உற்சாகத்தில் துள்ளிக் குதிக்கிறார் பிரியங்கா மோகன்.
இந்தியாவிற்கு மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக வந்திருந்த தென்கொரிய அதிபர் லீ, தமிழ்ப் படம் ஒன்றைப் பார்த்துப் பாராட்டியதாக ஒரு தகவல் வெளியானது அல்லவா? அந்தத் தமிழ்ப் படம் பிரியங்கா நடித்த ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் தானாம்.
கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி அதிபர் மாளிகையில் தென்கொரிய அதிபருக்கு விருந்து அளிக்கப்பட்டது. அரசியல், கலைத்துறையைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். இதில் சிறப்பு அழைப்பாளராக நடிகை பிரியங்கா மோகன் பங்கேற்றார்.
அண்மையில் பிரியங்கா மோகன் நடிப்பில் ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. அப்படத்தின் பெரும்பகுதி கொரியாவிலேயே படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்திய, தென்கொரிய அதிபர்களுடன் பங்கேற்ற விருந்து நிகழ்வு குறித்து இந்திய ஊடகத்துக்குப் பேட்டி அளித்துள்ள பிரியங்கா, இது தாம் முற்றிலும் எதிர்பாராத ஓர் அனுபவம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
“இந்திய அதிபரின் அதிகாரபூர்வ இல்லத்தின் பிரம்மாண்டமும் அது எப்படி இருக்கும் எனும் கற்பனையுடன் கூடிய எதிர்பார்ப்பும் எப்போதுமே எனக்குள் இருந்ததுண்டு. ஆனால் நேரில் சென்று பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்ததே இல்லை.
“அங்கிருந்த சூழலை ரசித்தேன். பல முக்கியப் பிரமுகர்களுடன் அமர்ந்து உணவு அருந்துவது ஒரு கனவுபோல் இருந்தது. தென்கொரிய அதிபர் லீயும் அவரது மனைவியும் ‘மேட் இன் கொரியா’ படம் பற்றி என்னிடம் பாராட்டிப் பேசினார்கள். அவர்களிடம் நான் நீண்ட நேரம் உரையாடவில்லை.
“ஆனால், நான் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டபோது, அதிபர் என்னைப் பார்த்ததும் நினைவுகூர்ந்து, ‘நான் உங்கள் திரைப்படத்தைப் பார்த்தேன்’ என்று கூறினார்.
“அதிபரும் அவரது மனைவியும் என்னைப் பாராட்டியது என் வாழ்நாளில் மறக்க முடியாத மிகப்பெரிய விஷயம்,” என்று தெரிவித்துள்ளார் பிரியங்கா மோகன்.
‘மேட் இன் கொரியா’ படத்தில் தனது பொறுப்பை உணர்ந்து சிறந்த நடிப்பைத் தர வேண்டும் என்ற எண்ணத்துடன் நடித்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், கடின உழைப்பிற்குப் பலன் கிடைக்கும் என்பது தமது விஷயத்தில் உண்மையாகி உள்ளது என்று கூறியுள்ளார்.
இந்தப் படம் இந்திய எல்லைகளைத் தாண்டி இவ்வளவு தூரம் சென்றடையும் என்று தான் கனவிலும் நினைக்கவில்லை என்றும் ஒரு நாட்டின் அதிபர் தன் படத்தைப் பார்த்திருப்பதும் தான் ராஷ்டிரபதி பவனில் இருந்ததும் தனக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம் என்றும் அப்பேட்டியில் மேலும் குறிப்பிட்டுள்ளார் பிரியங்கா.

