அனைத்துலக இந்தியத் திரைப்பட விழா (ஐபா) கடந்த மூன்று நாள்களாக அபுதாபியில் நடந்து வந்தது. ஞாயிற்றுக்கிழமையன்று விழா முடிவடைந்தது.
இவ்விழாவில் சிறந்த தமிழ் படமாக ‘ஜெயிலர்’ தேர்வானது. மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ படம் ஆறு விருதுகளை வென்றது.
சிறந்த நடிகருக்கான விருது ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்த விக்ரமுக்கும் சிறந்த நடிகைக்கான விருது இதே படத்தில் நடித்த ஐஸ்வர்யாராய்க்கும் வழங்கப்பட்டன.
‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்கிய மணிரத்னம் சிறந்த இயக்குநருக்கான விருதைப் பெற்றார். இப்படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர்.ரகுமான் சிறந்த இசை, பின்னணி இசையமைப்பாளருக்கான விருதைப் பெற்றார்.
சிறந்த குணச்சித்திர நடிகருக்கான விருது ஜெயராமிற்கு வழங்கப்பட்டது. இதன்மூலம் ‘பொன்னியின் செல்வன்’ படம் ஆறு விருதுகளை தட்டிச்சென்றது.
சிறந்த வில்லன் நடிகருக்கான விருது ‘மார்க் ஆண்டனி’ படத்தில் நடித்த எஸ்.ஜே.சூர்யாவுக்கு வழங்கப்பட்டது.
சிறந்த இந்தி நடிகர் விருது ஷாருக்கானுக்கு வழங்கப்பட்டது. அட்லி இயக்கத்தில் வெளியான ‘ஜவான்’ படத்திற்காக அவருக்கு இந்த விருது அளிக்கப்பட்டது.
சிறந்த படமாக ரன்பீர் கபூர் நடித்த ‘அனிமல் ‘படம் தேர்வானது. ‘மிஸஸ் சாட்டர்ஜி வெசஸ் நார்வே’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகையாக ராணி முகர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தொடர்புடைய செய்திகள்
சமந்தாவிற்கு சிறந்த பெண்மணி விருது
இந்தியச் சினிமாவின் சிறந்த பெண்மணி என்கிற சிறப்பு விருது நடிகை சமந்தாவுக்கு வழங்கப்பட்டது. அவரது திரைப்பயணத்தையும் நடிப்பையும் பாராட்டும் விதமாக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

