தமிழ்த் திரையுலகில் வளர்ந்துவரும் பிரபல நடிகையான சைத்ரா ஜே ஆச்சார், ‘ஹிப்ஹாப்’ தமிழா ஆதி நடிப்பில் அண்மையில் வெளியீடு கண்ட ‘மீசைய முறுக்கு-2’ திரைப்படத்தின் வெற்றியால் உற்சாகத்தில் மிதக்கிறார்.
அண்மைய நேர்காணல் ஒன்றில், இந்தப் படம் தனக்கும் தனது குடும்பத்தாருக்கும் அளித்த அனுபவங்கள் குறித்துப் பேசியுள்ளார் சைத்ரா.
“இப்படத்தின் முதல் பாகம் ஒருவர் வெற்றி பெற மேற்கொள்ள தேவையான தன்னபிக்கையைப் பேசியது என்றால், இந்த ‘மீசைய முறுக்கு-2’ படம், வாழ்க்கையில் வாய்ப்புகளைப் பெறுவதன் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசுகிறது. எனினும், நம்பிக்கை என்ற உணர்வே இந்த இரண்டு கதைகளையும் பிணைக்கும் முக்கியப் புள்ளியாக இருக்கிறது,” என்கிறார் சைத்ரா.
இந்தப் படத்தில் கானா பாடகரான தாஸின் (ஹிப்ஹாப் தமிழா ஆதி) மனைவியாக ‘லச்சுமி’ என்ற துணிச்சலான கதாபாத்திரத்தில் நடித்துள்ள அவரைப் பலரும் புகழ்கிறார்களாம்.
கணவருக்குத் தேவையான நேரத்தில் உறுதுணையாக நிற்கும், அதேவேளையில் எது சரி என்பதில் மிகத் தெளிவான பார்வையைக் கொண்ட ஒரு பெண்மணியாகத் தோன்றி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளார்.
சினிமா பயணத்தில் இதுவரை தனக்குக் கிடைக்காத ஒரு புதிய வாய்ப்பை ‘மீசைய முறுக்கு-2’ வழங்கியதாகக் கூறும் சைத்ரா, முதன்முறையாக இப்படத்தில்தான் பாடல் காட்சிகளில் முழுமையான நடன அசைவுகளுடன் நடனமாடியிருப்பதாகச் சொல்கிறார்.
“உனக்கு ஏன் சினிமாவில் ஆட வாய்ப்பு கிடைக்கவில்லை? என்று என் அம்மா எப்போதும் கேட்பார். இந்தப் படத்தின் மூலம் என் அம்மாவின் நீண்ட நாள் கனவு நனவாகியிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
“ஹிப்ஹாப் ஆதி, ராஜ் பி ஷெட்டி, ரக்ஷித் ஷெட்டி, சித்தார்த், சசிகுமார் போன்ற பன்முகத் திறமை கொண்ட படைப்பாளிகளுடன் பணியாற்றிய அனுபவம் கூடுதல் உற்சாகம் அளித்தது,” என்கிறார் சைத்ரா.
ஆதியின் பன்முகத்தன்மையும் திரையுலகில் அவர் காட்டும் அர்ப்பணிப்பும் தனக்கு மிகப்பெரிய பாடமாக இருந்ததாகவும் நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.
திரைப்பட இயக்கம், பாடல் பாடுவது, புகைப்படம் எடுப்பது எனப் பல விஷயங்களில் சைத்ராவுக்கு ஆர்வம் உள்ளது.
எதிர்காலத்தில் சொந்த அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு படம் இயக்கும் எண்ணம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போது தெலுங்கில் ‘418’, பிரபாஸ் நடிக்கும் ‘ஃபௌஸி’ ஆகிய படங்களில் நடித்து வரும் அவர், தமிழிலும் மூன்று சுவாரசியமான கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறாராம்.
“ஒரு திரைப்பட இயக்குநராக உங்களுடைய சொந்த வாழ்க்கையில் நடந்தவற்றை திரையில் காட்சிப்படுத்துவீர்களா என்று சிலர் கேட்கிறார்கள். அந்த வாய்ப்புக்கு நான் ஒருபோதும் மறுப்பு சொல்ல மாட்டேன்.
“இதுவரை, நான் பணியாற்றிய ஒவ்வொரு படப்பிடிப்புத் தளத்திலிருந்தும் திரைப்படத் தயாரிப்பின் பல அம்சங்களைப் புரிந்துகொண்டுள்ளேன். ஆனால், நான் ஒரு கதையைச் சொல்ல வேண்டும் என்றால், அது எனது அனுபவத்திலிருந்து சொல்லப்பட வேண்டும். புனையப்பட்ட கதைகளை விடத் தனிப்பட்ட கதைகள் ஆழமானவை என்பதே என் கருத்து.
“மேலும், ஒரு கதை எவ்வளவு தனிப்பட்டதாக இருக்கிறதோ, அந்த அளவிற்கு அது உலகளாவியதாக மாறும்,” என்கிறார் சைத்ரா.
