கிருத்திகா உதயநிதியின் அடுத்த படைப்பாக ‘காதலிக்க நேரமில்லை’ படம் உருவாகியுள்ளது. இப்படம் விரைவில் திரைகாண உள்ளது.
அதில், ஜெயம் ரவியும் நித்யா மேனனும் இணைந்து நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
ரகுமான் எனும் மிகச்சிறந்த இசையமைப்பாளரை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்ற பயம் கிருத்திகாவுக்கு அதிகம் இருந்ததாம்.
எனினும், தாம் சொன்ன கதை ரகுமானின் மனதுக்குள் சென்று அவரது கண்களில் தெரிந்தது என்றும் அதன் பிறகே தாம் இயல்பு நிலைக்கு வந்ததாகவும் சொல்கிறார் கிருத்திகா.
“ரகுமான் காதல் படத்துக்கு இசையமைத்து நாளாகிவிட்டது. அவர் கொடுத்த மெட்டுகளில் ஒன்றை மட்டும் மாற்ற முடியுமா என நான் தயக்கமாக கேட்டபோது, அதற்கென்ன புது மெட்டு போட்டுவிடலாம் எனக் கூறும் அளவுக்கு இயல்பாகவும் தயாராகவும் இருந்தார்,” என்கிறார் கிருத்திகா.
ரெட் ஜெயன்ட் நிறுவனம்தான் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தைத் தயாரிக்கிறது.
ரகுமானின் ஐந்து பாடல்களும் ஒவ்வொரு வகையில் கொண்டாட்ட அனுபவங்களைத் தரும் என்று சொல்பவர், ரகுமானைப் போன்ற அருமையான இசையமைப்பாளருடன் பணியாற்றியதை தம் வாழ்வின் ஆகச்சிறந்த அனுபவம் என்கிறார்.
இவரது மகன் இன்பநிதிக்கு 20 வயதாகப் போகிறது. அவருக்கும் வித்தியாசமான படைப்புகளின் மீது மிகுந்த ஆர்வம் உண்டாம்.
தொடர்புடைய செய்திகள்
“என் மகன் தன் பெற்றோரைப் பார்த்துக்கொண்டுதான் வாழ்கிறார். அவர் என்னவாக உருவாக வேண்டும் என்பது அவரது தனிப்பட்ட விருப்பம்.
“இதைத்தவிர தனியாக இருந்தாலும் உழைப்பு, தனிப்பட்ட கவனம், விடாமுயற்சி ஆகியவைதான் முக்கியம் என்று நானும் உதயும் அறிவுரை கூறியுள்ளோம். சினிமாவில் நடிப்பது தொடர்பான முடிவையும் அவரிடமே விட்டுவிட்டோம்,” என்கிறார் கிருத்திகா.
‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் கதை?
“ஆண், பெண் இருவருக்குமான தேவைகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. இதன் காரணமாக அவர்களுக்கு இடையே உள்ள உறவும் மாறி வருகிறது. அதற்கேற்றபடி நாமும் மாறிக்கொண்டால்தான் நல்லது.
“இதுவரை காதலின் வகைகள் பலவிதமாக மாறிவிட்டன. ஆனால் எந்த தலைமுறை காதல் என்றாலும் அதன் அடிப்படை உணர்வுகள் மாறாமல் இருப்பதுதான் உண்மை. இதை ஆண், பெண் என இரு பாலரும் உணர்ந்துகொண்டால் நல்லது. இதை எல்லாம் இன்னும் தெளிவாகப் பேசும் படமாக இது உருவாகி உள்ளது,” என்கிறார் கிருத்திகா.
நல்ல படைப்புகள் வந்தால் நிச்சயமாக ரசிகர்களால் வரவேற்கப்படும் என்று குறிப்பிடுபவர், திரையுலகில் இதுவரை மாறாத அம்சம் இதுதான் என்கிறார்.
“தனக்கென்று எதையும் சுருட்டி வைத்துக்கொள்வது காதல் அல்ல. உள்ளங்கையில் வைத்து மூடிக்கொண்டு ‘தப்ப முடியாது’ என்பதும் அல்ல. நம்பிக்கையூட்டும் காதலே நம்மை நமக்குள் வியக்க வைக்கும். வாழ்வதற்கு மனசுதான் முக்கியம். அது குறித்தும் இந்தப்படம் அலசும்.
“எப்படிப் பார்த்தாலும் இந்த உலகம் அன்பால் நிரம்பிய ஒன்று. காதல் என்பது பேசும் விஷயம் அல்ல, அது மனதால் உணரக்கூடியது. நம்மை கனவுலகில் நிறுத்தி அழகு பார்ப்பது. இருவரின் ரசனைகளுக்கும் விருப்பங்களுக்கும் எந்தவிதமான சேதாரமும் இல்லாமல் பார்த்துக்கொள்ளும்.
“சுயத்தை அழித்துக்கொள்ளாமல், அவரவர் தனித்தன்மையை விட்டுத்தராமல், சம்பந்தப்பட்ட இருவரும் அவரவராக இருப்பதே காதலுக்கு நல்லதாகிறது.
“இவ்வாறு ஒருவரையொருவர் புரிந்துகொள்வதையும் நம்பிக்கை வளர்ப்பதையும் இந்தப்படம் விரிவாகப் பேசும்,” என்கிறார் கிருத்திகா.