ஆ. விஷ்ணு வர்தினி
‘இந்தியன் 2’ திரைப்படத்தின் நாயகன் கமல்ஹாசனை ஆரவாரத்துடன் வரவேற்றனர், மரினா பே சேண்ட்ஸ் மண்டபத்தில் சனிக்கிழமை (ஜூன் 29) திரண்டிருந்த கிட்டத்தட்ட 1,200 சிங்கப்பூர் ரசிகர்கள்.
கமலுடன் நடிகர்கள் சித்தார்த், எஸ். ஜே சூர்யா ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
மலேசியாவில் அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிமையும் ரசிகர்களையும் சந்தித்தபின், தம் படக்குழுவினரோடு சிங்கப்பூருக்கு வருகைபுரிந்தார் கமல்.
‘இந்தியன் 3’ படம் வெளிவர இருப்பதே ‘இந்தியன் 2’ படத்தைத் தூக்கி நிறுத்துவதாகக் கூறிய கமல், மூன்றாம் பாகத்துக்கும் மக்களின் ஆதரவை நாடினார். ‘இந்தியன்’ படத்தயாரிப்பின்போது மக்களுக்கு அதன் வெற்றி குறித்து இருந்த ஐயம், ‘இந்தியன் 2’ தயாரிப்பின்போது இல்லை என்றும் அதுவே படத்தரத்தை உறுதிப்படுத்துவதை முன்னுரிமை ஆக்கியுள்ளது என்றும் அவர் சொன்னார்.
கடந்த ஜூன் 25ஆம் தேதியன்று வெளியான ‘இந்தியன் 2’ முன்னோட்டக் காட்சி, இதுவரை 10 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது.
அப்படத்தைக் காண்பதற்காக ஆர்வத்துடன் காத்திருக்கும் ரசிகர்களில் ஒருவரான கஸாலி, 30, “இயக்குநர் சங்கருக்கே உரிய பிரம்மாண்டத்திற்கு படத்தில் குறைவிருக்காது,” என்று நம்புகிறார்.
இந்தியனுக்கு இசையமைத்த ஏ. ஆர். ரகுமானின் இசைப் பாணியை அனிருத்தின் இசையோடு மக்கள் ஒப்பிட்டு வருகின்றனர். அனிருத்தின் நவீன இசை, ‘இந்தியன் 2’ படத்தைப் புத்தாக்கமும் இளமையும் ததும்பும் புதுயுக திரைப்படமாக மாற்றியுள்ளதில் மகிழ்ச்சி தெரிவித்தார், இந்நிகழ்வில் தொண்டூழியராகச் செயல்பட்ட ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவி அக்னஸ் திவா, 18.
கமலின் சமூக நோக்குள்ள திரைப்படங்கள்வழி தம் பிள்ளைகளுக்குப் பண்புநெறிகளைப் புகட்டியதாகக் கூறினார், 69 வயது ரசிகை பஞ்சவர்ணம் ஜெயராம்.
கமலின் திரைப்படங்களை மட்டுமே தம் குடும்பத்தினர் திரையரங்கில் கண்டுகளிப்பர் என்றார் திருவாட்டி பஞ்சவர்ணம். நிகழ்வில் நடிகர் சித்தார்த் கூறியதற்கு இணங்க, இன்றைய இளையருக்கு ‘சேனாபதி’ ஊக்கமூட்டுவார் என்று அவரும் எதிர்பார்க்கிறார்.
திரைக்கு வந்த முதல் நாளே கமலின் திரைப்படங்களை சென்று காண்பது 22 வயது சப்ரினா கமல் பாட்ஷாவின் குடும்ப வழக்கம். தமது இன்பதுன்பங்களில் கமலின் திரைப்படங்கள் பங்கு வகித்ததாய்க் கூறிய அம்மாணவி, ‘இந்தியன் 2’ இன்றைய இளையர்கள் கவனம் செலுத்தவேண்டிய சமூக, அரசியல் சிக்கல்களைத் தோலுரித்துக் காட்டும் என்று நம்புகிறார்.
தமது சிறுவயதுப் பயணத்தில் முக்கிய வழிகாட்டியாகக் கருதிய கமலுக்கு, தான் ஓர் ஓவியத்தைப் பரிசளிக்க விரும்பினார் 16 வயது மாணவர் ரேனா ராமன். ‘தக்லைஃப்’ படத்தில் கமலின் உருவத்தை வரைந்த அவர், அதனை ஏற்பாட்டுக்குழுவிடம் அளித்தார்.
“அவரைப் பார்த்துவிடமாட்டோமா என ஏங்கினேன். அவரிடம் இவ்வோவியம் சென்றடைந்தாலே போதும், அது என்னால் வாழ்வில் மறக்கமுடியாததாய் இருக்கும்,” என்றார் ரேனா ராமன்.
நண்பர்கள் நால்வருடன் வந்திருந்த 33 வயது தொழில்நுட்பர் சுந்தர், கல்கி, தக்லைஃப் திரைப்படங்களுக்காகவும் ஆவலுடன் காத்திருக்கிறார். தொடர்ந்து காலத்துக்கேற்ற புதுமையான கதாபாத்திரங்களை ஏற்பதே கமலின் பலம் என்றார் அவர்.
எட்டு வயதேயான சாரா கிருஷ்ணா, ‘மான்ஸ்டர்’ படத்திற்குப் பிறகு எஸ். ஜே. சூர்யாவின் ரசிகையானார். நுழைவுச்சீட்டு இல்லாதபோதும் மிகுந்த ஆர்வத்துடன் பெற்றோரோடு வந்து, தம் மனத்திற்கு நெருங்கிய நடிகரைப் பார்த்ததில் சாரா மகிழ்ச்சியடைந்தார். அவரைப் போலவே நுழைவுச்சீட்டின்றி வந்தோருக்கும் நிகழ்வில் கலந்துகொள்ளும் வாய்ப்பை ஏற்பாட்டுக்குழுவினர் வழங்கினர்.
சில நாள்களே இருந்த நிலையில் இந்நிகழ்வை உறுதிப்படுத்துவதில் எதிர்கொண்ட சவால்களைப் பகிர்ந்துகொண்டார், ஏற்பாட்டாளர்களில் ஒருவரான ‘காஸ்மிக் அல்டிமா பிக்சர்ஸ்’ நிறுவனத்தின் தலைமைத் தயாரிப்பாளர் திரு எஸ். எஸ். விக்னேஸ்வரன்.
சிங்கப்பூர்க் கலைஞர்கள் மேடையேற வாய்ப்பளித்ததைக் குறிப்பிட்ட ‘தாந்திரா’ தலைமை நிர்வாகியும் இணை ஏற்பாட்டாளருமான திரு ஜே. கே. சரவணா, கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகர்கள் சிங்கப்பூர்க் கலைஞர்களைப் பாராட்டியதையும் சுட்டினார்.
vishnuv@sph.com.sg