தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எனது எதிர்பார்ப்பை விடவும் கல்யாணி சாதித்துவிட்டார்: துல்கர் சல்மான்

2 mins read
34b487d0-ce85-47c4-8cb0-81a7c38536de
கல்யாணி பிரியதர்ஷன். - படம்: ஊடகம்
multi-img1 of 2

நடிகர் துல்கர் சல்மான் தயாரிப்பில் டொம்னிக் இயக்கத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ள ‘லோகா: சாப்டர் 1’ படம் உலக அளவில் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நாயகர்களில் ஒருவராக வலம் வரும் துல்கர் சல்மான் தமிழ், தெலுங்கு எனத் தொடர்ந்து மற்ற மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார்.

இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்துள்ள படம் ‘லக்கி பாஸ்கர்’.

இந்நிலையில், கடந்த வாரம் இவரது தயாரிப்பில் வெளியான ‘லோகா’ படம் ரூ.100 கோடி வசூலித்துள்ளதை ஒட்டிப் படக்குழுவினர் பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று நன்றி தெரிவித்து வருகின்றனர்.

சென்னையில் நடந்த விழாவில் துல்கர் பேசியபோது, “லோகா: சாப்டர் 1’ வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. அடுத்து ஐந்து பாகங்களாக இந்தப் படத்தை எடுப்பதற்குத் திட்டமிட்டுள்ளோம்.

“லோகா படத்தில் கல்யாணி நான் நினைத்ததை விடவும் நடிப்பில் சாதித்துக் காட்டியிருக்கிறார்.

“குத்துச் சண்டை உள்ளிட்ட பல பயிற்சிகளைக் கற்றுக்கொண்டார். உண்மையிலேயே அவர் ஒரு லேடி சூப்பர் ஹீரோதான்,” எனப் பாராட்டியுள்ளார் துல்கர் சல்மான்.

“நல்ல படங்களுக்குத் தமிழக ரசிகர்கள் தொடர்ச்சியாக ஆதரவு தந்து வருகிறார்கள். விரைவில் படக்குழுவுக்கு பரிசுகள் அளிக்க உள்ளேன். அப்பா மம்முட்டி நலமாக இருக்கிறார்,” என்றார்.

கல்யாணி பிரியதர்ஷன் பேசுகையில், “நான் சண்டைக் காட்சிகள் கொண்ட படத்தில் நடிக்கப் போகிறேன் என்றவுடன், எனது அப்பா பிரியதர்ஷன் “உனது கை, கால் பத்திரம்” என்றார். படம் இந்தளவுக்கு பெரிய வெற்றி பெறும் என நான் எதிர்பார்க்கவில்லை.

“சூர்யா, ஜோதிகா ஆகியோர் காணொளி வழி வாழ்த்தினார்கள். பெண்ணை மையமாகக் கொண்ட படம் தென்னிந்தியாவில் ரூ.100 கோடி வசூலித்து இருப்பது இதுவே முதன் முறை என்கிறார்கள். இதைக் கேட்கும்போது அவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது,” என்றார்.

நாயகன் நஸ்லனும் தமிழக மக்களுக்கு நன்றி கூறினார்.

கேரளத்தில் பெருமளவில் கொண்டாடப்பட்ட சினிமா குடும்பத்தைச் சேர்ந்தவர் கல்யாணி பிரியதர்ஷன். இவரது தந்தை பிரியதர்ஷன், நடிகர்கள் மோகன்லால், மம்முட்டியை இயக்கி வெற்றிப்படங்களைக் கொடுத்தவர். தாய் லிஸ்ஸி லக்ஷ்மி தமிழ், மலையாளத் திரையுலகில் புகழ்பெற்ற நடிகை.

நியூயார்க்கில் கல்யாணி கட்டடக்கலை வடிவமைப்பாளராகப் பட்டம் பெற்றவர்.

2017ல் தனது 24 வயதில் ‘ஹலோ’ என்ற தெலுங்குப் படம் மூலம் நடிப்பில் காலடி எடுத்து வைத்த கல்யாணி, சிறந்த அறிமுகத்துக்கான ஃபிலிம் ஃபேர் விருதை வென்றார்.

தமிழில் அவர் நடித்த ‘ஹீரோ’ திரைப்படம் போதுமான வரவேற்பைப் பெறவில்லை என்றாலும், ‘மாநாடு’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.

மலையாளத்தில் கல்யாணியின் முதல் படம் ‘வரனே அவஷ்யமுண்ட்’. துல்கர் சல்மான் தயாரிப்பில் துல்கருடன் இணைந்து நடித்திருந்தார் கல்யாணி.

குறிப்புச் சொற்கள்