சற்றே கவனக்குறைவாக இருந்ததால் தனக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக புலம்பிக்கொண்டிருக்கிறார் நடிகை நந்தினி.
இவர், தன் கணவர் யோகேஷுடன் சேர்ந்து சொந்தமாக ‘புள்ளதாச்சி’ என்ற இணையத்தொடரை தயாரித்து வந்தார். இதுவரை எடுக்கப்பட்ட பகுதிகளுக்கு ‘யூ டியூப்’ தரப்பில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில் இலங்கை சென்று படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். அங்கு பல பகுதிகளைப் படமாக்கிய பின்னர் அண்மையில் சென்னை திரும்பியுள்ளனர்.
“இலங்கையில் எடுக்கப்பட்ட காட்சிகள் அடங்கிய ‘ஹார்ட் டிஸ்க் ‘ எங்கள் கவனக்குறைவால் கீழே விழுந்து சேதமாகிவிட்டது. இதனால் ஒட்டுமொத்த குழுவினரும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளோம். காரணம் இலங்கையில் எடுக்கப்பட்ட மொத்த காணொளிப்பதிவும் அழிந்துவிட்டது.
“மீண்டும் படப்பிடிப்பு நடத்த பல லட்சங்கள் செலவாகும். கைவசம் இருந்த மொத்த சேமிப்பையும் ஏற்கெனவே செலவு செய்துவிட்டதால் ‘புள்ளதாச்சி’ இணையத் தொடரைக் கைவிடுகிறோம்,” என்று நந்தினி, யோகேஷ் தம்பதி தெரிவித்துள்ளனர்.
நன்றாகச் சென்று கொண்டிருந்த இணையத்தொடருக்கு ஏற்பட்டுள்ள இந்த திடீர்ச் சிக்கல் ரசிகர்களையும் வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளது.

