பாலிவுட் குட்டி ஜெனிலியா என இந்தி தொலைக்காட்சி ரசிகர்களால் கொண்டாடப்படும் மால்வி மல்ஹோத்ரா, ‘ஜென்ம நட்சத்திரம்’ படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.
இந்தப் படம் ஜூலை 18ஆம் தேதி வெளியாக உள்ளதாகப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதனை உலகமெங்கும் வெளியிடுவதற்கான உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் கைப்பற்றி உள்ளது.
திகிலூட்டும் கதையாக உருவாகி இருக்கும் ‘ஜென்ம நட்சத்திரம்’ படத்தின் முன்னோட்டக் காட்சிகளை விரைவில் வெளியிட்டு விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கவுள்ளது படக்குழு.
இந்நிலையில், தமிழக வார இதழ் ஒன்றுக்கு மனம் திறந்து நேர்காணல் அளித்துள்ள மால்வி மல்ஹோத்ரா, மரண வாசல் வரை சென்று திரையுலகிற்குத் திரும்பியிருப்பதாகக் கூறியுள்ளார்.
தயாரிப்பாளர் யோகேஷ் என்பவரின் ஒருதலைக் காதலால் பாதிக்கப்பட்டு, உடலில் மூன்று இடங்களில் கத்தியால் குத்தப்பட்டு, ரத்த வெள்ளத்தில் சரிந்தவரை சைக்கிளில் வந்த இளைஞர்கள் மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றி உள்ளனர்.
2020ல் நடந்த தாக்குதலில் இருந்து மீண்டு, இப்போது பன்மடங்கு சக்தி கொண்டவராக இந்தக் குட்டி ஜெனிலியா நான்கைந்து மொழிப் படங்களில் நடித்து வருகிறார்
“ஜென்ம நட்சத்திரம்’ படத்துக்கு நான் எனது முழு உழைப்பைக் கொடுத்துள்ளேன். கதை முழுவதும் நாயகியைச் சார்ந்து தான் நடைபோடும். இப்படிப்பட்ட அரிய வாய்ப்பு கிடைத்ததை நினைக்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது.
“இந்தப் படம் ஒரு திகில் படமாக உருவாகி இருந்தாலும் அதில் காதலும் இழையோடும். கதையைப் பற்றி அதிகமாக இப்போது பகிர்ந்துகொள்ள முடியாது. ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம், திரையரங்குகளில் படத்தைப் பார்க்க வரும் அனைவருக்கும் ஒரு நல்ல அனுபவமாக ‘ஜென்ம நட்சத்திரம்’ அமையும் என்கிறார் மால்வி.
தொடர்புடைய செய்திகள்
“என் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை எனக்குக் கொடுத்த இயக்குநர் பி. மணி வர்மனுக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.
“தமிழில் பழைய ‘ஜென்ம நட்சத்திரம்’ படம் பெயர் வாங்கியதைப் போலவே இந்தப் படமும் பெயர் வாங்கும்.
“மரணத்தின் வாசல் கதவைத் தொட்டுவிட்டு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையுலகம் திரும்பியிருக்கிறேன்.
“நிறைய சவால்களை எதிர்கொண்டேன். உடல், மனதளவில் உடைந்து போய்விட்டேன். எந்தப் பெண்ணுக்கும் எனக்கு கிடைத்த அனுபவம்போல் நடக்கக் கூடாது,” என உருக்கமாகக் கூறியுள்ளார் மால்வி.
நண்பர்கள் ஒருவருக்கு ஒருவர் ஒரு வாய்ப்பு இருந்தது எனில் அதுகுறித்து தங்களுக்குள் பகிர்ந்துகொள்வார்கள். அப்படித்தான் திரைத்துறையிலும் சிலருக்கு திரைத்துறையைச் சார்ந்த நண்பர்களின் தொடர்பு இருக்கும். அதன் மூலம் வாய்ப்புகளும் கிட்டும். இதனை தவறென்று நான் சொல்லமாட்டேன் என்பவர், நமக்குக் கிடைக்க வேண்டியதை யாராலும் தடுக்க முடியாது என்றும் உறுதியாகச் சொல்கிறார்.
தனக்கு கொடுக்கப்படும் பாத்திரங்களை உணர்வுகள் மூலம்தான் புரிந்துகொள்வேன் என்பவர், எந்த மொழியானாலும் உணர்வுகள் ஒன்றுதான். அந்தப் புரிதல் இருந்தாலே மொழி சுலபமாகிடும். அதனால்தான் என் மொழியில் அல்லது எனக்குத் தெரிந்த மொழியில் எனக்குக் கொடுக்கப்படும் காட்சியின் உணர்வுகளைப் புரிந்துகொள்கிறேன். பிறகு அந்த உணர்வுகளுடன் வசனம் பேசும்போது சுலபமாகிவிடும் என்கிறார்.
மொழிகளைக் கற்றுக்கொள்ளவும் எனக்கு அலாதி பிரியம் உள்ளது. விரைவில் தமிழ் மொழியைக் கற்றுக்கொண்டு நானே வசனம் பேசி, நடிப்பேன் என்று நம்பிக்கையுடன் கூறும் மால்வி தன்னுடைய உடற்கட்டு ரகசியத்துக்கு யோகாதான் காரணம் என்கிறார்.
மனம், உடல், எல்லாமே ஒருசேர வேலை செய்ய வேண்டும் எனில், யோகா பயில்வது முக்கியம். என்னுடைய கடினமான தருணங்களை எல்லாம் சமாளிப்பதற்கு யோகாதான் உற்ற தோழியாக இருந்தது என்கிறார் மால்வி.
தமிழில் ‘ஜென்ம நட்சத்திரம்’ வெளியீட்டுக்குத் தயார். ஆர்.கண்ணனுடன் ஒரு படம் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. இந்தியில் ‘டம் டம் மஸ்த் கலந்தர்’ படப்பிடிப்பும் நடந்து வருகிறது என்கிறார் மால்வி மல்ஹோத்ரா.