விக்ரம் நடிப்பில் வெளியான ‘தங்கலான்’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கும் அடுத்த படம் ‘வேட்டுவம்’.
அப்படத்தில் அட்டகத்தி தினேஷ் கதாநாயகனாகவும் ஆர்யா வில்லனாகவும் நடிக்கின்றனர். மேலும், அசோக் செல்வன், பகத் பாசில் ஆகியோரும் அப்படத்தில் இணைந்துள்ளனர்.
இந்நிலையில், ஜூலை 10ஆம் தேதி அப்படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் கார் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டபோது, விபத்தில் சிக்கி சண்டைப் பயிற்சியாளரான மோகன்ராஜ் உயிரிழந்தார்.
படப்பிடிப்புத் தளத்தில் அலட்சியமாகச் செயல்பட்டது, கவனக்குறைவாக இருந்தது போன்ற பிரிவுகளில் இயக்குநர் பா. ரஞ்சித், ராஜ்கமல், வினோத், பிரபாகரன் ஆகிய நால்வர் மீதும் மூன்று பிரிவுகளில் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.
இதற்கிடையே, 52 வயதில் அகால மரணமடைந்த மோகன்ராஜின் குடும்பத்திற்கு திரைத்துறையினர் பலரும் உதவி வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் சிம்பு ஒரு லட்சம் ரூபாய் காசோலையாக வழங்கினார். அதனைத் தொடர்ந்து, இயக்குநர் பா.ரஞ்சித், மோகன்ராஜின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் கொடுத்துள்ளார். அதேபோல, நடிகர் விஷால், மோகன்ராஜ் பிள்ளைகளின் படிப்புச் செலவைத் தானே ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார்.