அண்மையில் காசி நகருக்குச் சென்றபோது, அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் தனுஷ்.
மேலும், காசியில் இருந்தபோது தனது மனநிலை எவ்வாறு இருந்தது என்பதையும் அவர் தனது வார்த்தைகளில் விவரித்துள்ளார்.
தற்போது நடிகை கிரித்தி சனோனுடன் இணைந்து ‘தேரே இஷ்க் மே’ என்ற இந்திப் படத்தில் நடித்துள்ளார் தனுஷ். இப்படத்தை ஆனந்த் எல்.ராய் இயக்கியுள்ளார். இதற்கு முன்பு தனுஷ் நடித்த ‘ராஞ்சனா’, ‘அந்தராங்கி ரே’ ஆகிய இந்திப் படங்களை இயக்கியதும் இவர்தான்.
இந்நிலையில், ‘தேரே இஷ்க் மே’ படத்தின் வெற்றிக்காக வாரணாசியில் உள்ள கங்கை கரைக்குச் சென்று தனுஷ், கிரித்தி சனோன், ஆனந்த் எல்.ராய் ஆகியோர் சிறப்பு வழிபாடு செய்தனர். மேலும், படத்துக்குப் பல்வேறு வகையிலும் விளம்பரம் செய்து வருகிறது படத்தின் தயாரிப்புத் தரப்பு.
இந்நிலையில், வாரணாசியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தமது சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் தனுஷ்.
‘ராஞ்சனா’ படப்பிடிப்பு நடந்த பகுதிகளுக்குச் சென்ற அவர், அங்கு எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை மட்டும் இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “பத்தாண்டுகளைக் கடந்தும் ‘குந்தன்’ (’ராஞ்சனா’ படத்தில் தனுஷின் கதாபாத்திரம்) என்னை விட்டுப் பிரியாமல் தொடரும் ஒரு கதாபாத்திரம். இன்றும் காசியின் குறுகிய தெருக்களில் நடக்கும்போது, யாராவது ‘குந்தன்’ என்று அழைத்தால், திரும்பிப் பார்த்துச் சிரித்துவிடுகிறேன்.
“இப்போது மீண்டும் அதே தெருக்களில் நடக்கும்போது, அதே வீட்டின் முன் உட்காரும்போது, அதே தேநீர்க் கடையில் தேநீர் குடிக்கும்போது, எனக்கு குந்தனை அளித்த அந்த மனிதருடன் புனித கங்கை கரையில் சுற்றும்போது, வாழ்க்கை ஒரு வட்டம் என்பதை உணர்கிறேன்,” என்று தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார் தனுஷ்.
தொடர்புடைய செய்திகள்
அவரது ரசிகர்கள் இந்தப் பதிவைப் பரவலாகப் பகிர்ந்து வருகின்றனர். மேலும், காசியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் தனுஷ் வழக்கத்தைவிட கூடுதல் மிடுக்காக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

