தேவதைகள் நிறைந்த இடமாக மாறி வருகிறது கோடம்பாக்கம்.
‘குமார சம்பவம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி உள்ளார் பாயல் ராதாகிருஷ்ணா. பார்ப்பதற்கு குஷ்பு போல் ‘கொழுக் மொழுக்’ என்று இருப்பதால் ரசிகர்களுக்குப் பிடித்துவிட்டது.
இப்படத்தின் நாயகன் விஜய் தொலைக்காட்சியில் ஒளியேறிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் நடித்த இளையர் குமரன். அவர்தான் பாயலுக்கு தமிழ் கற்றுக்கொடுத்தாராம்.
“ஏனெனில் எனது தாய்மொழி கொங்கனி. தமிழை அனைவருமே ‘உலக மொழி’ எனச் சொல்கிறார்கள். எனவே, மூத்த மொழியைப் பேசுவதற்கு மிகவும் விருப்பப்பட்டுத்தான் தமிழில் பேச கற்றுக்கொண்டேன்,” என்று சொல்லும் பாயல், தெலுங்கில் ஏற்கெனவே மூன்று படங்களில் நடித்து முடித்துவிட்டார்.
நிறைய படங்களிலும் இவரைப் பார்க்க முடியுமாம். ‘குமார சம்பவம்’ படத்துக்காக நிறைய இடங்களுக்குப் பயணம் செல்ல வேண்டியிருந்ததாம். அந்த வகையில் திருச்சி, மதுரை எனப் பல இடங்களுக்குச் சென்றுள்ளார். சில பகுதிகளில் உள்ள குக்கிராமங்களையும்கூட இவர் விட்டுவைக்கவில்லை. கிராமங்கள்தான் உண்மையான அழகு என்கிறார்.
அடிப்படையில் பாயலுக்கும் பயணங்கள் என்றால் மிகவும் பிடிக்குமாம்.
“இதன் காரணமாகவே, என்னிடம் கடப்பிதழ்கள் கத்தை கத்தையாக, பெரிய புத்தகம்போல் சேர்ந்துவிட்டன. ஏதேனும் ஒரு இடத்துக்குப் போக வேண்டும் என்றால், தனியாகவே பயணத்துக்குத் தயாராகிவிடுவேன். பெரிய திட்டமிடல் என்று எதுவும் இருக்காது.
“மனத்தில் ஒரு பொறி தோன்ற வேண்டும். அவ்வளவுதான். பல நாடுகளுக்குச் சென்று வந்திருந்தாலும், இந்தியாதான் ஆகப் பிடித்தமான இடம்.
தொடர்புடைய செய்திகள்
“தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாடு, கேரளாவுக்கு மனத்தில் எப்போதும் தனி இடம் உண்டு,” என்று பாசத்துடன் குறிப்பிடும் பாயலுக்கு, தமிழ்நாட்டின் பிரியாணி என்றால் கொள்ளை விருப்பம்.
வாஞ்சையுடன் வரவேற்று, பாசம் காட்டும் தமிழ் மக்கள், லுங்கி, பனியனுடன் வலம்வரும் தமிழ் இளையர்களை தமக்குப் பிடிக்கும் என்கிறார்.
“லுங்கியுடன் கிரிக்கெட் விளையாடும் இளையர்களைப் பார்த்தால், சிறிது நேரம் நின்று ரசித்துவிட்டுத்தான் கிளம்புவேன்,” என்கிறார்.
பாயலுக்கு தமிழ் கலாசாரத்தையும் கற்றுத்தந்து, புண்ணியம் தேடிக் கொண்டவர் வேறு யாருமல்ல. ‘குமார சம்பவம்’ பட நாயகன் குமரன்தான்.
அடுத்து, தனுஷ், பிரதீப் ரங்கநாதன் ஆகியோருடன் இணைந்து நடிப்பதுதான் தமது அடுத்த இலக்கு எனக் குறிப்பிடும் பாயல், சமகாலத்து இளையர்களின் நாடித்துடிப்பை நன்கு அறிந்து வைத்துள்ள பிரதீப், அதற்கேற்ப படங்களைக் கொடுத்து அசத்துவதாகப் பாராட்டுகிறார்.
“’ஓடிடி’ தளத்தில் வெளியான, நடிகர் தனுஷின் அனைத்து படங்களையும் பார்த்துவிட்டதாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ள அவர், தனுஷ் அழைத்தால் அடுத்த நிமிடமே அவர் படத்தில் நடிக்க முன் நிற்பேன்,” என்று கூறுகிறார்.
“இந்திய சினிமாவுக்கு மிகச் சிறந்த வழிகாட்டியாக இருப்பது தமிழ்ச் சினிமாதான். மிகவும் வித்தியாசமான, பலதரப்பட்ட கதைகளைக் காட்சிப்படுத்துகிறார்கள். எனவே, புது முயற்சிகளில் ஈடுபடுவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார்கள்.
“மணிரத்னம், சங்கர், இப்போது அட்லீ, லோகேஷ் என்று காலத்துக்கு ஏற்ப இயக்குநர்களை உருவாக்க தமிழ்ச் சினிமா எப்போதுமே தவறியதில்லை,” என்று அனுபவசாலி போல் பேசுகிறார் பாயல் ராதாகிருஷ்ணா.