நடிகனாவேன் என நினைத்துக்கூடப் பார்க்கவில்லை: ஷாகிர்

நடிகனாவேன் என நினைத்துக்கூடப் பார்க்கவில்லை: ஷாகிர்

2 mins read
49879a85-4f42-410e-ae10-17bdeb857517
‘லிங்கம்’ இணையத் தொடரில் இடம்பெறும் ஒரு காட்சி. - படம்: விகடன்

‘லிங்கம்’ இணையத்தொடரில் தாம் நல்ல அனுபவங்களைப் பெற்றதாகச் சொல்கிறார் நடிகர் ஷாகிர். இவர் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமானவர்.

நடிகர் ஆர்யாவின் தம்பியான ஷாகிர், ‘புத்தகம்’, ‘அமரகாவியம்’ படங்களில் நாயகனாக நடித்துள்ளார். அப்போது இவரது பெயர் சத்யா. அண்ணன் ஆர்யா தனக்குச் சகோதரர் மட்டுமல்ல, கடவுளைப் போன்றவர் என்கிறார் ஷாகிர்‌.

“சினிமாவிற்காக என் பெயரை மாற்றிக்கொண்டேன். ஷாகிர் என்ற இயற்பெயரில் நடித்துள்ள ‘லிங்கம்’ இணையத்தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

“இனி இயற்பெயரிலேயே நடிப்பேன். நடிகனாவேன் என நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. அண்ணன் ஆர்யா நடிக்க வந்த பிறகுதான் எனக்கும் அந்த ஆசை வந்தது. இல்லையென்றால் நானும் சினிமா பக்கம் வருவதற்கு வாய்ப்பே கிடையாது.

“சில ஆண்டுகளுக்கு முன்பு இயக்குநர் அமீர் இயக்கத்தில் நானும் அண்ணனும் சேர்ந்து ‘சந்தனதேவன்’ என்ற படத்தில் நடித்தோம். 45 நாள்கள்‌ படப்பிடிப்பும் நடந்தது. அதன்பிறகு சில காரணங்களால் அந்தப் படம் மேலும் வளரவில்லை. பின்னர், நல்ல கதாபாத்திரங்களுக்காகக் காத்திருந்தேன்,” என்கிறார் ஷாகிர்.

‘லிங்கம்’ தொடர் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இவருடைய நண்பராம். இருவரும் இணைந்து ஒரு திரைப்படத்தில் பணியாற்றத் திட்டமிட்டிருந்தனராம்.

அதற்கு முன்பாக இணையத் தொடரில் பணியாற்றும் வாய்ப்பு அமைந்ததாம். எதார்த்தமாக கிடைத்த வாய்ப்பை ஏற்று நடித்ததற்குப் பலனாக ‘லிங்கம்’ தொடர் பல்வேறு மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

கதிர், திவ்ய பாரதி, பூர்ணிமா ரவி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ள இணையத்தொடர் ‘லிங்கம்’.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

“சமூக வலைத்தளங்கள் திரைத்துறையில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அந்தப் பக்கம் உங்களைப் பார்க்க முடிவதில்லை. அது உங்கள் வளர்ச்சியில் பாதகத்தை ஏற்படுத்தியுள்ளதா என்று கேட்கிறார்கள்.

“உண்மையில் தொடக்கத்தில் இருந்து இதற்கு நான் முக்கியத்துவம் தரவில்லை. முன்பு அதில் எதிர்மறையான விஷயங்கள் அதிகமான இருந்தன. இப்போதுதான் கொஞ்சம் அந்தப் பக்கம் வந்துள்ளேன்.

“திரைப்படங்களின் விளம்பரங்களுக்குச் சமூக வலைத்தளங்கள் பயனுள்ளதாக உள்ளன. மற்றபடி, அங்குச் சொல்லப்படும் விஷயங்களுக்குச் செவிசாய்க்காமல் இருந்தால் நிம்மதியாக இருக்கலாம்,” என்றார் அவர்.

“‘சந்தனத்தேவன்’ போல் ‘படித்துறை’ படமும் வெளிவரவில்லை என்ற கேள்விக்கு, “நான் ‘படித்துறை’ படத்தில் நடிக்கவில்லை. தயாரிப்பு மட்டுமே என் பணி. ‘சந்தனத்தேவன்’ படத்தைக் கைவிட்டபிறகு, அமீர், வெற்றிமாறன் தயாரிப்பில் ‘மாய வலை’ படம் செய்தேன். அந்தப் படமும் வெளியாகவில்லை,” என்று ஹாகிர் பதிலளித்தார்.

“‘அமரகாவியம்’ படத்தை எனக்காகத் தயாரித்தார் எனது அண்ணன் ஆர்யா. அவர் மீண்டும் எனக்காகப் படம் தயாரிக்கத் தயாராக இருக்கிறார். இப்போது நடிக்கும் படம் அவரது ‘ஷோ பீப்பிள்’ நிறுவன பேனரில் வெளியாக உள்ளது. எனக்கான கதை அமைந்தால் அவர் படம் தயாரிக்கத் தயாராக உள்ளார்.

“எனினும், ‘சார்பட்டா பரம்பரை-2’ படத்தில் அண்ணனுடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கேட்டிருக்கிறேன்,” என்கிறார் ஷாகிர்.

குறிப்புச் சொற்கள்