தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திருக்குறளின் முப்பாலை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் ‘திருக்குறள்’ திரைப்படம்

2 mins read
b0d3674c-01a1-44f9-a5d5-72a7e0c3d9d0
‘திருக்குறள்’ படத்தில் ஒரு காட்சி. - படம்: ஊடகம்

பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றைப் படமாகத் தயாரித்த நிறுவனம், இப்போது திருக்குறளின் முப்பாலை அடிப்படையாகக் கொண்டு ‘திருக்குறள்’ என்ற படத்தைத் தயாரித்துள்ளது.

இதில், வள்ளுவராக கலைச்சோழன், வாசுகியாக தனலட்சுமி, பாண்டிய மன்னனாக ஓ.ஏ.கே.சுந்தர், நக்கீரராக இயக்குநர் சுப்ரமணிய சிவா, புலவர் பெருந்தலைச்சாத்தனாக கொட்டாச்சி ஆகியோருடன் மேலும் பலர் நடித்துள்ளனர்.

வரும் 27ஆம் தேதி படம் வெளியாகிறது.

அண்மையில், இப்படக்குழுவினர் இசை வெளியீட்டு விழாவைச் சிறப்பாக நடத்தினர்.

இந்நிகழ்வில் பேசிய இயக்குநர் பாலகிருஷ்ணன், இப்படம் உருவான கதையை மிகச் சுருக்கமாகக் கூறினார்.

“திருக்குறளுக்கு திரை வடிவம் கொடுக்க வேண்டும் என எனக்கு நெருக்கமான ஒருவர் வேண்டுகோள் விடுத்தார். 1,330 குறளை எவ்வாறு திரைப்படமாக்க முடியும் என யோசித்தபோது, காலஞ்சென்ற முன்னாள் முதல்வர் கருணாநிதி திருக்குறளை வைத்து எழுதிய நூல் நினைவுக்கு வந்தது.

அதிலிருந்து எதையெல்லாம் காட்சிப்படுத்த முடியுமோ, அவற்றை மட்டுமே எடுத்துக்கொண்டு இப்படத்தை உருவாக்கினோம்.

படத்தை தயாரிக்க அதிகம் சிரமப்படவில்லை. சில விஷயங்கள் வாழ்க்கையின் போக்கில் தானாக நிகழும் என்பார்கள். அப்படித்தான் இப்படத்தைத் தயாரிக்க பணம் வந்து சேர்ந்தது.

“படத்துக்காக ஓர் அரங்கம் அமைத்து, காட்சிகளைப் படமாக்கத் திட்டமிட்டோம். ஆனால், அன்று முழுவதும் மழை கொட்டித் தீர்த்துவிட்டது.

“வாசுகியாக நடித்துள்ள பெண்ணுக்கு இதுதான் முதல் படம். அருமையாக நடித்திருக்கிறார். அவர் வாழ்க்கையில் முன்னுக்கு வந்து, இந்தத் துறையில் மேலும் சாதிக்க வேண்டும்,” என்றார் இயக்குநர் பாலகிருஷ்ணன்.

இதற்கு இளையராஜா இசையமைத்தால் பொருத்தமாக இருக்கும் என்று எண்ணிய இயக்குநர் ஏ.பாலகிருஷ்ணன், அவரை அணுகியிருக்கிறார். மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டு இரண்டு பாடல்களை எழுதியும் கொடுத்துவிட்டாராம் ராஜா.

குறிப்புச் சொற்கள்