சரத்குமாருடன் தாம் இணைந்து நடித்த அனைத்துப் படங்களும் பெரும் வெற்றி பெற்றதாகச் சொல்கிறார் நடிகை தேவயானி.
இவர் மீண்டும் சரத்குமாருடன் இணைந்துள்ள படம் ‘3 BHK’. சித்தார்த், சரத்குமார், தேவயானி ஆகியோர் நடிப்பில், ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் இது.
ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதையடுத்து இப்படக்குழு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய தேவயானி, தமக்கு ஏற்ற, நல்ல கதாபாத்திரத்தைக் கொடுத்த இயக்குநருக்கு நன்றி தெரிவித்தார்.
“நான் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக சினிமா துறையில் இருக்கிறேன். அருண் விஷ்வா மாதிரியான தயாரிப்பாளரை நான் இப்போதுதான் முதன் முறையாகப் பார்க்கிறேன்.
“தன்னுடைய படைப்பை நேசித்து, நம்பிக்கையோடு கொண்டாட வேண்டும் என்று நினைக்கும் தயாரிப்பாளரை இப்போதுதான் பார்க்கிறேன் எனலாம். நான் படம் வெளியான பிறகு திரையரங்குகளில் மக்களின் ரசனையை நேரடியாகப் பார்ப்பது இதுதான் முதன் முறை.
“அப்படி ஓர் அருமையான அனுபவத்தை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்த தயாரிப்பாளருக்கு நன்றி. குழந்தைகள், பெண்கள் என எல்லோரும் திரையரங்குகளில் படம் பார்க்கிறார்கள். இதுபோன்ற விஷயங்கள் மிகவும் அபூர்வம்.
“நாம் வன்முறை, பதற்றம் எனத் தொடர்ந்து படங்கள் பார்த்து வருகிறோம். இப்படியான சமயத்தில் ‘3 BHK’ மாதிரியான குடும்பப் படங்கள் வரும்போது மக்கள் அதைக் கொண்டாடுகிறார்கள்.
தொடர்புடைய செய்திகள்
“இயக்குநர் ஶ்ரீ கணேஷை நாம் கொண்டாட வேண்டும். அவர் இதுபோல் இன்னும் நிறைய படங்களை இயக்க வேண்டும். அவர் குடும்பம் சார்ந்த கதைகளைக் கொடுக்கக்கூடிய நல்ல எழுத்தாளர், இயக்குநர்.
“நான் எப்போது சரத்குமாருடன் இணைந்து நடித்தாலும் அது மகிழ்ச்சியான அனுபவமாகவே இருக்கிறது. அவருடன் நடித்த படங்கள் எல்லாமே வெற்றிப் படங்களாகவே அமைகின்றன.
“இந்தப் படத்தில் நடித்திருக்கும் சைத்ரா, மீதா ஆகியோர் வளர்ந்து வரும் நடிகைகள். என்னைப் போலவே மிகவும் எளிமையாக இருக்கிறார்கள். அவர்களைப் போன்ற நடிகைகள் நமக்குத் தேவை.
“சித்தார்த் நடிக்கும் படங்கள் எல்லாமே வித்தியாசமானவையாகவே இருக்கும். அவர் திரைப்பட இயக்கம் குறித்து நன்கு அறிந்தவர். அதனால் ஒரு படத்தின் அத்தனை அம்சங்களையும் கவனிப்பார்,” என்றார் தேவயானி.