ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான ‘ஜெயிலர்-2’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில், ரஜினியின் மருமகளாக நடித்த நடிகை மிர்ணா மேனன் இப்படத்தில் நடித்தது குறித்த அனுபவங்களைத் தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழில் சில சிறிய பட்ஜெட் படங்களில் நடித்து சினிமாப் பயணத்தைத் தொடங்கியவர் மிர்ணா. தனிப்பட்ட வாழ்க்கைச் சிக்கல்கள், வழக்குகளைத் தாண்டி, மலையாளத் திரையுலகிற்குச் சென்று மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்து, நல்ல நடிகை எனப் பெயரெடுத்துள்ளார்.
தமது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஒரே சூரியன், ஒரே நிலவு, ஒரே சூப்பர் ஸ்டார்,” என்று குறிப்பிட்டுள்ளார் மிர்ணா.
“ஜெயிலர்-2 திரைப்படத்தை பெரிய வெற்றிப் படமாக்கிய ரசிகர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். நான் விரும்பிய வாழ்க்கையை அமைத்துக்கொடுத்த திரு ரஜினிக்கு மிக்க நன்றி.
“அதேபோல், ‘ஜெயிலர்’ காவியத்தின் ஓர் அங்கமாக என்னை மாற்றி, என் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்த இயக்குநர் நெல்சனுக்கும் எனது அன்பு நன்றிகள்,” என்று மிர்ணா தெரிவித்துள்ளார்.
