முன்னணி இந்திய நடிகை ஜான்வி கபூர் தெலுங்கு நடிகர் ராம் சரணுக்கு ஜோடியாக கடந்த ஜூனில் வெளியான ‘பெத்தி’ படத்தில் நடித்திருந்தார்.
அந்தப் படத்தில் ஜான்வி கபூரின் காட்சிகள் எல்லை மீறிய கவர்ச்சியுடன் இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. அதையடுத்து, அத்தகைய காட்சிகளைப் படக்குழு நீக்கியது.
அந்த சர்ச்சை குறித்து ஜான்வி வெளிப்படையாக எதுவும் பேசாமல் இருந்த நிலையில் தற்போது பேசியுள்ளார்.
‘காஃபி வித் கரண் 9’ நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜான்வி, “விமர்சனங்கள் எழுந்தபோது எனக்குள் பல உணர்வுகள் இருந்தன. அதைப் பற்றிப் பேச நான் ஏன் அவ்வளவு தயங்கினேன் என்றால், அந்தத் திரைப்படத்திற்காகப் பலர் மிகவும் கடினமாக உழைத்திருந்தார்கள்.
“அந்தச் சர்ச்சையில் எனது பங்கிற்கான பொறுப்பை நான் ஏற்றுக்கொள்வது அவசியம். ஏனெனில், இது போன்ற சித்தரிப்புகள் நம் சமூகத்தின்மீது, குறிப்பாகப் பெண்கள்மீது ஏற்படுத்தக்கூடிய எதிர்மறையான தாக்கம் என் மனசாட்சியை உறுத்துகிறது. அந்த அவமானத்தை நான் எப்போதும் சுமந்துகொண்டே இருப்பேன்.
“நான் இன்னும் கூடுதலாக விழிப்புடன் இருந்திருக்கலாமா என்று கேட்டால், நிச்சயமாக ‘ஆம்’ என்று சொல்வேன். அது பாலியல் வன்முறையை ஊக்குவிக்கும் விதமாக அமைந்ததா என்றால், அதற்கும் ‘ஆம்’ என்று சொல்வேன். ஆனால், இப்போது என்னால் செய்யக்கூடிய ஒரே விஷயம், இனி அதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நடக்காமல் பார்த்துக்கொள்வதுதான்,” என்று வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
