று கூறினார்.

அதற்கும் ஒப்புக்கொண்ட எம்ஜிஆர், பாதிப் படத்தில் பானுமதி உயிர்த் தியாகம் செய்வதுபோல் கதையை மாற்றி, இரண்டாம் பாதியில் சரோஜாதேவியை அறிமுகம் செய்து வண்ணப் படமாக எடுத்தார். அதன்படி, படத்தின் நாயகியாக புதுமுகம், படம் வண்ணத்தில் என அதன் இரண்டாம் பாதி மிகச் சிறப்பாக அமைந்திருக்கும். 

படத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல் ஒன்று எஸ்.எம்.சுப்பையா நாயுடுவின் இசையில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதுதான்,  ‘தூங்காதே தம்பி தூங்காதே’ என்ற பாடல்.

இன்றளவும் அந்தப் பாடல் பட்டித்தொட்டி எங்கும் ஒலிக்கிறது. அதுபோல் கவிஞர் சுரதாவின் ‘கண்ணில் வந்து மின்னல்போல் காணுதே இன்பக் காவியக் கலையே ஓவியமே...’ என்ற பாடல் டிஎம்எஸ், ஜிக்கி இருகுரலில் மனத்தைக் கவரும் மற்றொரு பாடல். அதைப் பாடல் என்று சொல்வதைவிட காதல் காவியம் என்று கூறலாம்.

படமும் எம்ஜிஆருக்குப் பெரிய வெற்றிப் படமாக அமைந்து, அவரது திரையுலக வாழ்க்கையில் புதுத் தோற்றத்தையும் அரசியல் வாழ்க்கைக்கு புது ஏற்றத்தையும் தந்தது. 

குறிப்புச் சொற்கள்