ஹைதராபாத்: தெலுங்குத் திரையுலகில் சக்கைப் போடு போட்டுவரும் ஸ்ரீலீலா, சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ மூலம் கோலிவுட்டிலும் அறிமுகமாகவிருக்கிறார்.
அதோடு, பாலிவுட்டிலும் களமிறங்கவுள்ளார். கார்த்திக் ஆர்யனின் ‘ஆஷிக்கி’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார் ஸ்ரீலீலா. நடிப்பு மட்டுமின்றி தனது நடனத்தாலும் பலரது இதயத்தைக் கொள்ளை கொண்டவர் ஸ்ரீலீலா.
அல்லு அர்ஜுனின் மாபெரும் வெற்றிப்படமான ‘புஷ்பா 2’ல் ஒரு பாட்டுக்கு மட்டும் நடனமாடினார். அப்பாடல் பெரும் வெற்றிப் பாடலாக அமைந்தது.
இவர் திரையுலகில் மட்டும் முத்திரை பதிக்கவில்லை. ஸ்ரீலீலா, மருத்துவக் கல்வி பட்டதாரியும்கூட. மகப்பேற்று மருத்துவரான தனது தாயின் பாதையில் பயணம் செய்தவர் இவர்.
பழைமைவாதக் கொள்கைகளைக் கொண்ட குடும்பத்திலிருந்து வந்திருந்தாலும் ஸ்ரீலீலா மாறுபட்ட பாதையைத் தேர்ந்தெடுத்துக்கொண்டார், நடிகையாக மலர்ந்தார்.
2017ஆம் ஆண்டு நடிக்கத் தொடங்கினார். இவரின் ஆரம்பகால படங்களில் ஒன்றான ‘கிஸ்’ பெரும் வெற்றிப் படமாகும். அதனைத் தொடர்ந்து நட்சத்திரமாக வளர்ந்த ஸ்ரீலீலாவுக்கு வெற்றிப் படங்கள் குவிந்தன.
‘ஸ்கந்தா’, ‘ஜேம்ஸ்’, ‘டமக்கா’, ‘பை 2 லவ்’ உள்ளிட்ட படங்களை வழங்கியிருக்கிறார். தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபுவுடன் ஸ்ரீலீலா நடித்த ‘குண்டூர் காரம்’ தோல்விப் படமாகப் பார்க்கப்படுகிறது. இருந்தாலும் ஸ்ரீலீலாவின் கதாபாத்திரம் நினைவில் நிற்கும் வண்ணம் இருந்தது. ‘குடுச்சினி மாடுத்தப்பெட்டி’ (மடக்கித் தட்டு) பாடலுக்கு ஸ்ரீலீலா அந்த அளவுக்குத் துடிப்பான நடனநடனத்தை வழங்கியிருந்தார்.
இவரைப் பற்றிய மேலும் ஓர் அம்சமும் பேசப்பட்டு வருகிறது. 23 வயதாகும் ஸ்ரீலீலா, சிறப்புத் தேவையுடைய சிறார் இருவரைத் தத்தெடுத்திருப்பதாக மனிகன்ட்ரோல் போன்ற ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. அந்த சிறுவர்களை அனாதை இல்லத்தில் பார்த்து வருத்தத்துக்கு ஆளான பிறகு ஸ்ரீலீலா அவர்களைத் தத்தெடுத்து உதவிக்கரம் நீட்ட முடிவெடுத்தார் என்று கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
23 வயதிலேயே இப்படிப் பல கோணங்களில் முத்திரை பதித்துவரும் நட்சத்திரமாகப் பார்க்கப்படுகிறார் ‘ஜென் ஸீ’, ‘2கே கிட்ஸ்’ தலைமுறையினரின் கனவுக் கன்னியான ஸ்ரீலீலா.

