மு.மாறன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் நடித்திருக்கும் படம் ‘பிளாக் மெயில்’.
ஆகஸ்ட் 1ஆம் தேதி திரைகாண உள்ள இப்படத்தில் ஶ்ரீகாந்த், பிந்து மாதவி, தேஜு அஷ்வினி, ரமேஷ் திலக் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படத் தயாரிப்பாளர் அமர் ராஜ் தெரிவித்த தகவல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
‘பிளாக் மெயில்’ படத்தில் பாதி ஊதியம் மட்டுமே பெற்றுக்கொண்டு நடித்து முடித்துள்ளார் ஜிவி பிரகாஷ்.
“இன்றைய தேதியில், நடிகர்கள் பலரும் முழு சம்பளத்தை வாங்கிய பிறகே படப்பிடிப்புக்கு வருகிறார்கள். எட்டு நாள்கள் படப்பிடிப்பு மீதம் இருந்தபோது எனக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டது. ஜிவியைச் சந்தித்து, ‘நீங்கள் விட்டுக்கொடுத்தால் படத்தை எப்படியாவது வெளியிட்டுவிடுவேன். என்னிடம் இவ்வளவுதான் தொகை உள்ளது’ எனக் கூறினேன்.
“அவர் எதுகுறித்தும் யோசிக்காமல், ‘உங்களுக்கு அது உதவியாக இருக்குமென்றால், நிச்சயம் விட்டுக்கொடுப்பேன்’ என்று சொன்னதுடன் நிற்காமல், படப்பிடிப்பை முடித்துக் கொடுத்துள்ளார்.
“மேலும், பின்னணிக் குரல் பதிவில் பங்கேற்று, இன்று இந்த இசை வெளியீடு வரை ஒத்துழைப்பு அளித்துள்ள அவருக்கு என்றும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்,” என்றார் தயாரிப்பாளர் அமர் ராஜ்.
இந்நிகழ்வில் பேசிய இயக்குநர் வசந்த பாலன், தனது படத்தில் பணியாற்றியபோது ஜிவி பிரகாஷுக்கு 17 வயதுதான் என்றும் தற்போது அவரது வளர்ச்சி மகிழ்ச்சி தருகிறது என்றும் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
“எனக்கு ஜிவியுடன் பணிபுரிய ஒரு வாய்ப்பு கிடைத்ததைப் பெருமையாக நினைக்கிறேன். அவரை வைத்துப் படம் எடுக்கவில்லை என்றாலும் வேறு யார் மூலமாவது இந்த இடத்தைப் பிடித்திருப்பார்.
“யாரையும் வெறுக்காத, யாரிடமும் கோபம் கொள்ளாத, யாரிடமும் மோசமாக நடந்துகொள்ளாத ஒரு குணத்தை அவரிடம் நான் பார்த்திருக்கிறேன்.
“அண்மையில் அவரது குடும்பப் பிரச்சினையில் எவ்வளவு நாகரிகமாக நடந்துகொண்டார் என்பதை ஒரு காணொளியில் பார்த்தேன்.
“ரசிகர்களின் பேரன்பிற்காக அவர் நடிகராகவும் இசையமைப்பாளராகவும் பெரிய இடத்தைத் தொட வேண்டும்,” என்று வாழ்த்தினார் வசந்த பாலன்.

