தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தயாரிப்பாளர்களாக மாறி வரும் இந்தித் திரையுலக நாயகிகள்

3 mins read
24193fc2-a2a8-4f04-b2ee-bd029848d90e
பிரியங்கா சோப்ரா. - படம்: ஊடகம்
multi-img1 of 2

இந்தியத் திரையுலகில் பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிப்பதில்லை, நடிகைகளை வெறும் காட்சிப் பொருளாக மட்டுமே திரையில் சித்திரிக்கிறார் போன்ற முணுமுணுப்புகள் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது.

அண்மையில்கூட நடிகை ஜோதிகா மும்பை ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

இந்நிலையில், இந்தித் திரையுலகைச் சேர்ந்த கதாநாயகிகள் வெறும் புலம்பல்களுடன் நின்றுவிடாமல், ‘நமக்கு நாமே உதவிக்கொள்ள வேண்டும்’ எனும் முடிவுடன் களமிறங்கி உள்ளனர்.

இதன் விளைவாக, பிரியங்கா சோப்ரா முதல் கிரித்தி சனோன் வரை பாலிவுட் நடிகைகள் பலர் தயாரிப்பாளர்களாக மாறிவிட்டனர். சிலர் இயக்குநர்களாகவும் உருவெடுத்துள்ளனர்.

இந்த நடிகைகள் தங்களுடைய முயற்சிகளில் சில குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளனர் என்பதே இதில் கவனிக்க வேண்டிய அம்சம்.

வலுவான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பதற்குப் பெயர் பெற்ற நடிகை டாப்சி, கடந்த 2021ஆம் ஆண்டில் அவுட்சைடர்ஸ் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். 2022ஆம் ஆண்டு வெளியான ‘பிளர்’, இவர் தயாரித்த முதல் படமாகும். சூட்டோடு சூடாக அடுத்தடுத்து படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கிறார் டாப்சி. சில படங்களில் தாமே நாயகியாகவும் நடிப்பது வசதியாக உள்ளது என்கிறார்.

புளூ பட்டர்பிளை பிலிம்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி தயாரிப்பில் அடியெடுத்து வைத்த கிரித்தி சனோன், முன்னணி நாயகிகளில் ஒருவராக பாலிவுட்டில் வலம் வருகிறார். இவர் தயாரித்த முதல் படம் ‘தோ பட்டி’. இதில் கிரித்தி சனோன், கஜோல் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இந்தித் திரையுலகில் முன்னணி நாயகியாக இருந்தபோதே ஹாலிவுட்டுக்குள் நுழைந்து சாதித்தார் பிரியங்கா சோப்ரா. பர்பிள் பெப்பிள் பிக்சர்ஸ் நிறுவனத்தைத் துவங்கி படங்களைத் தயாரிக்கும் இவர், ‘பஹுனா’, ‘பயர்பிரான்ட்’, ‘பான்’ ஆகிய படங்களைத் தயாரித்துள்ளார்.

இவரது தயாரிப்பில் உருவான மராத்தி மொழித் திரைப்படமான ‘வென்டிலேட்டர்’ சிறந்த படத்துக்கான இந்தி்ய தேசிய விருது பெற்றது.

நடிகை கங்கனா ரனாவத்தின் சொந்தப் படத் தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் மணிகர்ணிகா பிலிம்ஸ்.

நவாசுதீன் சித்திக், அவ்னீத் கவுர் ஆகியோருடன் இவர் நடித்த ‘திக்கு வெட்ஸ் ஷேரு’ விமர்சன ரீதியில் வரவேற்பைப் பெற்றது. இதன் தயாரிப்பாளர் கங்கனாதான்.

‘சபாக்’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார் தீபிகா படுகோன், அதன் பின்னர், ‘83’ படத்தையும் தயாரித்தார்.

அனுஷ்கா சர்மா ‘கிளீன் ஸ்லேட் பிலிம்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். இவர் தயாரித்த முதல் படம் ‘என்எச்10’. அதைத் தொடர்ந்து ‘பில்லாரி’, ‘பரி’ ஆகிய படங்களையும் தயாரித்தார் அனுஷ்கா.

ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார் நடிகை ஆலியா பட். இந்நிறுவனம் ‘டார்லிங்ஸ்’ படத்தைத் தயாரித்தது.

மேற்குறிப்பிட்ட நடிகைகளில் பலருக்கு என்றாவது ஒருநாள் திரைப்பட இயக்குநராக வேண்டும் என்ற கனவும் உள்ளதாம். சிலர் இதை தங்களுடைய ஊடகப் பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளனர்.

“சொந்தமாகப் படம் தயாரிக்கும்போது இதுபோன்ற ஆசைகள் எளிதில் நிறைவேறும். மேலும், நாயகிகள் அனைவருமே மிகுந்த திறமைசாலிகள். இவர்களுடைய இயக்கத்தில் வெளியாகும் படங்கள் நிச்சயம் வரவேற்பைப் பெறும்.

“மேலும், பொருளியல் ரீதியில் திரைத்துறையின் வளர்ச்சிக்கும் இம்முயற்சி கைகொடுக்கும்,” என பாலிவுட் விவரப்புள்ளிகள் கூறுகின்றனர்.

அதேசமயம், படத் தயாரிப்பின் மூலம் பெரும் நஷ்டங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்ற எச்சரிக்கையையும் நடிகைகள் மறந்துவிடக்கூடாது என மற்றொரு தரப்பினர் அறிவுறுத்தி உள்ளனர்.

சொந்தப் படம் தயாரித்து பல கோடிகளை இழந்து புலம்பிய நடிகைகளை இன்று முன்னணியில் இருக்கும் கதாநாயகிகள் மறந்துவிடாமல், இறுதிவரை நினைவில் வைத்திருக்க வேண்டியது அவசியம். அனுபவசாலிகளின் ஒவ்வொரு வார்த்தையும் முக்கியம்,” என்று விவரப் புள்ளிகள் கூறுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்