‘அயோத்தி’ படத்தை அடுத்து, அதன் நாயகி பிரீத்தி அஸ்ராணியை வேறு எந்தப் படத்திலும் பார்க்க முடியவில்லையே என்று ரசிகர்கள் யோசித்துக் கொண்டிருக்க, ‘இதோ இங்கேதான் இருக்கிறேன்’ என்று ‘கிஸ்’ படத்தின் மூலம் பதில் அளித்துள்ளார் பிரீத்தி.
அடுத்து ‘பல்டி’, ‘கில்லர்’, முன்னணி கதாநாயகர்களுடன் தலா ஒரு படம் என்று கைவசம் பல வாய்ப்புகளை வைத்துள்ளார் இந்த இளம் நாயகி.
“தொலைக்காட்சியில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து திறமையை நிரூபித்த நடிகர்களில் கவினும் ஒருவர். பக்கத்து வீட்டுப் பையன் போன்று இயல்பாகப் பழகுகிறார்.
“சிவகார்த்திகேயன், சந்தானம், யோகி பாபு எனப் பல சின்னத்திரைக் கலைஞர்கள் திரைத்துறையில் அசத்துவதைக் கண்டு பாலிவுட் பட உலகமும் வியந்துபோகிறது.
“யாரையும் குறைவாக மதிப்பிடக்கூடாது என்ற முக்கியமான பாடத்தை தமிழ்த் திரையுலகம் கற்றுக்கொடுத்துள்ளது. மேலும், திறமை என்பது எங்கே ஒளிந்திருக்கும் என்பதை எளிதில் கண்டறிய முடியாது. ஆனால், உண்மையான திறமைசாலிகள் அடையாளம் காணப்பட்டவுடன் அவர்கள் ஒளிர்வதை யாராலும் தடுக்க முடியாது,” என்று சொல்லும் பிரீத்திக்கு, ஐந்து மொழிகள் அத்துப்படியாம்.
ஏற்கெனவே இந்தி, ஆங்கில மொழிகளில் சரளமாகப் பேசக்கூடிய இவர், கன்னடம், தமிழ், மலையாள மொழிகளையும் கற்றுத் தேர்ந்துள்ளார்.
“கொவிட்-19 காலகட்டத்தில்தான் பல மொழிகளைக் கற்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. தமிழ் கற்பதற்கும் பேசுவதற்கும் இனிய மொழி.
“என்னால் திருக்குறளைக்கூட சரியாகப் படித்து அதன் பொருளைக் கூறமுடியும்,” என்று பிரீத்தி சொல்வதைக் கேட்கும்போது வியப்பாகத்தான் உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
எஸ்.ஜே.சூர்யா நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கி, நடிக்கும் ‘கில்லர்’ படத்தில் இவர்தான் கதாநாயகி.
சூர்யாவின் நடிப்பு எப்போதுமே தனித்துவமானது எனப் பாராட்டுகிறார்.
“அவர் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்கள் அதிரடியாக, வித்தியாசமானதாக இருக்கும். எப்போதுமே தனது படங்களின் முழுக் கதையையும் தொடக்கத்திலேயே சொல்லிவிடுவார். அவருடைய இந்தப் பாணி எனக்கும் மிகவும் பிடிக்கும். ‘கில்லர்’ படத்தையும் இப்படித்தான் இயக்கியிருப்பார் என நினைக்கிறேன்.
“எனக்குத் தெரிந்தவரை திரைக்கதையை மிக சுவாரசியமாக நகர்த்திச் செல்லும் இயக்குநர்களில் எஸ்.ஜே.சூர்யா மிக முக்கியமானவர்,” என்கிறார் பிரீத்தி அஸ்ராணி.
நேரில் பார்க்கும் அனைவருமே இவரது அழகு ரகசியத்தைத்தான் மறக்காமல் கேட்கிறார்களாம். ஒப்பனை செய்துகொள்வதில் தமக்கு அறவே விருப்பம் இல்லை என்றும் ஒருவேளை அதுதான் தமது அழகின் ரகசியமாக இருக்கக்கூடும் என்றும் சொல்கிறார்.
“சூரிய ஒளியில் இருந்து காத்துக்கொள்ள சில ‘கிரீம்’களை மட்டும் பயன்படுத்துவேன். அதுவும் வெளியே போனால் மட்டும்தான். நிறைய பழங்கள் சாப்பிடுகிறேன். உணவு விஷயத்தில் மிகக் கவனமாக இருப்பேன்.
“காலையில் சூரிய நமஸ்காரமும் உடற்பயிற்சியும் செய்தே ஆக வேண்டும். இதன்மூலம் மனத்திலும் உடலளவிலும் மிக லேசாக உணரமுடியும்.
“தற்போது நான் நடித்து முடித்துள்ள ‘பல்டி’ உள்ளிட்ட படங்கள் வெளியீடு காணத் தயாராக உள்ளன. ‘பல்டி’ படத்தில் செல்வராகவன் தனது நடிப்பால் மிரட்டியுள்ளார். அவர் நடிப்புக்கு நான் ரசிகையாகிவிட்டேன்.
“அதேபோல் ‘கில்லர்’ படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு பார்ப்பவர்களை அசர வைக்கும்.
“இவ்விரு படங்களும் எனக்கு நிச்சயம் பெயர் வாங்கித் தரக்கூடிய படைப்புகளாக அமையும் என உறுதியாக நம்புகிறேன்,” என்றார் பிரீத்தி அஸ்ராணி.