’லோகா’ மலையாளப் படத்தின் வெற்றியை அடுத்து, நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாகத் தேர்வு செய்கிறார் கல்யாணி பிரியதர்ஷன்.
தமிழில் ‘டாணாகாரன்’ படத்தைத் தயாரித்த நிறுவனத்தின் புதுப் படத்தில், அறிமுக இயக்குநர் திரவியம் இயக்கத்தில் தற்போது நடித்து வருகிறார் கல்யாணி.
மேலும், கார்த்தி ஜோடியாக ‘மார்ஷல்’ படத்தில் நடிக்கிறார். இது தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும், இந்தி உட்பட பிற மொழிகளிலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
என்னதான் ‘லோகா’ பட வெற்றி மூலம் இந்திய அளவில் பேசப்படும் நடிகையாகிவிட்டாலும், தாய்மொழி மீதான பற்றின் காரணமாக மலையாளப் படங்களில் நடிக்க முன்னுரிமை அளிக்கிறார் கல்யாணி.
இதனிடையே, ‘டியூட்’ படத்தை அடுத்து, தனது பாணியில் ஒரு படத்தை இயக்கி அதில் நடிக்கவும் முடிவு செய்துள்ளார் பிரதீப் ரங்கநாதன்.
இந்தப் படத்தில் கல்யாணி கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகுமாம். எனினும், இதில் சண்டைக் காட்சிகளிலும் அவர் கவனம் செலுத்துவார் எனக் கூறப்படுகிறது.
பிரதீப் படம் என்பதால் எந்த கேள்வியும் இன்றி கால்ஷீட்டை அள்ளிக் கொடுக்கத் தயாராக உள்ளார் கல்யாணி. ஆனால், கோடம்பாக்கத்து விவரப்புள்ளிகள் சிலர் இதை மறுக்கின்றனர்.
பிரதீப் ரங்கநாதன் படத்தின் நாயகி யார் என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. அதனால் இது வெறும் கட்டுக்கதை என்று கூறுகின்றனர்.
சண்டைக் காட்சிகள் நிறைந்த படத்தில் பிரதீப், கல்யாணி ஜோடிப்பொருத்தம் பிரமாதமாக இருக்கும் என்றும் இன்னொரு தரப்பு சொல்லிக்கொண்டு இருக்கிறது.

