மக்களுடன் மக்களாக ஒரு சுதந்திரப் பறவைபோல் வாழ விரும்புவதாகக் கூறியுள்ள நடிகை நித்யா மேனன், சினிமாவை விட்டு விலகிச் செல்ல பிரியப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
சிறு வயதில் இருந்தே நடனம் ஆடு, பாட்டுப் பாடு, கேமரா முன்பாக வந்து நடி என எனது அம்மா என்னை வற்புறுத்துவார். ஆனால், சினிமா என்றாலே எனக்கு சுத்தமாகப் பிடிக்காது என்று அவர் கூறியுள்ளார்.
‘காதலிக்க நேரமில்லை’ படத்தை விளம்பரப்படுத்தும் தருவாயில் செய்தியாளர்களிடம் பேசிய நித்யா மேனன், “எனக்கு பிடிக்காத துறை என ஒன்று உள்ளது எனில், அது இந்த திரைத்துறை தான்.
“இப்போதும்கூட வேறு ஏதேனும் துறையில் சத்தமே இல்லாமல் சேர்ந்துவிடலாம் என்று தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஒரு சாதாரணமான வாழ்க்கை வாழ விரும்புவதே இதற்குக் காரணம்.
“சந்தைக்குச் செல்வது, காய்கறிகள் வாங்குவது, வீட்டை அழகாக வைத்துக்கொள்வது, அலுவலகம் செல்வது, குடும்பத்தைப் பராமரிப்பது என ஒரு சாதாரண பெண்ணாக வலம் வர விரும்புகிறேன்.
“பயணம் செய்வதற்கு எனக்கு அலாதி பிரியம் என்பதால் விமானியாக விரும்பினேன். இப்போது ஒரு நடிகையாக இருப்பதால் சுதந்திரமாக இருப்பதை மறந்துவிட வேண்டும். பூங்காவில் நடப்பது, உடற்பயிற்சிகள் செய்வது எனக்கு ரொம்பவே பிடிக்கும். ஆனால், அதெல்லாம் இப்போது முடியாது. சில சமயங்களில் இதெல்லாம் நமக்குத் தேவையா என்றுகூட தோன்றும்,” என்று வெளிப்படையாகக் கூறியுள்ளார் நித்யா மேனன்.
அண்மையில், சினிமாவில் நடித்தது போதும். இதைவிட்டு வேறு ஏதாவது செய்கிறேன். எனக்கு இது பிடிக்கவில்லை என்று என் பெற்றோர்களிடம் சொல்லிவிட்டேன். அவர்களும் உனக்கு எது பிடிக்கிறதோ அதைச் செய் என சொல்லிவிட்டனர். இந்நிலையில்தான் எனக்கு தேசிய விருது கிடைத்தது.
“அந்த விருது கிடைத்த நிலையில்தான், நம்மை சினிமா விடாது என்றும் கடவுள் நமக்குத் தரும் லஞ்சம் இது என்றும் நினைத்துக் கொண்டேன்.
“சிறு வயதில் இருந்தே கேமரா முன்பாக நிற்கவே பிடிக்காது. சினிமா நடிகையாக மாறியதில் இருந்து தனிப்பட்ட சுதந்திரத்தை இழந்ததாக உணர்கிறேன்.
“வைல்டு லைஃப் புகைப்படக்காரர் போல வாழ ஆசைப்பட்டேன். புகைப்படம் எடுப்பதில் எனக்கு தனி ஆர்வம் இருக்கிறது. ஆனால் சினிமாவை விட்டு விலக முடியாத சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளேன்,” என்று நித்யா மேனன் கூறினார்.
விரைவில் சிங்கம் மாதிரி விஷால் மீண்டு வருவான்: ஜெயம் ரவி நெகிழ்ச்சி
விஷாலுடைய நல்ல மனசுக்கும் அவனது குடும்பத்தினரின் நல்ல மனசுக்கும் கண்டிப்பாக அவன் விரைவிலேயே சிங்கம் போல் மீண்டு வருவான் என்று ஜெயம் ரவி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ‘காதலிக்க நேரமில்லை’.
யோகிபாபு, வினய், ஜான் கொக்கன், லட்சுமி ராமகிருஷ்ணன், வினோதினி உள்ளிட்ட பலரும் படத்தில் நடித்துள்ளனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் வரும் ஜனவரி 14ஆம் தேதி, பொங்கல் தினத்தன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
இப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வில் பேசிய ஜெயம் ரவி, “விஷாலை விட ஒரு தைரியசாலி யாரையும் பார்க்க முடியாது.
“அவன் இப்போது ஒரு மோசமான கட்டத்தில் இருக்கிறான். ஆனால் அவனுடைய தைரியம் அவனைக் காப்பாற்றும்.
“கூடிய சீக்கிரம் அவன் வருவான். அவனுடைய நல்ல மனசுக்கும், அவனது குடும்பத்தினரின் நல்ல மனசுக்கும் கண்டிப்பாக அவன் விரைவிலேயே சிங்கம் போல மீண்டு வருவான்,” என்று ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற ‘மதகஜராஜா’ படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் விஷால். அப்போது அவருக்கு ஏற்பட்ட கை நடுக்கம், கண் பார்வை பிரச்சினை உள்ளிட்ட அனைத்துமே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விஷால் கை நடுக்கத்துடன் பேசும் காணொளிப் பதிவு, இணையத்தில் வேகமாகப் பரவியது. பலரும் விஷால் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும் என்று தெரிவித்து வருகிறார்கள்.

