ஆங்கிலத்தில் பேச முடியவில்லையே என்று மிகவும் வருத்தமும் கவலையும் அடைந்து வருவதாகக் கூறியுள்ளார் ‘லப்பர் பந்து’ சுவாசிகா.
எனினும், கூடிய விரைவில் தம்மால் அம்மொழியைக் கற்றுத்தேர முடியும் என நம்புவதாக அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“பள்ளிப்படிப்பை முடிக்கும் முன்பே திரையுலகில் அறிமுகமாகிவிட்டேன். பின்னர், பகுதி நேரமாக 12ஆம் வகுப்பும் பிறகு நடனத்தில் டிப்ளோமா படிப்பும் முடித்தேன். ஆனால், இன்றுவரை ஆங்கிலத்தில் மட்டும் சரியாகப் பேச முடியவில்லை,” என்று கவலைப்படுகிறார் சுவாசிகா.
அதுபோன்ற தருணங்களில் எல்லாம் இந்தி நடிகை கங்கனா ரணவத்தை நினைத்துக்கொள்வாராம்.
இந்தியில் அறிமுகமான பின்னர் கங்கனா ரணவத் அம்மொழியில்தான் அதிகம் பேசுவார். அவரது பேட்டிகளும் இந்தியில்தான் அமையும். பிறகு ஆங்கிலத்தில் பேசத்தொடங்கிய அவர், அம்மொழியில்தான் பெரும்பாலான பேட்டிகளை அளிக்கிறார்.
அதேபோல் தாமும்கூட ஒருநாள் ஆங்கிலத்தில் சரளமாகப் பேச முடியும் என்று நம்புவதாகக் கூறியுள்ளார் சுவாசிகா.
“தமிழில் அறிமுகமான ஹன்சிகா, ஷ்ரேயா போன்ற பிறமொழி பேசும் நடிகைகள், பல படங்களில் நடித்து வெற்றி பெற்ற பிறகும் சரிவரத் தமிழில் பேச முடியவில்லை. ஆனால் கர்நாடகா, கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்து வரும் கதாநாயகிகள் குறுகிய காலத்திலேயே தமிழில் பேசக் கற்றுக்கொள்கிறார்கள்.
“அதேபோல் தனக்கும் ஒருநாள் ஆங்கிலம் வசப்படும் என்று சுவாசிகா சொல்வது அவரது தன்னம்பிக்கையை வெளிப்படுத்துகிறது,” என்று சமூக ஊடகத்தில் பலரும் அவரைப் பாராட்டுகிறார்கள்.