தீபாவளியன்று ‘அமரன்’, ‘பிரதர்’, ‘பிளடி பெக்கர்’, ‘லக்கி பாஸ்கர்’, ‘ஜீப்ரா’, ‘பஹீரா’, ‘கா’ ஆகிய படங்கள் திரை காண இருக்கின்றன.
தீபாவளி, பொங்கல், சுதந்திரதினம், ஆயுத பூஜை போன்ற முக்கிய தினங்களை குறிவைத்து பெரும்பாலான முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும். ஆனால், இந்த ஆண்டு ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இருந்தபோதிலும், இந்த ஆண்டு தீபாவளிக்கு பல படங்கள் திரைக்கு வர உள்ளன. அவற்றில் முதல் இடத்தில் இருப்பது அமரன்.
‘அமரன்’
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்துள்ள திரைப்படம் ‘அமரன்’. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ‘முகுந்தன்’ என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். ‘அமரன்’ திரைப்படம் வருகிற 31ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது.
‘பிரதர்’
இயக்குநர் எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி, பிரியங்கா மோகன் நடித்துள்ள படம் ‘பிரதர்’. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படம் அக்கா - தம்பி உறவை அடிப்படையாக கொண்டு குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தின் முன்னோட்டக் காட்சி, பாடல்கள் அண்மையில் வெளியாகி பரவலாகப் பகிரப்பட்டு வந்தது. இப் படம் அக்டோபர் 31ஆம் தேதி வெளியாக உள்ளது.
‘பிளடி பெக்கர்’
இயக்குநர் நெல்சன் தயாரிப்பில் அறிமுக இயக்குநரான சிவபாலன் முத்துகுமார் இயக்கத்தில் கவின் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘பிளடி பெக்கர்’. இப்படத்தில் கவினுடன் ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகாதா, அக்சயா ஹரிஹரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
‘லக்கி பாஸ்கர்’
தொடர்புடைய செய்திகள்
வெங்கி அட்லுரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘லக்கி பாஸ்கர்’. இதில் துல்கர் சல்மானுடன் இணைந்து மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளார். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் முன்னோட்டக் காட்சி அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றது.
‘ஜீப்ரா’
நடிகை பிரியா பவானி, ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் ‘ஜீப்ரா’ படத்தில் நடித்து இருக்கிறார். இப்படத்தில், சத்யராஜ், சுனில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நிதிக்குற்றத்தைப் பற்றி பேசும் பான் இந்தியா படமாக உருவாக்கப்பட்டுள்ளது.
‘பஹீரா’
‘கேஜிஎப்’, ‘காந்தாரா’, ‘சலார்’ ஆகிய படங்களை தயாரித்துள்ள ‘ஹொம்பாலே பிலிம்ஸ்’ தயாரிப்பில் ‘பஹீரா’ படம் உருவாகியுள்ளது. இயக்குநர் டாக்டர் சூரி இயக்கியுள்ள இப்படத்தில் கன்னட நடிகர் ஸ்ரீமுரளி நாயகனாக நடித்துள்ளார். கன்னடத்தில் ‘கண்டி’, ‘உக்ரம்’ ஆகிய படங்களின் மூலம் மிகவும் கவனம் பெற்ற நடிகராக அறியப்படுகிறார் ஸ்ரீமுரளி.
‘கா’
சுதீப் மற்றும் சுஜித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கா’. இப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இதில் கிரண் அப்பாவரம் கதாநாயகனாகவும் தன்வி ராம் மற்றும் நயன் சரிகா என இரண்டு கதாநாயகிகள் நடித்துள்ளனர்.
இவற்றைத் தவிர இந்தியில் ரோஹித் ஷெட்டி இயக்கியுள்ள ‘சிங்கம் அகைன்’, கார்த்திக் ஆர்யன் நடித்துள்ள ‘பூல் புல்லையா 2’ ஆகிய படங்கள் தீபாவளிக்கு வெளியாகவுள்ளன
இந்தப் படங்கள் அனைத்தும் இம்மாதம் 31ஆம் தேதி தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றன. தீபாவளிக்கு மறுநாளும் விடுமுறை என்பதால் தொடர்ந்து நான்கு நாள்களில் வசூலை அள்ளக் காத்திருக்கின்றனர் திரையரங்கு உரிமையாளர்கள்
இவற்றில் எந்தப் படத்திற்கு அதிக திரையரங்குகள் கிடைக்கும் என்பதில் போட்டி நிலவி வருகிறது.
‘அமரன்’ படத்தினை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது. அந்நிறுவனமோ ‘வேட்டையன்’ வெளியாகும் போதே முன்னணி திரையரங்குகளுக்கு ‘அமரன்’ படத்துடன் ஒப்பந்தம் செய்துவிட்டது. அதனால் தீபாவளி படங்களுள் அதிக திரையரங்குகள் ‘அமரன்’ படத்துக்கு கிடைக்கக்கூடும்.
அதைப்போல ‘பிரதர்’ படத்தின் தமிழக உரிமையினை கருணாமூர்த்தி கைப்பற்றி அந்தப் படத்தையும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் மூலமே வெளியிடுகிறார். ஆகையால் அந்நிறுவனம் ‘அமரன்’ மற்றும் ‘பிரதர்’ ஆகிய இரண்டு படங்களுக்கும் திரையரங்குகள் ஒப்பந்தம் செய்து வருகிறது.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அமரன்’ படத்தின் முன்னோட்டக் காட்சி வெள்ளிக்கிழமை மாலை வெளியானது. 24 மணி நேரத்திற்குள்ளாக அந்த முன்னோட்டக் காட்சி 48 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது. ‘பிளடி பெக்கர்’ படத்தின் முன்னோட்டக் காட்சி ஐந்து நாள் பார்வைகளை இந்தப் படம் 24 மணி நேரத்திற்குள் முறியடித்துள்ளது. இதன் மூலம் முன்னோட்டக் காட்சியைப் பொறுத்தவரையில் சிவகார்த்திகேயன் முந்தி வருகிறார்.
இதற்கிடையில் திரையரங்கு உரிமையாளர்கள் எந்தப் படத்திற்கு அதிக காட்சிகள் ஒதுக்குவது என்று குழம்பிப் போய் இருக்கிறார்கள். முதல் நாள் மட்டுமே இந்தக் குழப்பம் நிலவும். அடுத்த நாள் மக்களிடம் எந்தப் படம் வரவேற்பினை பெறுகிறதோ, அந்தப் படத்தை மாற்றிவிடுவார்கள் என்பதே உண்மை.