தமிழ்த் திரையுலகில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், பீம்சிங் இணைபிரியா ஜோடி.
இவர்கள் இணைந்து இயக்கி, நடித்த படங்களான ‘பாகப்பிரிவினை’, ‘பாவ மன்னிப்பு’, ‘பாசமலர்’, ‘பார் மகளே பார்’, ‘பச்சை விளக்கு’ போன்ற படங்கள் வெறும் படங்கள் மட்டுமல்ல, அவை யாவும் காவியங்கள்.
அவற்றில் குடும்பப் பிணைப்பு இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே பாசம், தியாகம் என எல்லாப் பண்புநெறிகளும் நிறைந்திருக்கும்.
அதில் அண்ணன்- தங்கை பாசத்தை மிக உயர்ந்த நிலையில் காட்டும் படம்தான் ‘பாசமலர்’. நடிகர் திலகம் சிவாஜி, நடிகையர் திலகம் சாவித்திரி இருவரும் அண்ணன் - தங்கை பாசப் பிணைப்பை வெளிப்படுத்தியிருக்கும் விதம் இன்றளவும் பேசப்படுகிறது.
அந்தப் படத்தில் அண்ணன் - தங்கையாக நடித்த பின் சிவாஜியையும் சாவித்திரியையும் காதல் ஜோடிகளாகப் பார்ப்பது சரியாக இருக்காது என்ற காரணத்தினாலோ என்னவோ அதன்பின் அவர்கள், ‘திருவிளையாடல் படத்தில் சிவபெருமான், பார்வதியாக வந்ததைத் தவிர, காதல் ஜோடிகளாக யாராலும் பார்த்திருக்க முடியாது (நவராத்திரி படத்தில்கூட காதல் ஜோடிகள் என்றாலும், காதல் காட்சிகள் இடம்பெற்றதில்லை).
பாசமலர் படத்தில் வரும் கண்ணதாசனின் பாடல்கள் அனைத்தும் காலத்தால் அழியாதவை, ஈடு இணையற்றவை. அது மட்டுமல்ல, படத்தில் தன் தங்கை சாவித்திரியை ஜெமினி கணேசனுக்கு மணமுடித்து வைக்க முடிவெடுக்கும் சிவாஜி, ஜெமினியிடம் ‘என் கண்ணையே உன்னிடம் ஒப்படைக்கிறேன், அதில் நான் என்றும் ஆனந்தக் கண்ணீரை மட்டும்தான் பார்க்க வேண்டும்,’ என்று கூறுவது இன்றும்கூட பலர் நினைவுகூரும் ஒன்று.
அந்தப் படத்தில் வரும் அண்ணன் தன் தங்கையின் திருமணத்தை கற்பனை செய்து பார்க்கிறார். தன் தங்கைக்காக, அவரது இரவுத் தூக்கத்திற்குமுன் பால் கொண்டுவரும் நடிகர் திலகம், அவர் அயர்ந்து உறங்குவதைப் பார்க்கிறார்.
தங்கையின் திருமணத்தை எப்படி நடத்தப் போகிறோம் என்று கனவு காண்கிறார்:
“மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள் அண்ணன் வாழ வைப்பான் என்று அமைதி கொண்டாள் கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள் அண்ணன் கற்பனைத் தேரினில் பறந்து சென்றான்...
மாமணி மாளிகை, மாதர்கள் புன்னகை மங்கல மேடையின் பொன்வண்ணம் கண்டான் மாவிலைத் தோரணம் ஆடிடக் கண்டான் மணமகன் வந்து நின்று மாலை சூடக் கண்டான் கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள் அண்ணன் கற்பனைத் தேரினில் பறந்து சென்றான்...”
தங்கையின் அமைதியான உறக்கத்துக்கு காரணம் உண்டு. அண்ணன் தனக்கு எப்படியும் நல்ல வாழ்வை அமைத்துத் தந்துவிடுவான் என்ற நிம்மதியில் அவள் சலனமற்று, மலர்ந்த முகத்துடன் உறங்குவதாகக் கவிஞர் வரிகளை வடித்துள்ளார். அந்த அண்ணனோ, தங்கையின் திருமண மண்டபம் எப்படி இருக்க வேண்டும் என்பதில் தொடங்கி மணமகன் வந்து மாலை சூடுவதுவரை கற்பனை காண்கிறான்.
இதற்கு அடுத்து வரும் பாடல் வரிகள் இன்னும் சிறப்பானவை. “ஆசையின் பாதையில் ஓடிய பெண் மயில் அன்புடன் கால்களில் பணிந்திடக் கண்டான் வாழிய கண்மணி வாழிய என்றான் வான்மழை போல் கண்கள் நீரில் ஆடக் கண்டான் கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள் அண்ணன் கற்பனைத் தேரினில் பறந்து சென்றான்”.
ஆம், மன மகிழ்ச்சியில் துள்ளித் திரிந்த பெண் அண்ணன் அமைத்துத் தந்த வாழ்க்கைக்கு நன்றி தெரிவித்து அன்புடன் அவன் கால்களில் வணங்குகிறாள். அவளை வாழ்த்தும் அண்ணனுக்கு ஆனந்தக் கண்ணீர் மழைபோல் பெருகுகிறது.
இதற்குப் பின் தங்கை அவள் பெற்றெடுக்கும் குழந்தையை அண்ணனுக்குக் காண்பிப்பதாக அவன் கனவு அமைகிறது. அந்தக் குழந்தையைப் பார்த்துச் சிரித்து விளையாடும் காட்சியுடன் சேர்ந்து பாடல் வரிகள் அமைந்திருக்கும். “பூமணம் கொண்டவள் பால் மணம் கண்டாள் பொங்கிடும் தாய்மையில் சேயுடன் நின்றாள் மாமனைப் பாரடி கண்மணி என்றாள் மருமகள் கண்கள் தன்னில் மாமன் தெய்வம் கண்டான் மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள் அண்ணன் வாழ வைப்பான் என்று அமைதி கொண்டாள் கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள் அண்ணன் கற்பனைத் தேரினில் பறந்து சென்றான்...
இந்தப் படத்திற்குப் பின் அண்ணன், தங்கை பாசத்தை விளக்கும் சிவாஜி அவர்கள் நடித்த இன்னொரு படம் ‘அண்ணன் ஒரு கோயில்’ என்ற தலைப்பில் பல ஆண்டுகள் கழித்து வந்தது. அந்தப் படமும் வெற்றிப் படமாக அமைந்த போதும் வெள்ளிவிழா கொண்டாடிய ‘பாசமலர்’ படம் அளவுக்கு வெற்றி பெறவில்லை. அதற்கு ஒரு காரணம் பாசமலர் படத்தில் வந்த பாடல்களைப் போல் அமையாதது.
அத்துடன், சாவித்திரியின் நடிப்பு மட்டுமல்ல, அவரது கண்களும் பாசமலர் படத்தில் பேசின என்று கூறப்படுவதுண்டு. அதைத்தான் ஒரு கேள்விக்குப் பதிலளித்த பத்திரிகையாளர் ஒருவர் (குமுதம் சஞ்சிகையில் அரசு பதில்கள் என்று நினைவு) சாவித்திரியின் கண்களில் ‘மேஜிக் இருந்தது’ என ஒரே வரியில் கூறிவிட்டார்.
இந்த அற்புதமான பாடலை நீங்களும் கேட்டு இன்புறுங்கள்.