தனக்கு ரகசியத் திருமணம் நடந்துவிட்டதாக வெளியான தகவலை நடிகை மெஹ்ரின் பிர்சாதா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
தமிழில் தனுஷுடன் ‘பட்டாஸ்’, வசந்த் ரவியுடன் ‘இந்திரா’ ஆகிய படங்களில் நடித்துள்ள இவர், தற்போது தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும் பிரபல அரசியல் பிரமுகரின் வாரிசுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. எனினும் பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக மணமக்களிடையே பிரிவு ஏற்பட்டதால் திருமணம் நடக்கவில்லை.
இந்நிலையில், மெஹ்ரின் ஒரு தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டு ரகசிய வாழ்க்கை வாழ்ந்து வருவதாக தகவல் பரவியது. இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் அவர் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தம்மைப்பற்றி தொடர்ந்து மோசமான தகவல்கள் வெளிவருவதால் வேறு வழியின்றி விளக்கம் அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். போலியான தகவல்களை வெளியிட்டு அதன் மூலம் இரண்டு நிமிட புகழைத் தேடிக்கொள்ளும் மோசமான நபரின் வேலையை நான் பொருட்படுத்தவில்லை.
“எனக்குத் திருமணம் ஆகவில்லை. அவ்வாறு ஆகும்போது இந்த உலகம் அறிய நடைபெறும். என் சொந்த வாழ்க்கையைப் பற்றிய தகவல்களுக்கு நானே ஆதாரம்,” என்று மெஹ்ரின் மேலும் தெரிவித்துள்ளார்.

