தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நான் பார்த்து வியந்த மனிதர் இளையராஜா: ரஜினி புகழாரம்

3 mins read
320289b4-1eac-4818-aae0-2f6996588cc5
சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் சனிக்கிழமையன்று (செப்டம்பர் 13) நடந்த பாராட்டு விழாவில் பங்கேற்ற ரஜினிகாந்த், கமல்ஹாசன், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி. - படம்: ஊடகம்

இசையமைப்பாளர் இளையராஜாவின் 50 ஆண்டுத் திரையுலகப் பயணத்தைச் சிறப்பிக்கும் வகையில் அவருக்குத் தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் சனிக்கிழமை (செப்டம்பர் 13) நடந்தது.

இந்நிகழ்வில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபு, கார்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தமிழ்த் திரையுலகம் மட்டுமன்றி இந்தியத் திரையுலகையும் தமது இசை ஆளுமையால் கட்டிப்போட்டவர் இளையராஜா.

ஆயிரக்கணக்கான படங்களுக்கு இசையமைத்துள்ள இவருக்கு வயது 82.

இப்போதும் படங்களுக்கு இசையமைத்தும் சிம்பொனி இசை அரங்கேற்றம் செய்தும் பல சாதனைகளை அவர் நிகழ்த்தி வருகிறார்.

அவருடைய 50 ஆண்டுத் திரைப்பயண நிறைவுக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்ததோடும், அவருக்குத் தமிழக அரசு சார்பில் விழா எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

இதையடுத்து, லண்டனில் சிம்பொனி இசை அமைத்த இளையராஜாவை பாராட்டும் விதமாகவும் அவரின் 50 ஆண்டு சாதனையைச் சிறப்பிக்கும் வகையிலும் அவர் பிறந்தநாளான ஜூன் 2ஆம் தேதி மிகப்பெரிய பாராட்டு விழா நடத்த தமிழக அரசு திட்டமிட்டிருந்தது. எனினும், சில காரணங்களால் அந்த விழா தள்ளிப்போனது.

அந்த விழா, சனிக்கிழமை நடந்தது. ’அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே..’ எனும் பாடலை நிகழ்ச்சி தொடங்கியதும் இசையமைப்பாளர் இளையராஜா பாடினார்.

அப்போது, உடன் அமர்ந்திருந்த நடிகர் கமல்ஹாசனிடம் ஒலிவாங்கியை நீட்டி அவரையும் பாட வைத்தார் இளையராஜா. அந்தச் சுவாரசியமான காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகி வருகிறது.

‘எப்போதும் ராஜா தான்’

விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “இளையராஜா பார்க்காத வெற்றிகள் இல்லை. ஆனால், ஒருவருக்கு தொடர்ந்து வெற்றிகள் மட்டுமே கிடைக்கக் கூடாது. அவ்வப்போது, தோல்விகளையும் சந்திக்க வேண்டும். அப்போதுதான் வெற்றியின் சுவை தெரியும். அவர் கொடிகட்டி பறந்தபோது, இன்னொரு இசையமைப்பாளர் (ஏ. ஆர். ரஹ்மான்) வந்தார். அவர் வந்தபின் மிகப்பெரிய தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நான் உள்பட பலர் அந்தப் புதிய இசையமைப்பாளரிடம் சென்றோம்.

“ஆனால், என்ன நடந்தாலும் தி. நகரிலிருந்து ‘பிரசாத் ஸ்டூடியோ’ வுக்கு காலை 6 மணிக்கு இளையராஜாவின் கார் எப்போதும்போல் சென்றுகொண்டிருந்தது. சகோதரர் பாஸ்கருக்குச் சிந்தாத கண்ணீர், மனைவிக்குச் சிந்தாத கண்ணீர், உயிராக எண்ணிய மகளுக்குச் சிந்தாத கண்ணீர், நண்பர் எஸ்.பி. பாலசுப்பிரமணிக்குச் சிந்தியது,” என்றார்.

தான் பார்த்து வியந்த மனிதர் இளையராஜா எனக் கூறிய அவர், உலகத்தில் வாழும் அனைத்து தமிழர்களின் ரத்தம், நாடி, உயிரிலும் இளையராஜாவின் இசை கலந்துள்ளதாகக் கூறினார்.

“50 ஆண்டுகளில் 1,600 படங்கள், 8,000 பாடல்கள் என்பது சாதாரணமன்று,” என ரஜினி இளையராஜாவின் திரையுலகப் பயணத்தைப் புகழ்ந்தார்.

இசைஞானி பெயரில் விருது

இந்நிலையில் விழாவில் பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இசைத் துறையில் பொன் விழா கண்டுள்ள இசையமைப்பாளா் இளையராஜாவுக்கு நாட்டின் உயரிய பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமென மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

மேலும், இசைத் துறையில் ஆா்வத்துடன் சிறந்த இசையைப் படைக்கும் இசைக் கலைஞா்களை ஊக்குவிக்கும் விதமாகத் தமிழக அரசு சாா்பில் இனி ஆண்டுதோறும் இசைஞானி இளையராஜா பெயரில் விருது வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.

சங்கத்தமிழ், தமிழ் இலக்கியங்களுக்கு இசையமைத்து அவற்றை இசைத் தட்டுகளாக வெளியிட வேண்டும் என இளையராஜாவிடம் முதல்வர் கோரிக்கை விடுத்தார்.

குறிப்புச் சொற்கள்