சென்னை: விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் தணிக்கை வாரியத்தின் சான்றிதழுக்காக காத்திருக்கும் நிலையில், வியாழக்கிழமை (ஏப்ரல் 9) இணையத்தில் வெளிவந்ததால் திரையுலகம் அதிர்ச்சி அடைந்துள்ளது. நடவடிக்கை எடுக்கக் கோரி காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
ரூ.500 கோடிக்கும் அதிகமான செலவில் தயாரிக்கப்பட்ட படம் என்பதாலும், தமிழகம், புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் முதல்முறையாக களமிறங்கியுள்ள விஜய்யின் கடைசி திரைப்படம் என்று அறிவிக்கப்பட்டதாலும், ரசிகர்கள் மத்தியில் இத்திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
கருத்துரைக்காத விஜய்
இந்நிலையில், இணையத்தில் முழு திரைப்படத்தையும் சட்ட விரோதமாக வெளியிட்டதற்கு நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் ஹாசன், சூர்யா, சிரஞ்சீவி, சிவகார்த்திகேயன், விஜய் ஆண்டனி, ஜீவா, ஜி.வி.பிரகாஷ் குமார், உள்பட திரையுலகினர் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
எனினும், விஜய் இதுவரை ஒரு கண்டனத்தையும் பதிவு செய்யவில்லை. வெள்ளிகிழமை (ஏப்ரல் 10) பரப்புரை முடிந்து திருச்சி விமான நிலையம் வந்த விஜய்யிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோதுகூட விஜய் எந்தவொரு பதிலும் அளிக்கவில்லை.
அமைப்பின் தோல்வி: கமல் கண்டனம்
“திரை அமைப்புகள் இதற்கு எதிராகக் குரல் எழுப்ப வேண்டும். அரசு இதைச் செய்தவர்களைக் கண்டுபிடித்து கடுமையான தண்டனை அளிக்க வேண்டும். இது போன்ற குற்றம் இனியும் தொடரக்கூடாது,” என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
“இது ஓர் அமைப்பு தோல்வி அடைந்திருப்பதை காட்டுகிறது,” என்று கமல் கூறியுள்ளார்.
“ உரிய சட்ட நடைமுறைகள் சரியான நேரத்தில் பின்பற்றப்பட்டு இருந்தால் இந்த நிலைமைக்கு வந்திருக்க மாட்டோம். சான்றிதழ் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம், திருட்டுப் பிரதிகளுக்கு ஒரு சாதகமான சூழலை உருவாக்கின. சட்டபூர்வமான அணுகல் தடைபடும்போது, சட்டவிரோத நடவடிக்கைகள் ஆதிக்கம் செலுத்துகின்றன.பைரசி என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது. அது கலை, கலைஞர்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்.
“நூற்றுக்கணக்கான கலைஞர்கள், தொழில்நுட்பநிபுணர்களின் உழைப்பையும், தயாரிப்பாளர்கள், சினிமா திரையரங்கு உரிமையாளர்கள், அவர்களின் முதலீடுகளை ஆபத்தில் ஆழ்த்துகிறது,” என்று கமல் பதிவிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, “நம்முடைய படைப்புகளைப் பாதுகாப்பது எவ்வளவு கடினம் என்பதையும் நினைவுறுத்துகிறது. சினிமாவைக் காப்போம்,” எனப் பதிவிட்டுள்ளார்.
“திரைப்படக் குழுவுடன் இணைந்து நிற்குமாறு ரசிகர்களைக் கேட்டுக்கொள்கிறேன். படத்தைச் சரியான முறையில் பார்த்து ஆதரியுங்கள்,” என்று கார்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பகிர்வுச் சங்கிலியில் உள்ள அனைவர் மீதும் நடவடிக்கை
பகிர்வுச் சங்கிலியில் உள்ள அனைவர் மீதும் சிவில், குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
புதிய சர்ச்சை
இதற்கிடையே, ‘ஜனநாயகன்’ படத்தில் இஸ்லாமிய வெறுப்புக் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகச் சர்ச்சை எழுந்துள்ளது.
கேவிஎன் புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரியாமணி, மமிதா பைஜூ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். .
தொடக்கத்தில் முதல் 5 நிமிடக் காட்சிகள் மட்டுமே கசிந்தன. பின்னர், முழுத் திரைப்படமும் வாட்ஸ்அப், டெலிகிராம், இன்ஸ்டகிராம், ஃபேஸ்புக், எக்ஸ், யூடியூப் எனப் பல்வேறு சமூக ஊடகங்களில் சட்டவிரோதமாகப் பதிவேற்றப்பட்டது.

