80,000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் முன்னிலையில் ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழா

2 mins read
ஜனவரி 4ல் ‘ஜீ தமிழ்’ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்
6a8cc256-b167-4b0d-bbe4-58816fd72b7a
‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழா மேடையில் (இடமிருந்து) அனிருத், பூஜா ஹெக்டே, விஜய், லோகேஷ் கனகராஜ், அட்லீ. - படம்: ஜெகா விஜய்/ஃபேஸ்புக்
multi-img1 of 9

கோலாலம்பூர்: தமிழகத்தில் அரசியல் கட்சித் தலைவராக உருவெடுத்துள்ள விஜய் நடிப்பில் விரைவில் வெளியீடு காணவுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி, மலேசியத் தலைநகர் கோலாலம்பூரின் புக்கிட் ஜலில் விளையாட்டரங்கில் சனிக்கிழமை (டிசம்பர் 27) விமரிசையாக நடந்தேறியது.

விழா தொடங்குவதற்கு பல மணி நேரம் முன்னதாகவே ரசிகர்கள் விளையாட்டரங்கிற்குச் செல்லத் தொடங்கிவிட்டனர்.
விழா தொடங்குவதற்கு பல மணி நேரம் முன்னதாகவே ரசிகர்கள் விளையாட்டரங்கிற்குச் செல்லத் தொடங்கிவிட்டனர். - படம்: மாலிக் ஸ்ட்ரீம்ஸ் புரோடக்‌ஷன் அண்ட் டிஸ்ட்ரிபியூஷன்

எச்.வினோத் இயக்கியுள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, பாபி தியோல், கௌதம் வாசுதேவ் மேனன், நரேன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

விஜய் அரசியலில் முழுமையாகக் கவனம் செலுத்துவதற்குமுன் திரைக்கு வரும் அவரது இறுதிப் படம் ‘ஜனநாயகன்’. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், இசை வெளியீட்டு விழாவில் பாடிய பின்னணிப் பாடகர்களில் அனுராதா ஸ்ரீராம், கிரிஷ், எஸ்.பி.சரண், திப்பு, சுவேதா மோகன், ஆண்ட்ரியா ஜெரேமியா, யோகி பி உள்ளிட்டோர் அடங்குவர்.

விஜய் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப்குமார், அட்லீ ஆகியோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இசையமைப்பாளர் அனிருத், நேரடி இசைக் கச்சேரிக்குத் தலைமை தாங்கினார்.

சிங்கப்பூர் நேரப்படி பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கியிருக்க வேண்டிய நிகழ்ச்சி, மழையால் தாமதமானது.

இந்நிகழ்ச்சி இசை வெளியீடாக மட்டுமல்லாமல், விஜய்யின் 30 ஆண்டுகாலத் திரையுலகப் பயணத்தை முத்தாய்ப்பாகக் கொண்டாடும் ஆட்டம் பாட்டம் நிறைந்த நிகழ்ச்சியாகவும் அமைந்தது. இதற்காக விஜய் உட்பட படக்குழுவினர், பிரபல பின்னணிப் பாடகர்கள் பலரும் தனி விமானத்தில் கோலாலம்பூர் சென்றனர்.

‘தளபதி திருவிழா’ என்று அழைக்கப்படும் இந்த நிகழ்ச்சிக்காக நவம்பர் 28ஆம் தேதி நுழைவுச்சீட்டுகளின் விற்பனை தொடங்கிய வேகத்தில் அவை விற்றுத்தீர்ந்தன.

நிகழ்ச்சியில் 80,000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. விழா தொடங்குவதற்கு பல மணி நேரம் முன்னதாகவே ரசிகர்கள் விளையாட்டரங்கில் குவிந்துவிட்ட நிலையில், புக்கிட் ஜலில் விளையாட்டரங்கை சுற்றியுள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்த நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்வதற்கு அனுமதி இல்லை. பட உரிமையை வாங்கியுள்ள ‘ஜீ தமிழ்’ தொலைக்காட்சி, ஜனவரி 4ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு நிகழ்ச்சியையும் ஒளிபரப்பும் என அதிகாரபூர்வத் தகவல் வெளியானது.

குறிப்புச் சொற்கள்