‘வாழை’ படத்தில் சிவனணைந்தானின் அம்மாவாக நடித்தவர் நடிகை ஜானகி. அவர் ‘யூடியூப்’ ஒளியலை வரிசை ஒன்றுக்கு நேர்காணல் அளித்திருந்தார். அதில்,மாரி செல்வராஜின் இயக்கம் குறித்தும் படப்பிடிப்புத் தளத்திற்குத் திடீரெனத் துருவ் விக்ரம் வந்து இவருடைய நடிப்பைப் பாராட்டியது பற்றியும் பகிர்ந்துள்ளார்.
இவர் நடித்த வாழை படம் கடந்த வாரம் வெளியானது. இப்படம் சூரி நடிப்பில் வெளியான கொட்டுக்காளி படத்தைப் பின்னுக்குத் தள்ளி வசூலை வாரிக்குவித்து வருகிறது.
வாழை படத்தில் உயிரிழந்த கணவரின் புகைப்படத்திற்கு முன் நின்று அழுது புலம்பும் மனைவியாக மகளையும் மகனையும் வாழைக்காய் சுமந்து வளர்க்கும் வயதான தாயாக ஜானகி நடித்திருப்பார். பரியேறும் பெருமாள், கர்ணன் உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து அவருக்கு இந்தப் படத்தில் மிகப்பெரிய கதாபாத்திரத்தை மாரி செல்வராஜ் கொடுக்க அந்தக் கதாபாத்திரத்தைக் கச்சிதமாக ஏற்று நடித்து ரசிகர்களின் பாராட்டுக்களைப் பெற்றுள்ளார் ஜானகி.
இவர் அளித்த நேர்காணலில், “எனக்கு மட்டுமில்லை, படத்தில் நடித்த அத்தனை நடிகர்களும் என்ன செய்ய வேண்டும், எப்படி நடிக்க வேண்டும் என ஒவ்வொரு காட்சியையும் நடித்துக் காட்டுவார் மாரி செல்வராஜ். சேற்றில் இறங்க வேண்டும் என்றால் முதல் ஆளாக இறங்கி விடுவார் அவர்,” என இயக்குநர் மாரி செல்வராஜின் இயக்கம் குறித்து மிகவும் பெருமையாகக் கூறினார் நடிகை ஜானகி.
“வாழை படத்தின் படப்பிடிப்பில் இருந்த போது கடைசியாக அந்த ‘பாதகத்தி’ பாடல் படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது, மாரி செல்வராஜை பார்க்க முகக்கவசம் போட்டுக்கொண்டு துருவ் விக்ரம் வந்தார்,” என அவர் கூறினார்.
“மாரி செல்வராஜை பார்க்கப் பலர் வருவர். அவர்கள் வரும்போது எங்களையும் பார்த்து விட்டு ஒரு பேச்சுக்கு வணக்கம் வைத்து விட்டுச் செல்வார்கள். ஆனால், துருவ் விக்ரம் மட்டும் என் முன்னால் வந்து நின்று முகக்கவசத்தைக் கழட்டி விட்டுப் பேசியதும் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. உங்கள் நடிப்பு அற்புதமாக இருந்தது. இன்னும் என்னால் அதிலிருந்து வெளியே வர முடியவில்லை,” எனத் துருவ் விக்ரம் கூறியதாகத் திருவாட்டி ஜானகி தெரிவித்தார். “அதையெல்லாம் என்னால் மறக்கவே முடியாது,” என்றார் ஜானகி. மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் அடுத்ததாக ‘பைசன்’ படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.