திரையுலகில் ஏறக்குறைய 23 ஆண்டுகால நடிப்புப் பயணத்தை நிறைவு செய்துள்ள ரவி மோகன், தற்போது இயக்குநராக மாறியுள்ளார்.
நடிகர் யோகி பாபுவை நாயகனாக வைத்து இவர் இயக்கும் படத்துக்கு ‘ஐ எம் ஆர்டினரி மேன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே ‘ஆளவந்தான்’ திரைப்படத்தில் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் ரவிக்கு உண்டு. மேலும், இயக்கம் தொடர்பாக குறுகிய கால பயிற்சியும் படிப்பும்கூட மேற்கொண்டுள்ளாராம்.
“நடிகராக ஒரு படத்தில் குறிப்பிட்ட பகுதிக்கு மட்டுமே பொறுப்பாக இருக்கும் நிலையில், இப்படத்தில் தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் ஒட்டுமொத்த படப்பிடிப்பு அரங்கையும் கையாள்வது ஒரு புதிய அனுபவத்தையும் பெரிய பொறுப்பையும் தந்துள்ளது.
“திரையுலகில் என் தந்தை மூலம் பல பாடங்களைக் கற்றுக்கொண்டுள்ளேன். அதேபோல் என் அண்ணனுடன் இணைந்துப் பணியாற்றியதும் நல்ல அனுபவம். அவையெல்லாம் சேர்ந்து ஒரு நல்ல கதையை மக்களிடம் கொண்டுசேர்க்கும் ஆசையை ஏற்படுத்தியது,” என்கிறார் ரவி மோகன்.
‘கோமாளி’ படத்தில் நடித்தபோதே இவரும் யோகி பாபுவும் சக நடிகர்கள் என்பதைக் கடந்து நல்ல நண்பர்களாகிவிட்டனராம்.
தன்னை நாயகனாக வைத்துப் படம் இயக்குவதாக ரவி மோகன் சொன்னதே பெரிய மகிழ்ச்சி என்றும் கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும்தான் ரவி தெளிவுடன் படமாக்குவதாகவும் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் யோகி பாபு.
“என் மீது யோகிபாபு பெரும் நம்பிக்கை வைத்துள்ளார். அதைக் கண்டிப்பாகக் காப்பாற்றுவேன். இதில் அவருடைய வழக்கமான நகைச்சுவையோடு சேர்த்து, இதுவரை திரையில் பார்க்காத ஒரு புதிய கோணமும் இருக்கும்.
“எளிமையாகச் சொன்னால், ஒரு சராசரி மனிதன் நல்ல மனிதனாகிறான். பின்னர், அந்த நல்ல மனிதன் கடவுளாகிறான். இதுதான் கதை.
“இந்தப் பிறவி வாழ்க்கைக்கு நாம் என்ன கொடுக்கப் போகிறோம் என்பதை உணர்த்தும் உணர்வுபூர்வமான கதையாக இது இருக்கும்.
“கதை முழுவதும் யோகியை மையப்படுத்தி மட்டும்தான் நகரும். கேமராவில் எப்போதும் அவர் இடம்பெற வேண்டுமென ஆசைப்பட்டேன். மற்ற கதாபாத்திரங்களில் பெரிய பிரபலங்கள் யாரும் இல்லாமல், புது முகங்களையே பயன்படுத்தியுள்ளோம்.
“ரசிகர்களுக்கு நிச்சயம் இது ஒரு புதுவித அனுபவமாக இருக்கும்,” என்று அண்மைய பேட்டியில் கூறிள்ளார் ரவி.
“என்மீது அன்பும் அக்கறையும் காட்டுவார் ரவி மோகன். என்னை வைத்து ஒரு படம் இயக்கப்போவதாக அவர் கூறியதே எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவர் கூறிய திட்டமும் சுவாரசியமாக இருந்தது. அவர் அப்படிச் சொன்னதும், நான் தயார் என்றேன்.
“அது இப்போது நடந்துகொண்டிருக்கிறது. எனக்கு மிகவும் உற்சாகமாக உள்ளது. அவர் என்னை வைத்து இயக்குகிறார் என்பதற்காக மட்டும் கூறவில்லை. உண்மையாகவே அவர் அருமையாகப் படத்தை இயக்குகிறார்.
“கதைக்குத் தேவையானதை மட்டும் தெளிவாகச் செய்கிறார். அவரது இயக்குநர் அவதாரம் சிறப்பாக உள்ளது. மேலும் நிறைய படங்களை அவர் இயக்குவார். எதிர்காலத்தில் நிச்சயம் நல்ல இயக்குநராக உருவெடுப்பார்.
“ரவி நடித்துள்ள படங்களில் நான் சிறு வேடங்களில் தோன்றியுள்ளேன். ஆனால், இப்போது அவர் இயக்கும் முதல் படத்தில் நான் நடிப்பது கூடுதல் மகிழ்ச்சியைத் தருகிறது.
“பிற படப்பிடிப்புகளில் கலந்துகொள்ளும்போது ரவி இயக்கும் படத்தின் நிலவரம் குறித்துப் பலரும் என்னை விசாரிக்கிறார்கள். குறிப்பாக அட்லீ, துல்கர் சல்மான் அடிக்கடி விசாரிப்பார்கள். இந்தப் படத்தின் மேல் அனைவருக்கும் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
“முன்பு ரவி எப்படி இருந்தாரோ, இப்போதும் அப்படியேத்தான் இருக்கிறார். இதுபோன்ற மனிதர்கள் கிடைப்பது கடினம். எனது திரைப்பயணம் அவருடன் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என விரும்புகிறேன்,” என்றார் யோகி பாபு.


