தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியப் பெண்களின் ‘கழிவறை எனும் கனவு’

5 mins read
51ac2300-0308-4999-ad5b-7220746f9935
கழிவறை திட்டத்தால் பல கோடி இந்தியப் பெண்களுக்கு பெரும் நிம்மதியும் பாதுகாப்பும் கிடைத்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள். - படம்: ஊடகம்
multi-img1 of 3

இந்தியாவில் ஏறத்தாழ 28,000 அரசுப் பள்ளிகளில் கழிவறை வசதிகள் இல்லை என்பது ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது. 20 மாணவர்களுக்கு ஒரு சிறுநீர் கழிவறையும் 50 மாணவர்களுக்கு ஒரு மலக்கழிவறையும் இருக்க வேண்டும் என்பது மத்திய கல்வி அமைச்சு வகுத்துள்ள விதிமுறை.

ஆனால், இந்திய அளவில் சுமார் 5,000 தனியார் பள்ளிகளில்கூட போதுமான கழிவறை வசதிகள் இல்லை என்பது ‘ஒருங்கிணைந்த மாவட்ட கல்வி தகவல் முறை+ 2019-20’ (UDISE+ - Unified District Information System For Education Plus) ஆய்வறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், ஆறுதல் அளிக்கும் விதமாக தமிழகம், புதுடெல்லி, பஞ்சாப், கோவா, புதுவை உள்ளிட்ட மாநிலங்களில் அனைத்துப் பள்ளிகளிலும் கழிவறை வசதி உள்ளதாகவும் மேற்குறிப்பிட்ட அறிக்கை தெரிவிக்கிறது. இந்த மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் நூறு விழுக்காடு அளவுக்கு குடிநீர் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் ஏறக்குறைய 58 விழுக்காடு பள்ளிகளில் குடிநீர் வசதி இல்லை என்பது வேதனை தரும் தகவல்.

இந்தியாவில் உள்ள 14.65 லட்சம் பள்ளிகளுக்கு குடிநீர்க் குழாய், பாக்கெட் குடிநீர், கிணறுகள், அடிபம்புகள், பிற ஆதாரங்கள் மூலமாக குடிநீர் கிடைக்கிறது. எனினும், நாட்டில் உள்ள 29 மாநிலங்களுக்குப் பாதுகாப்பற்ற, சுகாதாரமற்ற கிணறுகளின் மூலமாகத்தான் குடிநீர் கிடைப்பதாக மற்றொரு ஆய்வு தெரிவிக்கிறது. இவற்றுள், தமிழகத்தில் 56,000 பள்ளிகள், குடிநீர்க் குழாயை நம்பி உள்ளன. பாக்கெட் குடிநீர் மூலம் 578 பள்ளிகளும் கிணறுகள் மூலம் 285 பள்ளிகளும் பிற ஆதாரங்கள் மூலம் 1,134 பள்ளிகளும் குடிநீர் பெறுகின்றன.

தண்ணீருக்கும் கழிவறைகளுக்கும் தொடர்பு இருப்பதால்தான் இந்தத் தகவல்களை குறிப்பிட வேண்டியுள்ளது. கழிவறைகள் கட்ட கடன் உதவி இவ்வாறு பல்வேறு கவலைக்குரிய அம்சங்களை ஆராய்ந்த பிறகே, பிரதமர் மோடி நாடு முழுவதும் கழிவறைகளைக் கட்டவேண்டும் என்றும் இதன் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவின் முகம் மாறும் என்றும் கூறினார்.

‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் மூலம் தமிழகத்தில் மட்டும் மார்ச் 2021ஆம் ஆண்டு வரை 508,000 லட்சம் தனிநபர் இல்லக் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. மேலும் 93,000 பொதுக் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளதாக மத்திய, மாநில அரசுகள் தெரிவித்துள்ளன.

வீடுகளில் தனிநபர் கழிவறைகள் கட்ட ரூ.30,000, சமூக கழிவறை கட்ட ரூ.150,000 வரை மத்திய அரசு கடன் உதவி அளிக்கிறது. மேலும், பொதுக் கழிவறை கட்ட ரூ.150,000 மத்திய அரசு அளிக்கிறது. இதன் மூலம் தமிழகத்தில் 97.8 விழுக்காடு கிராமங்கள் திறந்தவெளியில் மலம் கழிக்காத நிலையை எட்டியுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலக்கை எட்டிய 50% கிராமங்கள்

நாடு முழுவதும் 50% கிராமங்கள் இந்த இலக்கை எட்டியுள்ள நிலையில், கர்நாடகா 99.5%, உத்தரப் பிரதேசம் 95.2% ஆகிய மாநிலங்களுடன் தமிழகமும் இத்திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தி உள்ளது. லட்சத்தீவு, அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகிய யூனியன் பிரதேசங்கள் நூறு விழுக்காடு எனும் இலக்கை எட்டியுள்ளன.

மேற்குறிப்பிட்ட கிராமங்களில் திறந்தவெளியில் மலம் கழிக்காத நிலை ஏற்படுத்தப் பட்டிருப்பதோடு, திட அல்லது திரவக் கழிவு மேலாண்மை அமைப்பு முறையும் அமல்படுத்தப்படுகின்றது.

இதுவரை 2.96 லட்சம் கிராமங்கள் இந்த நிலையை எட்டியுள்ளதன் மூலம், 2024-25க்குள் இரண்டாவது கட்ட கிராமப்புற தூய்மை இந்தியா இயக்கத்தின் லட்சியங்களை அடையும் உத்வேகம் கிடைத்துள்ளது என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழக அரசு: பொய்யான தகவலைப் பரப்பாதீர் இந்நிலையில், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இயங்கும் பள்ளிகளில் கழிவறை முறையாக இல்லை என நாளேடு ஒன்றில் வெளியான செய்தியைத் தமிழகப் பள்ளிக் கல்வித்துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

70 விழுக்காடு அரசுப் பள்ளிகளில் கழிவறை வசதிகள் இல்லை என்று தனியார் தன்னார்வு தொண்டு நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் தெரிய வந்ததாக, ஆங்கில நாளேட்டுச் செய்தியில் குறிப்பிடப்பட்டு இருந்தது. கடந்த ஜூன் மாதம் இச்செய்தி வெளியான நிலையில், தமிழ்நாடு உண்மையைக் கண்டறியும் குழு இது பொய்யான தகவல் எனத் தெரிவித்துள்ளது.

இது முற்றிலும் பொய்யான செய்தி. மத்திய அரசின் கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு (UDISE 2021-22) வெளியிட்ட தரவின்படி, தமிழ்நாட்டில் 99.9% அரசுப் பள்ளிகளில் கழிவறை வசதிகள் உள்ளன. தமிழ்நாட்டில் 70% அரசுப் பள்ளிகளில் கழிவறை இல்லை எனும் தகவல் பொய்யானது என்று பள்ளிக் கல்வித்துறையும் மறுத்துள்ளது. ‘தவறான தகவலைப் பரப்பாதீர்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நவம்பர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் கழிவறை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு உலக நாடுகளில் திறந்த வெளியில் காலைக்கடன்களைக் கழித்தல் என்பது இன்றளவும் உள்ளது.

சுற்றுப்புறத் தூய்மை, சுகாதாரமான வசிப்பிடம் ஆகியவற்றைப் பேணும் வகையில் வீட்டுக்கு ஒரு கழிவறை இருத்தல் அவசியம் என்பதைக் கடந்த சில ஆண்டுகளில் இந்தியா தீவிரமாக வலியுறுத்தி வருகிறது. கழிவறைத் திட்டத்தை வேகமாகச் செயல்படுத்தும் தமிழகம்

தமிழகம் உள்ளிட்ட வேகமாக வளர்ந்து வரும் மாநிலங்கள் பலவும் மத்திய அரசின் திட்டத்தைத் தீவிரமாகச் செயல்படுத்தி வருகின்றன. தமிழகத்தில் திறந்தவெளிக் கழிப்பிடம் இல்லை என்ற பெருமையை தூத்துக்குடி மாநகராட்சி பெற்றுள்ளது. இதற்காக மத்திய அரசின் தரச்சான்று பெற்றுள்ளது.

இந்த நிலையை எட்டுவதற்காக பல்வேறு நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொண்டதாக அம்மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில் கிராம ஊராட்சிப் பகுதியில் உள்ள 2.77 லட்சம் வீடுகளில் ஏறக்குறைய 1.37 லட்சம் வீடுகள் கழிவறை வசதியின்றி கட்டப்பட்டிருப்பது, கடந்த 2013ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தெரிய வந்தது.

இதையடுத்து, 2018ஆம் ஆண்டு 50,000 கழிவறைகள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மூலம் கட்டிக் கொடுக்கப்பட்டன. மேலும், தூய்மை இந்தியா இயக்கம் மூலம் 86,536 தனி நபர் கழிவறைகள் கட்டித்தரப்பட்டன. இந்நிலையில், திருப்பூரில் கழிவறை இல்லாத மேலும் 21,000 வீடுகளில் மானிய உதவியுடன் கழிவறை கட்டித்தர இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ‘கியூஆர் கோடு’ மூலம் கருத்து தெரிவிக்கும் வசதி

இதற்கிடையே, தமிழகத்தில் உள்ள அனைத்து பொதுக் கழிவறைகளிலும் ‘கியூ.ஆர் கோடு’ மூலம் கருத்து தெரிவிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை QR Code அட்டைகள் பொருத்தப்பட்டுள்ள 7,954 கழிவறைகள் தொடர்பாக 125,906 பொதுமக்கள் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்துள்ளதாக மாநில நகராட்சி நிர்வாகத் துறை தெரிவித்துள்ளது.

இது அனைவருக்கும் சுகாதார வசதிகள் சென்றடைவதை உறுதிப்படுத்துவதற்கான அரசின் முதன்மை முயற்சி என்கிறது தமிழக அரசு. மோடி: 90% இந்தியர்களுக்கு கழிவறை வசதி உள்ளது

தற்போது 90% இந்தியர்களுக்கு கழிவறை வசதி கிடைத்துள்ளது. 2014ஆம் ஆண்டு வரை 40% இந்தியர்களுக்குத் தான் கழிவறை வசதி இருந்தது என ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

துப்புரவுத் துறையின் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அப்போது வெளியிட்ட ஓர் அறிக்கையில் “கழிவறை கட்டுவதில் அரசு அதிக வேகம் காட்ட விரும்புவதால், திட்டமிடப்பட்ட மற்றும் நிலையான வகையில் நல்ல முறையில் சுகாதார வசதிகளை அடையும் நோக்கம் திசை திருப்பிவிடபட்டுள்ளது,” என்று விமர்சித்திருந்தார்.

‘சுத்தம் சோறு போடும்’ என்பது தமிழர்களின் வாழ்வியல் நெறிமுறைகளில் ஒன்றாகக் கருதப்பட்டது. ஆனால், தமிழகத்தில் உள்ள பொதுக் கழிவறைகளில் நுழைந்தால் வாந்தியும் வயிற்றுப்போக்குமே மிஞ்சும் என்கிறார்கள் ஒரு தரப்பினர்.

ஆனால் மத்திய, மாநில அரசுகள் வீடுதோறும் குறைந்தபட்சம் ஒரு கழிவறை எனும் இலக்கு எட்டப்படும், மற்ற சிறு குறைபாடுகள் முடிவுக்கு வரும் என்கின்றன.

“நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான சிற்றூர்களில், பல கோடி பெண்கள் அதிகாலையில் காலைக் கடன்களைக் கழிக்க வேண்டிய அவலம் முடிவுக்கு வந்துள்ளது. கழிவறைத் திட்டத்தின் மூலம் பல கோடி இந்தியப் பெண்களுக்கு பெரும் நிம்மதியும் பாதுகாப்பும் கிடைத்திருப்பதை மறந்துவிடக்கூடாது,” என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

குறிப்புச் சொற்கள்