இன்னும் ஒரு தமிழ்ப் படத்தில்கூட நடிக்கவில்லை. அதற்குள் தமிழ் இளையர்கள் இடையே பிரபலமாகிவிட்டார் ருக்மிணி வசந்த்.
பிற மொழிகளில் நடித்து வரும் இவரை தமிழ்த் தயாரிப்பாளர்கள் விட்டுவிடுவார்களா என்ன?
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஏஸ்’ படத்தின் நாயகி. சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மதராசி’ படத்திலும் சூட்டோடு சூடாக ஒப்பந்தமாகி உள்ளார்.
“தமிழில் எடுத்த எடுப்பிலேயே இவ்வளவு பெரிய வாய்ப்புகள் அமையும் என நினைக்கவே இல்லை. இதற்காக விஜய் சேதுபதி, சிவா, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோருக்கு நன்றி.
“தமிழ் ரசிகர்கள் நல்ல நடிப்பை தயக்கமின்றிப் பாராட்டக் கூடியவர்கள். நிச்சயம் அவர்களிடம் நல்ல பெயரெடுப்பேன்,” என்கிறார் ருக்மிணி.
மறைந்த ராணுவ அதிகாரி வசந்த் வேணுகோபாலின் ஒரே மகள்தான் ருக்மிணி. காஷ்மீர் எல்லைப் பகுதியில் இந்திய ராணுவத்துக்காக உயிர்த்தியாகம் செய்தவர் வசந்த் வேணுகோபால். இதற்காக இந்திய அரசு அசோக சக்ரா விருது வழங்கியுள்ளது.
ருக்மிணியின் சொந்த மாநிலமான கர்நாடகாவில் இருந்து இந்த விருதைப் பெற்ற முதல் ராணுவ அதிகாரி இவர்தான்.
ராணுவப் பள்ளியில் படித்த ருக்மிணி சிறு வயது முதல் ராணுவ வீரர்களுக்கான குடியிருப்பில் வளர்ந்தவர். உயிர்நிலைப் பள்ளி்ப்படிப்பை விமானப்படைப் பள்ளியில் முடித்தவருக்கு நடிப்பின் மீது ஆர்வம். அதனால் லண்டனில் உள்ள புகழ்பெற்ற கல்லூரியில் நடிப்புக் கலை தொடர்பான படிப்பை மேற்கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
இவரது தாயார் சுபாஷினி வசந்த் கைதேர்ந்த நடனக் கலைஞர். சொந்தமான நடன அகாதெமி நடத்துவதுடன், மறைந்த ராணுவ அதிகாரிகளின் நலனுக்காக அமைப்பு ஒன்றையும் நடத்தி வருகிறார்.
2019ஆம் ஆண்டு இந்தியில் வெளியான ‘அப்டேர்ஸ்’தான் ருக்மிணியின் முதல் படம். அதன் பின்னர் சில தெலுங்கு, கன்னடப் படங்களில் நடித்துள்ளார். ருக்மிணியின் பார்வை கடந்த ஆண்டுதான் கோலிவுட் பக்கம் திரும்பியது. அடுத்தடுத்து இரண்டு முன்னணி நாயகர்களுடன் இணைந்து நடிக்கிறார்.
தெலுங்கில் ஜூனியர் என்டிஆர், விஜய் தேவரகொண்டா ஆகியோருக்கும் ஜோடியாகி உள்ளார்.
எந்தமொழிப் படமாக இருந்தாலும், தனக்கான வசனங்களைத் தனியாக ஒரு காகிதத்தில் எழுதிக்கொண்டு, அதைப் பார்த்துப் பயிற்சி செய்கிறார். லண்டன் நடிப்புக் கல்லூரியில் கற்றுக்கொடுத்த நுணுக்கமாம். அதனால் வசனங்களின் அர்த்தத்தையம் ஆழத்தையும் புரிந்துகொண்டு செயல்பட முடிவதாகச் சொல்கிறார்.
“எனக்கு செல்லப்பிராணிகள் என்றால் மிகவும் பிடிக்கும். நாம் எந்த அளவுக்குப் பாசம் காட்டுகிறோமோ, அதே அளவு அவை பாசம் காட்டக்கூடியவை.
“ஓய்வு கிடைத்தால் உடற்பயிற்சி செய்வேன். உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொண்டால்தான் நம்மால் அதிகம் உழைக்க முடியும். நல்ல வெற்றிகளும் வந்து சேரும்.
“ஒரு படத்தை தயாரிக்கும் தனி மனிதரோ அல்லது பெரிய நிறுவனமோ, யாராக இருந்தாலும் அவர்களுடைய சிரமங்களை நன்கு அறிந்துள்ளேன். நான் குறித்த நேரத்துக்குப் படப்பிடிப்புக்கு வருவதாகச் சொல்கிறார்கள். அது பெரிய விஷயமல்ல.
“தயாரிப்பாளர் நன்றாக இருந்தால்தான் கலைஞர்கள் நன்றாக இருக்க முடியும். இந்தப் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டால் எளிதில் நல்ல பெயர் வாங்கலாம்,” என்கிறார் ருக்மிணி வசந்த்.

