பத்து மொழிகளில் பின்னணிப் பாடகியாக வலம் வருகிறார் ஷில்பா ராவ்.
‘ஜெயிலர்’ படத்தில் இடம்பெற்ற ‘காவாலா’ பாடலைப் பாடியவர் என்றால், ரசிகர்களுக்கு அவரது முகம் சட்டென நினைவுக்கு வரும்.
இந்தியில் ‘ஜவேதா ஜிந்தகி’, ‘அபச்சா’ (‘கொஞ்சம் இஷ்டம், கொஞ்சம் கஷ்டம்’), ‘ஒரு மாலை நேரம்’ (‘நான் மகான் அல்ல’) என இவர் பாடிய ஹிட் பாடல்களின் பட்டியல் சற்று பெரிதாகத்தான் இருக்கிறது.
தற்போது ‘பன் பட்டர் ஜேம்’ படத்தில் ‘ஏதோ பேசத்தானே’ எனத் தொடங்கும் பாடலை நடிகர் சித்தார்த்துடன் இணைந்து பாடியுள்ளார். இந்தப் பாடலை எழுதியவர் நடிகர் விஜய் சேதுபதி.
தற்போது யூடியூபில் இப்பாடல் ஒரு மில்லியன் பார்வைகளைப் பெற்று, பலரால் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
ஒரு சமயத்தில் தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், குஜராத்தி எனப் பல மொழிகளில் எவ்வாறு பாட முடிகிறது என்று கேட்டபோது, ஒவ்வொரு மொழிகளிலும் வார்த்தைகளுக்கான அர்த்தம், அந்த மொழி பேசப்படும் நிலத்தின் கலாசாரம் ஆகியவற்றைப் புரிந்துகொண்ட பிறகே தாம் பாடல்களைப் பாடுவதாக விளக்கம் அளிக்கிறார் ஷில்பா ராவ்.
“முக்கியமாக, மொழியே தெரியவில்லை என்றாலும் அது சார்ந்த பண்பாடு, கலாசாரம் ஆகியவை தெரிந்தால்கூட போதும். அந்தப் பாடலுக்கான உணர்வுகளை நம் குரலில் தெளிவாக வெளிப்படுத்த முடியும்,” என்று குறிப்பிடும் ஷில்பாவின் சொந்த ஊர் ஜம்ஷட்பூர்.
புள்ளி விவரத்துறையில் பட்ட மேற்படிப்பை முடித்துள்ள ஷில்பாவுக்கு, இளம் வயதில் இருந்து இசையில் ஆர்வம் அதிகமாம்.
தொடர்புடைய செய்திகள்
தந்தை வெங்கட் ராவ் இசைத்துறையில் பட்டம் பெற்றவர். அவர்தான் மகளுக்கு முதல் குரு. ராகங்களில் இருக்கும் வித்தியாசமான நுணுக்கங்களை அப்பாதான் கற்றுக்கொடுத்ததாகச் சொல்கிறார் ஷில்பா.
“மற்ற மொழிகளில் வார்த்தைகளை உச்சரிக்க பயிற்சி அளிக்க வேண்டும். ஆனால், தமிழில்தான் ஒவ்வொரு எழுத்துக்கும் பயிற்சி பெற்றேன். அவ்வளவு நுணுக்கமான, அழகான மொழி.
“சில உணர்வுகளைப் புரிந்து தமிழில் பாடும்போதும் பாடல்களைக் கேட்கும்போதும் அந்தந்த உலகத்துக்கே நம்மை அழைத்துச் செல்லும்.
“எனக்கு ‘காவாலா’ பாடல் வாய்ப்பைத் தந்த இசையமைப்பாளர் அனிருத்துக்கு மனமார்ந்த நன்றி,” எனக் கூறும் ஷில்பா ராவுக்கு, தமிழில் அதிக பாடல்களைப் பாட வேண்டும் என விருப்பம் உள்ளதாம்.