‘சூது கவ்வும்’ படத்தில் தொடங்கியது ரமேஷ் திலக்கின் திரையுலகப் பயணம்.
மிக இயல்பான நடிப்புக்குச் சொந்தக்காரர். அண்மையில் வெளியான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் வரை ஒவ்வொரு முறையும் வித்தியாசமான கதைக்களம், கதாபாத்திரம் என ரசிகர்களை மனநிறைவடையச் செய்யும் வகையில் தேர்ந்தெடுத்த படங்களில் நடித்து வருகிறார் ரமேஷ் திலக்.
தமிழில் தற்போது முன்னணியில் உள்ள குணச்சித்திர நடிகர்களில் குறிப்பிடத்தக்கவர் இவர்.
“’சூது கவ்வும்’ படம் வெளிவந்தபோது கிடைத்த ஆதரவை மறக்க முடியாது. அப்படியான வரவேற்பை ‘குட் நைட்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படங்களிலும் பெற்றுள்ளேன்.
“இயக்குநர் விநாயக் ‘குட் நைட்’ கதையைச் சொன்னபோது, அதில் குடும்ப அமைப்பு குறித்த பல அம்சங்களும் அடங்கியிருந்தன. ‘காதலும் கடந்து போகும்’ படத்தில் நானே கேட்டு வாங்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்,” என்கிறார் ரமேஷ் திலக்.
தொடக்கத்தில் சிறுசிறு வேடங்களில் நடித்து சினிமா உலகத்தைப் புரிந்துகொள்ள முயன்றாராம். அண்மைக் காலமாகத்தான் படங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பதாகச் சொல்கிறார்.
“’மாஸ்டர்’, ‘விஸ்வாசம்’, ‘கபாலி’, ‘விக்ரம்’ மாதிரியான படங்களில், நாம் பார்த்து வியந்த பெரிய நடிகர்களோடு நடிக்க விருப்பப்பட்டு நடித்திருக்கிறேன். அதில் ஒரு மகிழ்ச்சி.
“எனக்கான ஊதியத்தைப் பெற்றுக்கொண்டு அதற்கு உண்மையாக உழைக்கிறேன். நான் நடிக்கும் படங்களுக்கு 100% உழைப்பைத் தந்திருக்கிறேன். அதுதான் ஒரு நல்ல நடிகன் என்ற பெயருடன் இந்த உயரத்துக்கு என்னைக் கொண்டு வந்துள்ளது,” என்கிறார் ரமேஷ் திலக்
தொடர்புடைய செய்திகள்
‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தில் ஐந்து நாள்கள் மட்டுமே படப்பிடிப்பு இருந்ததாம். ஆனால், தான் நான்கு மாதங்கள் உழைத்த படம்கூட இந்த அளவுக்கு வரவேற்பைப் பெற்றதில்லை என்கிறார்.
முதல் படத்தில் நடித்தபோதே தம்மால் எத்தகைய கதாபாத்திரத்திலும் நடிக்க முடியும் என்ற நம்பிக்கை மனதில் ஏற்பட்டுவிட்டதாகக் கூறும் ரமேஷ் திலக், தற்போது மலையாளப் படத்திலும் நடித்து வருகிறார்.
“மலையாளத்தில் நான் நடித்த ‘கும்பளாங்கி நைட்ஸ்’ பற்றி நிறையவே பேசுகிறார்கள். அதற்கு முன்பாகவே மூன்று மலையாளப் படங்கள் செய்துவிட்டேன். ‘நேரம்’, ‘வாய்மூடிப் பேசவும்’, ‘வடக்கன்செல்பி’ என மூன்றிலும் நல்ல கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.
“மலையாளத்தில் ஃபகத் ஃபாசில், சௌபின் போன்றவர்களோடு பழகும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. தமிழில் ‘வேட்டையன்’ படத்தில் ஃபகத் நடித்தார். என்னைப் பார்த்ததும் ‘மச்சானே’ என்று ஓடி வந்தார்.
“அவருடைய இடம் என்ன, என்னுடைய இடம் என்ன, ஆனாலும் என்னை ஓடோடி வந்து பார்க்க வருகிறார். சௌபின் அவ்வளவு மிக எளிமையான மனிதர். தாம் ஒரு நட்சத்திர நடிகர் என்பதையெல்லாம் மனதில் ஏற்றிக்கொள்ளாமல் இயல்பாக இருப்பார்,” என்று கூறும் ரமேஷ் திலக், தொடக்கத்தில் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தவர்.
தமிழ்த் திரையுலகில் இவருக்கு உள்ள மிக நெருக்கமான நண்பர்களில் நடிகர் மணிகண்டனும் ஒருவர்.
“தான் கதை எழுதி, நடித்து, அந்தப் படத்தை இயக்க வேண்டும் என்பதுதான் மணிகண்டனின் கனவு. அவரை கதாநாயகனாக திரையில் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. நல்ல மனசுக்காரர், நல்ல உயரத்துக்குச் செல்வார்,” என்று நண்பரை வாழ்த்துகிறார் ரமேஷ் திலக்.

