ஆ. விஷ்ணு வர்தினி
மக்கள் மனங்களில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்திய ‘இந்தியன்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம், மேம்பட்ட உத்திகள், நடிப்புத்திறன், தொழில்நுட்ப வளம், அழகியல் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என்பது சேனாபதியாக மீண்டும் திரையில் மிளிரவிருக்கும் நடிகர் கமல்ஹாசனின் நம்பிக்கை.
ரிட்ஸ்-கார்ல்டன் ஹோட்டலில் சனிக்கிழமை (ஜூன் 29) மாலை நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த கமல்ஹாசன், 28 ஆண்டுகள் கழித்து வெளிவரும் ‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் தாம் நடிகராகப் புதுப்பரிமாணம் கண்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.
கமல்ஹாசனுக்கு தேசிய விருதினை ஈட்டித்தந்த ‘இந்தியன்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் மக்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் சங்கரின் இயக்கத்தில், அனிருத்தின் இசையில் உருவாகியுள்ள ‘இந்தியன் 2’ திரைப்படம், ஜூலை 12ஆம் தேதியன்று வெளியீடு காணவுள்ளது.
சேனாபதி எனும் முதிர்ந்த இந்திய சுதந்திரப் போராளி இன்றைய இந்தியாவில் புரையோடியுள்ள ஊழலை எதிர்ப்பதே கதைக்கரு. தமிழ்நாட்டைத் தாண்டி, பிற மாநிலங்களுக்கும் விரிந்துள்ளது திரைப்படத்தின் கதைக்களம்.
முதல் பாகத்தைப் போன்று, காலம் கடந்த அதிர்வலைகளை ஏற்படுத்தி, ‘இந்தியன் 2’ மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவுசெய்யும் என்று படக்குழுவினர் உறுதியாகக் கூறுகின்றனர்.
இந்தியனை மனத்தில் பதியச் செய்த எழுத்தாளர் சுஜாதாவின் வசனங்கள் திரைப்படத்திற்குச் சிறப்பு கூட்டியதை நினைவுகூர்ந்த கமல்ஹாசன், அவரின் கலைத்தாக்கத்தைத் தாம் இன்னும் சுமந்துள்ளதாகச் சொன்னார்.
“கலையும் அரசியலும் வெவ்வேறு. அவ்வாறு பிரிந்து இருப்பதே சரியானது,” என்றார் கமல்ஹாசன். எந்தவொரு தனிமனிதரும் தமது எதிரியல்லர், சாதியமே தமது ஆகப் பெரிய எதிரி என்பதையும் அவர் உறுதியாகப் பதிவுசெய்தார்.
‘கலங்கரை விளக்கம்’
இன்றைய இளம் தலைமுறையினருக்குக் கலங்கரை விளக்கம்போல் ‘இந்தியன் 2’ திரைப்படம் விளங்கும் என்றார் நடிகர் சித்தார்த். இளையர்கள் காலத்திற்கேற்ப தங்களின் கொள்கைகளையும் சமூக ஆதங்கத்தையும் மறுஆய்வு செய்வதில் ‘இந்தியன் 2’ பங்களிக்கும் என்பது அவர் கருத்து.
‘சித்தா’ திரைப்படத்திற்குப் பின்னர் இப்படத்தில் தோன்றும் அவர், “‘இந்தியன் 2’ ஒருவித சமுதாய கோபத்தைத் தூண்டும். அக்கோபத்தை இளையர்கள் சரியான வழியில் செலுத்தவேண்டும் என்பது திரைப்படத்தின் நோக்கம்,” என்றும் கூறினார்.
மற்றுமொரு வில்லன் வேடத்தை ஏற்றிருக்கும் நடிகர் எஸ். ஜே. சூர்யா, இத்திரைப்படத்தில் சற்றே நீண்ட குறும்பாத்திரத்தில் நடித்துள்ளார். கமல்ஹாசனோடு இணைந்து நடிக்கக் கிடைத்த அரிய வாய்ப்பு, தங்களின் வாழ்க்கையில் கனவை நனவாக்கிய ஒரு மைல்கல்லாக கருதியதாக இருவரும் கூறினர்.
தமது இளவயதில் பிரமிப்போடு கண்ட சேனாபதி கதாபாத்திரத்தின் திடமான தாக்கம் இப்படத்திலும் தொடரும் என்றார் சித்தார்த்.
அடுத்த ஆண்டு வெளிவரும் என எதிர்பார்க்கப்படும் ‘இந்தியன் 3’ படத்திற்கான தங்களின் உற்சாகத்தையும் படக்குழுவினர் பகிர்ந்துகொண்டனர்.
vishnuv@sph.com.sg

