தாய்மொழி தெரியவில்லையெனில் அவமானம்: தனுஷ்

தாய்மொழி தெரியவில்லையெனில் அவமானம்: தனுஷ்

2 mins read
fca1ac79-3378-4c93-b034-855dcf234d80
தனுஷ். - படம்: விகடன்
multi-img1 of 2
Google News Preferred Icon

தாய்மொழி தெரியவில்லை என்றால் அது பெரும் அவமானம் என்று கூறியுள்ளார் நடிகர் தனுஷ்.

மாணவர்கள் தாய்மொழிக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

நடிகர் தனுஷ் சென்னையில் உள்ள பள்ளியில் படித்தவர். தற்போது அந்தப் பள்ளிக்காக மூன்று தளங்கள் கொண்ட கட்டடம் ஒன்றைக் கட்டித்தந்துள்ளார். அதற்குப் பள்ளி நிர்வாகம் தனுஷ் பிளாக் எனப் பெயர் சூட்டியுள்ளது.

அண்மையில் புதிய கட்டடத் திறப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய தனுஷ், தாம் நாள்தோறும் பலரைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பை பெற்றிருப்பதாகவும் அவர்களில் பத்தில் எட்டுப் பேருக்குத் தமிழில் எழுதப் படிக்கத் தெரியவில்லை என்பது வருத்தம் அளிப்பதாகவும் குறிப்பிட்டார்.

தமிழில் பேசவும் எழுதவும் வரவில்லை என்று சொல்வது பெருமைக்குரிய விஷயமல்ல என்றார் அவர்.

“காலையில் இருந்து மாலை வரை கைதி மாதிரி ஒரே இடத்தில் இருக்கிறோமே என்று பள்ளிக்கூடம் வரும்போதெல்லாம் நினைப்பேன். எப்போது 3.30 மணி ஆகும், வீட்டுக்குப் போகலாம் என்றுதான் தோன்றும்.

“மணி அடித்தால் ஒரு தனி மகிழ்ச்சி ஏற்படும். முதல் ஆளாக நான்தான் வெளியே செல்வேன். அப்படி நான் போகும் போதெல்லாம் பள்ளியில் இருப்பதுதான் மகிழ்ச்சியான நாள்கள் என்று தெரியவில்லை.

“உங்கள் அனைவருக்கும் ஒன்று சொல்கிறேன். பள்ளியில் இருக்கக்கூடிய நாள்கள்தான் மிகவும் மகிழ்ச்சிகரமான நாள்கள். எப்போது பள்ளி முடியும் என்று கடந்து சென்றுவிடாமல் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழியுங்கள். இந்த மாதிரி யாராவது எனக்குச் சொல்லியிருந்தால் பள்ளியில் இருந்த ஒவ்வொரு தருணத்தையும் நான் மகிழ்ச்சியாகச் செலவிட்டிருப்பேன்.

“நான் சந்திக்கும் பலருக்கு ஆங்கிலம் நன்றாகத் தெரிகிறது. அது மிகவும் வருத்தமான விஷயம். நான் பெல்ஜியத்தில் ஒரு ஃபிரஞ்சு படத்தில் நடித்தபோது ஆங்கிலம் தெரியுமா? எனக் கேட்டார்கள். நான் தெரியும் எனச் சொன்னதும் ஆச்சரியமாகப் பார்த்தார்கள்.

“ஏன் ஆச்சர்யப்படுகிறீர்கள்? எனக் கேட்டதும், உங்கள் தாய் மொழிதானே உங்களுக்குத் தெரிய வேண்டும், ஆங்கிலம் உங்களுக்கு ‘போனஸ்’தானே என்றார்கள்.

“உங்களுடைய தாய் மொழிதான் உங்களுக்கு முதலில் தெரிய வேண்டும்,” என்றார் தனுஷ்.

குறிப்புச் சொற்கள்
தனுஷ்பள்ளிக் கல்விபள்ளிதாய்மொழிதமிழ்மாணவர்கள்