தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
கவிஞர் கண்ணதாசனின் கவிச்சுவை (17)

கல்வியா செல்வமா வீரமா

3 mins read
5f94bdde-37d7-4908-9ffc-6d29a231d548
‘சரஸ்வதி சபதம்’ படத்திலிருந்து ஒரு காட்சி. - படம்: ஊடகம்
multi-img1 of 4

கவிஞர் கண்ணதாசன் எந்த அளவுக்கு மக்களுக்கு அறிவுரை கூறுவாரோ அந்த அளவுக்கு எதிரெதிர் கருத்துகளை மோதவிட்டு, பின்னர் அவற்றுக்கு இடையே சமநிலைகண்டு மகிழ்வார்.

இப்படித்தான், ‘பழநி’ படத்தில் வரும் ‘அண்ணன் என்னடா தம்பி என்னடா’ என்ற பாடலில், ‘யாராயிருந்தாலும் பகைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும் அண்ணன் தம்பிகள் தானடா’ எனப் பாடலை முடித்தார்.

அதேபோல், ‘படிக்காத மேதை’ படத்தில், ‘சொந்தம் என்று வந்தெல்லாம் சொந்தமுமில்லை, ஒரு துணையில்லாமல் வந்தெல்லாம் பாரமுமில்லை, நன்றியுள்ள உயிர்கள் எல்லாம் பிள்ளைதானடா..’ என்று ஒருவருக்கு யார் பிள்ளை, யார் பிள்ளை இல்லை என்ற கேள்விக்குப் பாடல் வரிகள் மூலம் பதில் கூறினார்.

1966ஆம் ஆண்டு வெளிவந்த ‘சரஸ்வதி சபதம்’ படத்தின் கதை, வாழ்க்கைக்குக் கல்வி, செல்வம், வீரம் இவற்றில் எது முக்கியம் என்ற சர்ச்சையில் கலைமகளான சரஸ்வதி, அலைமகளான லட்சுமி, மலைமகளான பார்வதி மூவரும் போட்டி போடுகின்றனர்.

மூவரும் தங்கள் எண்ணப்படி ஒருவரை உருவாக்குகின்றனர். அதன்படி, சரஸ்வதி வாய் பேச முடியாத ஒருவரைக் கல்விமானாகவும், லட்சுமி பிச்சை எடுத்துப் பிழைக்கும் ஒரு பெண்ணை ராணியாகவும், பார்வதி கோழையான ஒருவரை வீரனாக மாற்றியும் தங்கள் கருத்துக்கு ஏற்றவாறு அவர்களைச் செயல்பட வைக்கின்றனர்.

இந்த சர்ச்சையைத் தூண்டிவிட்ட நாரதர் பாடுவதாக வரும் ஒரு பாடலில்தான் கவிஞர் தமது சொல்வரிசையைக் காட்டுகிறார்.

அதிலும், படத்தில் நாரதராக வேடமிட்டு வரும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சரஸ்வதி, லட்சுமி, பார்வதி என மூவரிடமும் அவரவர்க்குத் தகுந்தாற்போல் கல்வி, செல்வம், வீரம் மூன்றையும் உயர்த்திப் பேசுவதைக் கேட்டு கேட்டு சிரிப்பில் மூழ்கலாம். பின்னர், தமது கூற்றுப்போல் மூன்றையும் சிறப்பித்துப் பாடும் பாடல்தான்,

“கல்வியா செல்வமா வீரமா அன்னையா தந்தையா தெய்வமா ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா கல்வியா செல்வமா வீரமா...”

என மூன்றுமே அன்னை, தந்தை, தெய்வம் போன்றது, பிரிக்க முடியாதது என்கிறார். இதில் எவர் ஒருவரையும் விட்டுவிட முடியாது.

அடுத்து,

“கற்றோர்க்கு பொருள் இன்றிப் பசி தீருமா பொருள் பெற்றோர்க்கு அறிவின்றிப் புகழ் சேருமா கற்றாலும் பெற்றாலும் பலமாகுமா வீரம் காணாத வாழ்வென்றும் வாழ்வாகுமா,”

என்று நடைமுறை வாழ்க்கையை எடுத்துக்காட்டுகிறார்.

பின்னர் எப்படி ஏதேனும் ஒன்று மட்டும் இருக்கப் பெற்றோரின் திண்டாட்டம் பற்றி கூறும் கவிஞர்,

“படித்தவன் கருத்தெல்லாம் சபை ஏறுமா பொருள் படைத்தவன் கருத்தானால் சபை மீறுமா படித்தவன் படைத்தவன் யாராயினும் பலம் படைத்திருந்தால் அவனுக்கு இணையாகுமா,”

என ஒருவனுக்கு மூன்றும் இன்றியமையாதது என்பதைப் புரிய வைக்கிறார்.

அதைத் தொடர்ந்து எப்படி ஒன்று மற்ற இரண்டுடன் இணைந்தே இருப்பது, பிரிக்க முடியாதது என்பதை விளக்க,

“ஒன்றுக்குள் ஒன்றாகக் கருவானது அது ஒன்றினில் ஒன்றாகப் பொருளானது ஒன்றை ஒன்று பகைத்தால் உயர்வேது மூன்றும் ஓரிடத்தில் இருந்தால் நிகரேது”

என்றும்

“மூன்று தலைமுறைக்கும் நிதி வேண்டுமா காலம் முற்றும் புகழ் வளர்க்கும் மதி வேண்டுமா தோன்றும் பகை நடுங்கும் பலம் வேண்டுமா இவை மூன்றும் துணையிருக்கும் நலம் வேண்டுமா”

என்றும் மூன்றுமே அவசியம் என்று சமநிலைப்படுத்துகிறார்.

இந்த மூன்றும் அனைவர்க்கும் இருக்கும் என்று சொல்வதற்கில்லை. ஆனால், அதற்காக கவிஞர் ஒன்றை உயர்த்தி மற்ற இரண்டையும் தாழ்த்த முனையவில்லை.

அறிவுத்திறன், செல்வம், வீரம் மூன்றுமே ஒன்றுக்கு ஒன்று சளைத்ததல்ல என்று முடிக்கிறார் கவிஞர் கண்ணதாசன்.

இந்தப் பாடலும் பாடல் அமைந்த காட்சியும் கண்ணையும் உள்ளத்தையும் கவரும்வகையில் அமைந்துள்ளன.

குறிப்புச் சொற்கள்