ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி உள்ள ‘பிரதர்’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியீடு காண்கிறது.
அக்கா, தம்பி பாசத்தை அலசும் இந்தப் படத்தில் நாயகனாகவும் தம்பியாகவும் நடிக்கும் ஜெயம் ரவிக்கு அக்காவாக பூமிகா சாவ்லாவும் நாயகியாக பிரியங்கா மோகனும் நடித்துள்ளனர்.
இதற்கு முன் ‘சிவா மனசுல சக்தி’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ ஆகிய ஜனரஞ்சகமான படங்களை அளித்த ராஜேஷ்.எம் இயக்கத்தில் உருவாகி உள்ளது ‘பிரதர்’.
“எனக்கு உடன்பிறந்தோர் யாரும் கிடையாது. அதனால் சிறு வயதில் இருந்தே அக்கா இல்லை என்கிற ஏக்கமும் வருத்தமும் இருந்தது.
“பள்ளி நண்பர்கள், ‘விடுமுறைக்காக அக்கா வீட்டுக்குப் போனோம், அக்கா செலவுக்கு காசு கொடுத்தார்’ என்று சொல்லும்போது மனதில் உள்ள ஏக்கம் மேலும் அதிகரிக்கும்.
“என் குடும்ப நண்பர் வீட்டில் நடந்த உணர்வுபூர்வமான சில சம்பவங்களைச் சேர்த்தும் இந்தக் கதை உருவாகி உள்ளது.
“நண்பரின் அக்கா எப்போதும் தன் தம்பியை விட்டுக்கொடுக்கவே மாட்டார். அவர்களுக்கு இடையேயான பாச பந்தத்தை ஒரு கூட்டுக்குடும்பப் பின்னணியோடு சொல்லியிருக்கிறோம்,” என்கிறார் இயக்குநர் ராஜேஷ்.எம்.
தமிழ் சினிமாவில் அக்கா, தம்பிக்கு இடையேயான உறவு குறித்து நிறைய கதைகள் வந்திருந்தாலும், இந்தப் படம் இன்றைய இளைய தலைமுறைக்கான கதையுடன் உருவாகி உள்ளதாகச் சொல்கிறார்.
இன்றைய சூழலில் அவர்கள் தங்களின் பிரச்சினைகளை எப்படிக் கையாள்கிறார்கள் என்பதை இந்தப் படம் பதிவு செய்யும் என்றும் அதே சமயம் இதை நூறு விழுக்காடு அக்கா, தம்பிக்கான படம் என வகைப்படுத்த முடியாது என்றும் விளக்குகிறார் இயக்குநர்.
“கூட்டுக்குடும்பக் கதை என்பதால் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் அருமையான நடிகர்கள் வேண்டும் என நினைத்தேன். பூமிகா சாவ்லா, பிரியங்கா மோகன் தவிர சரண்யா பொன்வண்ணன், சீதா, நட்டி நட்ராஜ், விடிவி கணேஷ், யோகி பாபு என, பல திறமைசாலிகளை ஒப்பந்தம் செய்தோம். அருமையான தொழில்நுட்பக் குழுவும் அமைந்தது.
“கதை சென்னையில் தொடங்கி, ஊட்டி வரை போகும். ஊட்டியில் தொடர்ந்து 35 நாள்கள் ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடித்தோம்.
“தயாரிப்பாளர்களின் ஒத்துழைப்பின்றி இத்தனை நட்சத்திரங்களைப் படத்தில் சேர்த்திருக்க முடியாது,’‘ என்று நன்றியுடன் குறிப்பிடுகிறார் ராஜேஷ்.எம்.
“ஜெயம் ரவியின் அக்காவாக நடிக்கக் கேட்டு பூமிகாவை அணுகியபோது, முழுக் கதையையும் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றார். சுருக்கமாக விவரித்ததும் தன் கதாபாத்திரம் நன்றாக இருப்பதாகச் சொல்லி நடிக்க ஒப்புக்கொண்டார்.
“அதேபோல் பிரியங்கா மோகனும் எங்கள் குழுவுடன் எளிதில் நுழைந்துவிட்டார். அவரது இளமைக் குறும்புடன் கூடிய அழகான நடிப்பும் தோற்றமும் ரசிகர்களை நிச்சயம் கவரும். இதுவரை அவரும் ரவியும் இணைந்து நடித்ததில்லை என்பதால் ரசிகர்களுக்கும் இந்தப் புது ஜோடியைப் பிடிக்கும்,” என்கிறார் ராஜேஷ்.
‘பிரதர்’ என்ற தலைப்பைச் சொன்னது ஜெயம் ரவிதானாம். ஒரு நாள் இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது, “படத்துக்கு என்ன தலைப்பு வைக்கலாம் பிரதர்” எனக் கேட்க, “பிரதர் என்பதே நன்றாகத்தானே இருக்கிறது” என்றாராம் ரவி.
“யோசித்துப் பார்க்கும்போது இதைவிட நல்ல தலைப்பு கிடைக்காது எனத் தோன்றியது. இன்று நண்பர்கள்கூட தங்களுக்குள் ‘பிரதர்’, ‘ப்ரோ’ என்றுதான் குறிப்பிடுகிறார்கள். எனவே, அந்தத் தலைப்பே பொருத்தமாக இருக்கும் என அனைவருமே கருதினோம்,” என்கிறார் ராஜேஷ்.
இதற்கிடையே, ஜெயம் ரவியின் நடிப்பில் உருவாகும் 34வது படத்தை (ஜெஆர்-34) கணேஷ்.கே.பாபு இயக்குகிறார். இவர் ஏற்கெனவே ‘டாடா’ என்ற படத்தை இயக்கியவர்.
‘ஜெஆர்-34’ படத்துக்காக மீண்டும் ஹாரிஸ் ஜெயராஜுடன் இணைகிறார் ஜெயம் ரவி.