37 ஆண்டுகள் கழித்து வெளிவரும் ரஜினியின் இந்தித் திரைப்படம்

1 mins read
3abf3b20-1cad-4891-a46c-afd0b0c92164
 ‘ஹம் மெய்ன் ஷஹென்ஷா கவுன்’ படத்தில் நடித்திருக்கும் ரஜினிகாந்த், ஹேமமாலினி, ஷத்ருகன் சின்ஹா ஆகியோரின் இளமை காலப் புகைப்படங்கள். - படம்: என்டிடிவி

உச்ச நடிகர்கள் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படங்கள் மறுவெளியீடு கண்டுவரும் நிலையில், 1989ஆம் ஆண்டு படமாக்கப்பட்டு ரஜினி நடித்த ‘ஹம் மெய்ன் ஷஹென்ஷா கவுன்’ (Hum Mein Shahenshah Kaun) என்ற இந்தித் திரைப்படம் விரைவில் வெளியீடு காண்கிறது.

பிரபல இயக்குநர் ஹர்மேஷ் மல்ஹோத்ரா இயக்கத்தில் உருவான அப்படம், 37 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது திரை காண உள்ளது.

பாலிவுட் தயாரிப்பாளர் ராஜா ராய் தயாரிப்பில் உருவான அப்படத்தில் ரஜினிகாந்த், ஷத்ருகன் சின்ஹா, ஹேமமாலினி, அனிதா ராஜ், ப்ரேம் சோப்ரா, ஷரத் சக்ஸேனா, மறைந்த நடிகர்கள் அம்ரிஷ் பூரி, ஜகதீப் உள்ளிட்ட இந்தித் திரையுலக நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கிறார்கள்.

1989ஆம் ஆண்டு படப்பிடிப்பு முடிந்த பிறகு தயாரிப்பாளர் ராஜா ராய் லண்டனுக்குச் சென்றார். அங்கு அவரது இளைய மகனை இழந்ததாலும் அப்படத்தின் இயக்குநர் ஹர்மேஷ் மல்ஹோத்ராவின் மறைவாலும் அப்படத்தின் வெளியீடு நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

செயற்கை நுண்ணறிவு உதவியுடன் அப்படத்தில் சில மாற்றங்களைச் செய்து, திரையரங்குகளில் வெளியிடத் தயாரிப்பாளர்கள் முனைப்புகாட்டி வருகின்றனர்.

“அந்தப் படத்தின் மீதிருந்த நம்பிக்கையை ஒருபோதும் நாங்கள் இழக்கவில்லை. இன்று அது இறுதியாகப் பார்வையாளர்களைச் சந்திக்கப் போகிறது என்பதில் மகிழ்ச்சியாகவுள்ளது. அனைத்துத் தடைகளையும் கடந்து அது உயிர்ப்புடன் இருக்கிறது,” என அப்படத்தின் தயாரிப்பாளர் ராஜா ராய் கூறினார்.

ஏப்ரல் மாதம், அத்திரைப்படம் இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்