நீண்ட காலத்திற்கு முன்னர் புன்னகை அரசி எனப் புகழப்பட்ட கே.ஆர். விஜயாவுக்கு அம்மன் வேடம் மிகவும் பொருந்திப்போனது. அந்த இடத்தை தற்போது ‘மூக்குத்தி அம்மன்’ பட வரிசை மூலம் நிரப்பியிருப்பவர் நயன்தாரா.
2020 தீபாவளிக்கு வெளியாகி வெற்றி பெற்ற ‘மூக்குத்தி அம்மன்’ முதல் பாகத்தை ஆர்.ஜே.பாலாஜி - என்.ஜே. சரவணன் இணைந்து இயக்கியிருந்தனர்.
அதில், போலிச் சாமியாரை விரட்டியடிக்கும் குலதெய்வமாக நடித்திருந்தார் நயன்தாரா.
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, மூக்குத்தி அம்மனின் இரண்டாம் பாகமும் தீபாவளிக்கு வெளியீடு காண்கிறது.
நவம்பர் 6ஆம் தேதி வெளியாக இருக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2 - மஹாசக்தி’ படத்தை சுந்தர்.சி இயக்கியிருக்கிறார்.
வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்து இருக்கிறார். ஏராளமான கிராஃபிக்ஸ் காட்சிகளுடன் உருவாகியுள்ள இப்படம், தணிக்கைக் குழுவின் நடைமுறைகளை நிறைவுசெய்துள்ள இப்படம் ‘யுஏ 16+’ சான்றிதழ் பெற்றுள்ளது.
இந்த நிலையில், படத்தின் இயக்குநர் சுந்தர்.சி, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்து நடிகை நயன்தாரா நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை தமது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
“படப்பிடிப்பு முடிந்த பிறகும் சில படங்கள் நீண்ட நாள்களுக்கு நம் மனத்திற்கு நெருக்கமாகத் தங்கிவிடும். ‘மூக்குத்தி அம்மன் 2’ எனக்கு அப்படியான ஒரு படம்,” என நயன்தாரா அதில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
“எனது இயக்குநர் சுந்தர்.சிக்கு, உங்களின் தொலைநோக்குப் பார்வை, அன்பு, பேரார்வம் அனைத்தையும் இப்படத்துக்குள் கொண்டுவந்ததற்கு நன்றி. உங்களுடன் பணியாற்றியது உற்சாகமாக இருந்தது. ஒவ்வொரு தருணத்திலும் காட்டிய அக்கறைக்கும் இந்தப் பயணத்தை மறக்க முடியாததாக மாற்றியதற்கும் மிக்க நன்றி. இந்தப் படத்துக்காக நான் உங்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன்.
“இந்தப் படத்தின்மீது நம்பிக்கை வைத்து எங்களுக்கு ஆதரவு அளித்ததற்குத் தயாரிப்பாளர் ஐசரி கணேஷுக்கு நன்றி. ஒரு கதையை முழுமனத்துடன் நம்பி ஆதரிக்கும் ஒரு தயாரிப்பாளர் கிடைத்தது இந்தப் பயணத்தை மிகவும் அர்த்தமுள்ளதாக்குகிறது.
“இந்தப் பயணத்தை உங்களுடன் பகிர்ந்துகொண்டது இனிமையானது. இனி வரவிருக்கும் அனைத்திலும் வெற்றி பெற வாழ்த்துகள்.
“குஷ்பு, சிநேகா உங்கள் இருவருடனும் இந்தப் படத்தில் ஒரு பகுதியாக நடித்ததை நான் என்றென்றும் போற்றி பாதுகாப்பேன். உங்கள் இருவருக்கும் என் அன்பும் அரவணைப்பும் சேரட்டும்.
“அற்புதமான நடிகர்கள், படக்குழுவினருடன் ஒன்றாகப் பணியாற்றியதைப் பெரும்பாக்கியமாக கருதுகிறேன். ஓம் சக்தி,” என்று நயன்தாரா தெரிவித்துள்ளார்.
