‘றெக்க’ படத்தில் இடம்பெற்ற ‘கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை’ பாடலைப் பலர் மறந்திருக்க வாய்ப்பில்லை. அதில் அழகு பூஞ்சிலையாக நடித்து தமிழ் ரசிகர்களின் உள்ளத்தைக் கவர்ந்தவர் சிஜா ரோஸ்.
இவரது நடிப்பு அருமையாக இருந்ததாக விமர்சகர்கள் பரவலாகப் பாராட்டு தெரிவித்தபோதும், ஏனோ தமிழ்ப் படங்களில் அதிகம் பார்க்க முடியவில்லை.
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘தி ஸ்மைல் மேன்’ என்ற படத்தில் புலனாய்வு அதிகாரியாக நடித்துள்ளார் சிஜா.
“இடையில் ‘உடன் பிறப்பே’ படத்தில் சசிகுமாருக்கு மனைவியாகவும் ஜோதிகாவுக்கு அண்ணியாகவும் நடித்திருந்தேன். அந்தப் படத்தின் கதையும் கதைக்களமும் நன்றாக இருந்தது என்பதால்தான் மிக நம்பிக்கையோடு நடித்தேன்.’
“ஆனால் அதன் பிறகு தமிழில் பெரும்பாலும் அக்கா, அண்ணி போன்ற கதாபாத்திரங்களாகவே தேடி வந்தன. என் வயதுக்கு மீறிய கதாபாத்திரங்களில் நடித்ததே இதற்கு காரணம் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. எனவேதான் தகுந்த இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வித்தியாசமான வேடங்களில் நடிக்க வேண்டும் என முடிவு செய்தேன். அதை இப்போது செயல்படுத்துகிறேன்.
“எனவே வாய்ப்பு கிடைக்காததால் நான் தமிழ்த் திரையுலகை விட்டு விலகவில்லை,” என்று விளக்கம் அளிக்கிறார் சிஜா ரோஸ்.
‘தி ஸ்மைல் மேன்’ படத்தில் சரத்குமாருடன் இணைந்து நடித்தது பயனுள்ள அனுபவமாக இருந்ததாம். அது மட்டுமல்ல முதன் முறையாக காவல்துறை அதிகாரியாக நடித்தது மனநிறைவை தந்தது என்கிறார்.
“இது சரத்குமாரின் 150வது படம். ஆனால் எந்தவிதமான தலைக்கனமும் இல்லாமல் எல்லோரிடமும் இயல்பாக சிரித்துப் பேசுவார். இவ்வளவு படங்களில் நடித்த பிறகும், தனக்கான வசனங்களை உதவி இயக்குநர்களிடம் இருந்து கேட்டுப் பெற்று அவற்றை நன்கு உள்வாங்கி நடிக்கிறார்.
தொடர்புடைய செய்திகள்
“சரத்குமாரின் புருவம், கண் இமைகள்கூட நடிக்கின்றன. அவர் நடிப்பதைப் பார்ப்பதே என்னைப் போன்ற வளரும் நடிகைகளுக்கு மிகப் பெரிய அனுபவப் பாடம்,” என்பேன் என்று மூத்த நடிகரைப் பாராட்டி தீர்க்கிறார் சிஜா ரோஸ்.
‘தி ஸ்மைல் மேன்’ படத்தை இயக்கியுள்ள இரட்டை இயக்குநர்களான ஷ்யாம், பிரவீண் ஆகிய இருவரும் மிகுந்த திறமைசாலிகள் என்றும் இருவரது சிந்தனையும் செயலும் ஒரே மாதிரியாக இருக்கும் என்றும் கூறுகிறார் சிஜா.
“இந்தப் படத்தில் வேறு கதாபாத்திரத்தில் நடிக்குமாறுதான் முதலில் என்னிடம் கேட்டனர். ஆனால் மீண்டும் மனைவி, அக்கா, அண்ணி கதாபாத்திரங்கள் வேண்டாம் என்பதை திட்டவட்டமாகக் கூறிவிட்டேன்.
“அதன் பிறகே புலனாய்வு அதிகாரியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இனி திரையில் சிறிது நேரமே வந்தாலும் வித்தியாசமான கதாபாத்திரங்கள் அமைந்தால் மட்டுமே நடிப்பேன்.
“எப்படியோ புடவைக்கும் சுடிதார் உடைக்கும் விடை கொடுத்துவிட்டதில் மகிழ்ச்சியாக இருக்கிறேன்,” என்று சிரித்தபடி சொல்லும் சிஜா ரோஸை பார்க்கும் அனைவருமே அவரது இளமை ரகசியம் குறித்துத்தான் விசாரிக்கிறார்களாம்.
தோற்றத்தை வைத்தே ஒரு நடிகைக்கு கதாபாத்திரங்கள் அமையும் என்பதை தாம் தெளிவாக உணர்ந்திருப்பதாகச் சொல்கிறார்.
“என்னைப் பார்க்கும்போது இளமையாகக் காட்சியளிக்கிறேன் என்பதுடன், மனதளவில் உற்சாகமாக இருக்க வேண்டும் என்பதை மறக்க மாட்டேன். எனவேதான் தேடி வரும் வாய்ப்புகளுக்கு ஏற்ப நான் தயாராக இருக்க வேண்டும் என்பதால் உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஆகியவற்றில் தீவிர கவனம் செலுத்துகிறேன்.’
“அனைத்தையும் விட முக்கியமாக, எந்த பிரச்சினை குறித்தும், அதிகம் யோசித்து புலம்பாமல் எனக்குப் பிடித்தமானவற்றை மட்டும் செய்கிறேன் என்று சொல்லும் சிஜா, அடுத்து விக்ராந்த் ருத்ரா இயக்கத்தில் கபடி விளையாட்டு வீரர் அர்ஜுன் சக்கரவர்த்தியின் வாழ்க்கைக் கதையில் நடிக்கிறாராம்.
மேலும் இவர் நடித்துள்ள ‘படக்குதிர’ என்ற மலையாளப்படம் விரைவில் திரைகாண உள்ளது. இந்நிலையில் மலையாளத் திரை உலகில் பாலியல் சீண்டல் சம்பவங்கள் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஹேமா கமிட்டியால் பயனுள்ள மாற்றங்கள் ஏற்பட்டால் நல்லது தான் என்கிறார்.
“பெரிய அளவில் மாற்றம் வந்திருக்கிறதா என்பதைக் கடந்து இந்த விவகாரம் பெரும் விவாதமாக மாறியுள்ளது. எனினும் என்னைப் போன்ற நடிகைகள் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளைத் துணிச்சலுடன் வெளியே சொல்ல ஓர் இடம் இருக்கிறது என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது.
“மலையாளத் திரையுலகில் முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையால் இப்போது எல்லா மொழிகளிலும் அனைத்து பெண்களுமே தங்களுக்கான உரிமைகளைக்கோரி குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.
“இது திரைத்துறையில் மட்டுமே நடப்பதாகக் கருதிவிடக் கூடாது. அனைத்துத் துறைகளிலுமே பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்துப் பேச வேண்டும். அப்போதுதான் பெண்களுக்கான பாதுகாப்பு மேலும் வலுப்பெறும். அதனால் ஹேமா கமிட்டியின் முன்னெடுப்பை நான் முழுமையாக வரவேற்கிறேன்,” என்கிறார் சிஜா ரோஸ்.

