‘பைசன்’ காளமாடன்’ படத்தின் முன்னணி கதாபாத்திரங்களில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, அமீர் எனப் பலரும் நடித்திருக்கின்றனர்.
‘கர்ணன்’ படத்துக்குப் பிறகு மாரி செல்வராஜும் ரஜிஷாவும் இணைந்து பணியாற்றும் படம் இது.
அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜிஷா, ‘பைசன்’ படத்துக்காக தாம் பல பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருந்ததாகக் குறிப்பிட்டார்.
உண்மைதான்! சைக்கிள் ஓட்டவும் நீருக்குள் இறங்கி நத்தை எடுக்கவும் இறைச்சி வெட்டியும் பயிற்சி பெற்றாராம்.
திரையில் அத்தனையும் அசல் வடிவத்தில் தெரிய வேண்டும் என்பதற்காக இந்தப் பயிற்சிகளை மேற்கொண்டதாகச் சொல்கிறார்.
“இப்படியோர் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், இதற்குமுன் நான் ‘கர்ணன்’ படத்தில் ஏற்று நடித்த ‘திரௌபதி’ கதாபாத்திரத்தின் தன்மை இதில் துளியும் வந்துவிடக் கூடாது என்பதிலும் மிகக் கவனமாக இருந்தேன்.
“இந்தப் படத்திலும் நானும் அனுபவம் உள்ள மூத்த நடிகை என்று எனக்குள் ஒரு நினைப்பு இருந்தது. ஆனால் படப்பிடிப்பு தொடங்கிய இரண்டாவது நாளிலேயே நானே அழுதுவிட்டேன்,” என்று சொல்லும்போது பெரிதாகச் சிரிக்கிறார்.
படப்பிடிப்புக்காக தென் மாவட்டங்களில் அதிக நாள்கள் தங்கவேண்டியிருந்ததால், அங்குள்ள வட்டார உணவுப் பண்டங்கள் அனைத்தையும் ஒருபிடி பிடித்திருக்கிறார் ரஜிஷா.
தொடர்புடைய செய்திகள்
“படப்பிடிப்பின்போது செய்யும் கோழிக் குழம்பு, மட்டன் குழம்பு எனக்குப் பிடிக்கும். அதைத் தாண்டி நடிகர் பசுபதி வாங்கிக் கொடுத்த தூத்துக்குடி மக்ரூனும் எனக்குப் பிடித்திருந்தது,” என்றார்.
‘கர்ணன்’ படத்துக்குப் பிறகு மாரி செல்வராஜ் இயக்கிய இரண்டு படங்களிலும் இவர் நடிக்கவில்லை. இதுகுறித்து அவரிடம் முன்பே நேரடியாகக் கேட்கப்போக, பொருத்தமான பாத்திரங்கள் இல்லை என்பதால்தான் அழைக்க முடியவில்லை என விளக்கம் அளித்தாராம்.
“ஆனால் திடீரென ஒருநாள் கைப்பேசியில் தொடர்புகொண்டார். புதுப் படத்தில் அக்கா கதாபாத்திரம் உள்ளது. அதில் நடிக்க இயலுமா என்று அவர் கேட்க, உங்கள் படத்தில் நடிப்பதுதான் முக்கியம். அம்மா கதாபாத்திரமாக இருந்தாலும் பரவாயில்லை என்றேன்.
“நான் ‘கர்ணன்’ படத்துக்காக நீச்சல் கற்றுக்கொண்டேன். அதற்குப் பிறகு நான் நீச்சல் பயிற்சியில் ஈடுபடவே இல்லை. இந்தப் படத்தில் நடிக்கும்போது கிணற்றில் குதிப்பதுபோன்ற ஒரு காட்சி இருந்தது. ‘நீச்சல் தெரியும் இல்லையா?’ என்று இயக்குநர் என்னிடம் கேட்டபோது, ‘தெரியும்’ என்று கூறிவிட்டேன்.
“காட்சியைப் படமாக்கியபோது, உடன் நடித்த அனுபமா தண்ணீரில் குதித்து நீந்தத் தொடங்கிவிட்டார். நானோ தண்ணீரில் மூழ்கிக்கொண்டிருந்தேன்.
“சில வினாடிகளுக்குப் பிறகு ‘அவ்வளவுதான் நம் வாழ்க்கை’ என மனத்தில் மின்னல் போல தோன்றியது. ஆனால் கண்திறந்து பார்த்தபோது, எதிரே குளிர்கண்ணாடி, ஷூவுடன் தண்ணீரில் குதித்து என்னைக் காப்பாற்றி இருந்தார் இயக்குநர். அவர் அவ்வளவு நம்பிக்கைக்குரியவர்.
“மாரி செல்வராஜ் படங்கள் என்றால் தரமாக இருக்கும் என்பது எல்லாருக்கும் தெரியும். இந்தப் படத்தில் விளையாட்டு, குடும்பம் , காதல் எனப் பல்வேறு அம்சங்கள் உள்ளன.
“திருநெல்வேலி ஊர் மக்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். ஏனென்றால் நான் கேரளத்தைச் சேர்ந்த ஒரு மலையாளி. எனக்குத் தமிழ் கற்றுக்கொடுத்து, தென் தமிழகத்தில் ஒருவராக மாற்றிவிட்டார்கள். அவர்களின் அன்புக்கு நன்றி,” என்றார் ரஜிஷா விஜயன்.