‘கஜானா’ படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் கால் பதித்திருக்கிறார் வேதிகா.
அறிமுகமான புதிதில் காணப்பட்ட அதே வேகம், பேச்சு, நடன அசைவுகள் என இன்ஸ்டகிராமில் அசத்தி வருபவரை ஏராளமானோர் பின்தொடர்கின்றனர்.
நிறைய படங்களில் நடித்துவிட்டாலும், ‘பரதேசி’ படம் தந்த அற்புதமான அனுபவத்தை இனி வேறு படம் மூலம் பெற முடியுமா என்பது சந்தேகம்தான் என்று அண்மைய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
“காரணம்... அதுதான் வேதிகா என்ற நடிகையை மிகமிக வித்தியாசமாக காட்டிய படம். அதில் நான் மெனக்கெட்டு நடிக்கவில்லை. அதில் நடித்ததெல்லாம் இயக்குநர் பாலாதான்.
“அவர் நடித்துக் காட்டியதைத்தான் அப்படியே நகலெடுத்து நடித்தேன். என்னுடைய மொத்த சினிமா வாழ்க்கையையும் அந்தப் படம்தான் மாற்றியது. அடுத்து, வசந்தபாலனின் ‘காவியத்தலைவன்’ படமும் மிகப்பெரிய மதிப்பைக் கொண்டு வந்து சேர்த்தது.
“இன்றும்கூட அந்தப் படங்களில் நான் நடித்த கதாபாத்திரங்களை மக்கள் மிகவும் ரசித்துப் பேசுகிறார்கள்,” என்று கூறியுள்ளார் வேதிகா.
தமிழில் இப்படிப்பட்ட நல்ல கதாபாத்திரங்கள் அமைந்தது தாம் செய்த பாக்கியம் என்று குறிப்பிட்டுள்ள அவர், அவை எல்லாம் தானாகவே அமைந்தவை என்றும் கூறியுள்ளார்.
இயக்குநர் பாலாவுக்கு திரையுலகம் சார்பில் நடத்தப்பட்ட பாராட்டு விழாவுக்கு வேதிகாவும் வந்திருந்தாராம். அது தனது கடமை என்கிறார்.
“என்னால் சிறப்பாக நடிக்க முடியும் என்பதை அவர்தான் தமிழ் சினிமாவுக்கே எடுத்துச் சொன்னார். தேயிலைக் காடுகளில் தொழிலாளர்களுடன் சுற்றித் திரிந்ததெல்லாம் மிகப்பெரிய அனுபவம்.
“‘பரதேசி’ படத்தைப் பற்றி ரசிகர்கள் இப்போதும் விசாரிக்கிறார்கள். அவருக்கான விழாவுக்கு வருவதைக் கடமையாக நினைத்தேன். அவரிடம் ஆசிர்வாதம் பெற்றதில் கூடுதல் மகிழ்ச்சி,” என்கிறார் வேதிகா.
இவருக்கு நடனம் மீது ஆர்வம் அதிகம். தாம் நடிக்கும் படங்களில் நடனத்தின் மூலம் முத்திரை பதிக்க விரும்புவார்.
லாரன்ஸ், சிம்பு, பிரபுதேவா என நடனத்தில் சிறந்த கதாநாயகர்களுடன் நடித்துள்ளார்.
“மூவருமே என்னுடைய நடன அசைவுகள் சிறப்பாக அமைய ஆதரவு அளித்தனர். சிம்புவுடன் ஆடும்போது அவருக்கு இணையாக ஆட, முழுச் சுதந்திரம் கொடுப்பார்.
“பிரபு தேவாவுடன் நடனம் ஆடுவதற்கு ‘பேட்ட ராப்’ படத்தில் வாய்ப்பு கிடைத்தது. அவர் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு நடனம் ஆடுவார்.
“பிறகு நான் ஆடியதைத் திரையில் பார்க்கும்போது அவ்வளவு ஆச்சரியமாக இருக்கும். இந்த நடனம் நாம் ஆடியதுதானா என வியப்பாகவும் இருக்கும். பிரபுதேவாவுடன் ஆடும்போது இந்த விந்தை எல்லாம் கட்டாயம் நடக்கும். அவரைப் பார்த்துப் பார்த்து நாமும் மாறிவிடுவோம்.
“லாரன்சுடன் ‘காஞ்சனா’, ‘முனி’ படங்களில் நடித்தபோது மிகவும் பயந்தேன். அவரது நடனம் வேறு பாணியில் அமைந்திருக்கும்.
“இவர்களுடன் நடித்தபோது தமிழ் இளையர்கள் மனதில் நமக்கும் இடம் கிடைக்கும் என்று நினைப்பேன். அது அப்படியே நடந்திருக்கிறது. இன்றும்கூட நடனத்துக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரம் என்றால் மறக்காமல், தயங்காமல் என்னைத் தொடர்பு கொள்கிறார்கள்,” என்று அந்தப் பேட்டியில் உற்சாகம் குறையாமல் பேசியுள்ளார் வேதிகா.