ஒரு காலத்தில் தென்னிந்திய மொழிப் படங்களில் கவர்ச்சிக் குத்தாட்டம் போட்டு பெயர் எடுத்த நடிகை பபிதாவின் மகள் ஹரிஷா, ‘சூதுகவ்வும் - 2’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
இவரது தாத்தா ஜெஸ்டின், எம்ஜிஆர் காலத்தில் நிறைய படங்களில் சண்டைக் கலைஞராக நடித்தவராம். இவரது தந்தை ஜூடோ ரமேஷும் சண்டைக் கலைஞர்தான். கணினித் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ள இவர், சிறு வயது முதலே சினிமா கனவுகளுடன்தான் வளர்க்கப்பட்டுள்ளார்.
எனவே, சினிமாதான் தனது எதிர்காலம் என்று பள்ளிப் பருவத்திலேயே முடிவு செய்துவிட்டதாகச் சொல்கிறார் ஹரிஷா.
“வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அம்மாவுடன் படப்பிடிப்புக்குச் செல்வேன். அங்குதான் சினிமா மீதான ஆர்வம் மனதில் ஆழமாகப் பதிந்தது.
“சூதுகவ்வும்-2’ படத்தை எனக்கு கிடைத்த ஜாக்பாட் என்றுதான் சொல்வேன். சினிமாவில் அறிமுகமாகும் ஆசையுடன் பல தயாரிப்பு நிறுவனங்களுக்கு எனது புகைப்படங்களை அனுப்பி வந்தேன். அப்படித்தான் ‘சூது கவ்வும்’ படக்குழுவின் அறிமுகம் கிடைத்தது.
“புகைப்படத்தைப் பார்த்து நடிப்புத் தேர்வுக்கு அழைத்தனர். தேர்வு முடிந்த பிறகு முடிவு தெரியாமல், தூக்கம் வராமல் தவித்தேன். நாளை படப்பிடிப்பு என்றால் இன்று இரவு திடீரென ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. நீங்கள்தான் நாயகியாக நடிக்கிறீர்கள் என்று எதிர்முனையில் ஒலித்த குரல் மூலம் அறிந்தபோது நடப்பதெல்லாம் கனவா, நனவா என தெரியாமல் விழித்தேன்.
“இதோ நான் எதிர்பார்த்தபடியே கதாநாயகியாக அறிமுகமாகிவிட்டேன்,” என்று உற்சாகத்தில் பேசுகிறார் ஹரிஷா.
இப்படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்றபோது கதாநாயகன் ‘மிர்ச்சி’ சிவா உட்பட அனைவரும் இயல்பாகப் பேசிப் பழகினராம்.
தொடர்புடைய செய்திகள்
‘மிர்ச்சி’ சிவா படப்பிடிப்புக்கு வந்துவிட்டால் உற்சாகம் மேலும் அதிகரிக்குமாம்.
“இது எனக்கு முதல் படம் என்றாலும், அந்த உணர்வையோ, அச்சத்தையோ கொடுக்காமல் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த பெண்போல் என்னை நடத்தினார்கள்.
“இந்தப் படத்தை எனக்கு கிடைத்த ஆசீர்வாதமாகத்தான் கருதுகிறேன்,” என்று சொல்லும் ஹரிஷா, திரையுலகில் நயன்தாராதான் தனது முன்மாதிரி என்கிறார்.
நயன்தாரா நடிக்கும் படங்களைப்போல் தானும் நடிக்க வேண்டும் என்றும் நல்ல கதாபாத்திரங்களாகத் தேடிவர வேண்டும் என்பதே தனது ஆசை என்றும் கூறுகிறார்.
அடுத்து ‘காஞ்சனா-4’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். மிக விரைவில் அது குறித்த தகவல் அதிகாரபூர்வமாக வெளிவரும் என்கிறார்.
“சிறு வயது முதலே சினிமாவுக்காக என்னைத் தயார்ப்படுத்தி வந்தேன். ராபர்ட் மாஸ்டரிடம் நடனம் கற்றுக்கொண்டதுடன் வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் உடற்பயிற்சி செய்து வந்தேன்.
“மேலும், முறையான உணவுப் பழக்கம் இருந்ததால் கதாநாயகியாக அறிமுகமாவதற்கு ஏற்ற அழகும் கவர்ச்சியும் எனக்கு இருப்பதாகக் கருதுகிறேன்,” என்கிறார் ஹரிஷா.
“திரையுலகைப் பொறுத்தவரை எனக்கு எல்லாம் தெரியும் என்கிற எண்ணம் மட்டும் எந்த காலத்திலும் வந்துவிடக்கூடாது என எனது பெற்றோர் பல முறை அறிவுரை கூறியுள்ளனர்.
“அதில்தான் நான் கவனம் செலுத்துகிறேன். எந்த நேரத்திலும் சினிமா சார்ந்த புதுப்புது நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.
“மேலும், நேரம் தவறாமை என்பதும் மிக முக்கியம் என்பதே பெற்றோர் எனக்கு கொடுத்த மிக முக்கியமான அறிவுரை,” என்கிறார் ஹரிஷா.